திடிரென தோன்றிய ஒரு குழுவினர் முஸ்லிம் சமூகத்தினை காட்டிக்கொடுக்கும் முயற்சியில்: ஹக்கீம்
தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விசேட அறிக்கையொன்றினை சமர்ப்பித்துள்ளார். இந்த பள்ளிவாசல் விடயம்
தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றவிருந்தார். எனினும் குறித்த உரைக்கு பிரதி சபாநாயகர் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் நிலையியற் கட்டளை 23(2)க்கு அமைய பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம் தெரிவித்து தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் விசேட உரையொன்றினை நிகழ்த்தினார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தம்புள்ள பள்ளவாசல் தொடர்பில் நேற்று வெளியான ஆங்கிலப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த செய்தி காரணமாக முஸ்லிம் ஆழ்ந்த குழப்பத்தில் உள்ளனர். சிறுபான்மையினரின் மத வழிபாட்டு உரிமையினை மதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டில் சகிப்புத் தன்மையும் சகவாழ்வு முக்கியமாக கருதப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் குறித்த பள்ளிவாசல் பிரச்சினையினை அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இணக்கமொன்றினை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இப்படியான நிலையில் திடிரென தோன்றிய ஒரு குழுவினர் தம்புள்ள பள்ளிவாசல் விடயத்தில் தலையிட்டு முஸ்லிம் சமூகத்தினை காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யார் என்று தெரியாத இந்த குழுவினரின் பின்னணியில் உள்ளவர்களை புத்தசாசன சமய விவகார அமைச்சு வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இவர்கள் வக்பு சபை, ஜம்இய்யதுல் உலமா மற்றும் இளைஞர் குழுவின் பிரதிநிதிகள் குழுவின் என தெரிவிக்கின்றனர். எனினும் இவர்களுக்கு அதிகாரமளித்தது யார் என்று தெரியாதுள்ளது. இந்த அதிகாரமற்றவர்களுடன் பேச்சு நடத்த தம்புள்ள ரன்கிரி விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரர் எவ்வாறு முன்வந்தார் என்பதும் ஆச்சரியமாக உள்ளது.
இந்த பள்ளிவாசல் விடயத்தில் நீதியானதும் நியாயமனதுமான தீர்வு கிடைக்க வேண்டும். இப்படியான நிலையில் சிலர் இதனை இருளடைய முயற்சிக்கின்றனர். குறித்த பள்ளிவாசல் விடயத்தில் புத்தசாசன சமய விவகார அமைச்சரான பிரதமர் முன்வந்து நியாயமான தீர்வின் மூலம் இணக்கமொன்றை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
தம்புள்ள மஸ்ஜித் தொடர்பில் டெய்லி மிரர் ஆங்கில நாளிதழ் வெளியாகியிருந்த செய்தி
தம்புள்ள தொழுகை நிலையத்தை அகற்ற முஸ்லிம்கள் முடிவு என்ற தலைப்பில் இன்றைய டெய்லி மிரர் ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தம்புள்ள பள்ளிவாயல் விவகாரத்தில் அண்மையில் தலையிட்டுள்ள ஜனாதிபதிக்கு நெருக்கமான இஸ்லாமிய ஆலோசகர் கலீல் மௌலவியை மேற்கோள் காட்டியே இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தம்புள்ள பள்ளியை அகற்றியே ஆகுவேன் என்று சூளுரைத்திருக்கும் ரங்கிரி தம்புளு ரஜமஹா விகாரையின் பிரதம மதகுரு இனமலுவ சுமங்கள தேரரை சந்தித்த மூன்று முஸ்லிம் அமைப்புகள் இம்முடிவுக்கு இணங்கியதாக கலீல் மௌலவி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய வக்பு சபை, உலமா சபை மற்றும் முஸ்லிம் இளைஞர் நிறுவனம் ஆகிய மூன்று அமைப்புகளும் இந்த முடிவுக்கு இணங்கியுள்ளதாகவும், தொழுகையின் பின்னர் பள்ளிவாயலின் கூரைத்தகடுகள் அகற்றப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேற்குறித்த மூன்று அமைப்புகளைச் சேர்ந்த டாக்டர். NMM. இக்பால், முகம்மத் நியாஸ், முஹம்மத் பைசல் மற்றும் கலீல் மௌலவி ஆகியோர் சுமங்கள தேரரை சந்தித்து இவ்விடயம் தொடர்பான முஸ்லிம்களின் நிலைப்பாட்டை விளக்கியதுடன் பள்ளிவாயலுக்கு பொருத்தமான நிலம் ஒன்றைக் கோரினர்.
சுமங்கள தேரர் இதற்கு பௌத்தசாசன சட்டத்தின் கீழ் இவ்வாறு நிலத்தை வழங்க எவ்வித ஏற்பாடும் இல்லை எனினும், பள்ளிவாயல் அமைப்பதற்காக வேறொரு இடத்தை வழங்கவும் அதற்கு சந்தோஷமாக அடிக்கல் நாட்டவும் தான் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். புனிதப் பிரதேசத்துக்கு வெளியில் பள்ளிவாயலை அமைப்பதில் எவ்வித தடையும் இல்லை என்று குறிப்பிட்டா தேரர். முஸ்லிம் மக்களுக்கு இந்தத் தீர்மானம் பற்றி தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொண்டார் என்று அந்தச் செய்தி கூறுகிறது.
No comments