Breaking News

ஒரு கல்லும், மூன்று மாங்காய்களும்

"அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா" என்பது கவுண்டமணியின் பிரபல்யமான நகைச்சுவை வசனமாகும். எதுவெல்லாம் சகஜம் என்று கேட்கக் கூடாது. நிகழக் கூடாதவை எதுவெல்லாம் நிகழ்கிறதோ அதுவெல்லாம் அங்கு சகஜம் என்று ஆகிவிடும்.

clip_image001'அதற்காக, இதுவெல்லாமா சகஜம் என்று ஆகிவிடும்' என்று நீங்கள் கேட்க நினைப்பவற்றில் ஏராளமானவை, ஏற்கனவே அரசியலில் சகஜங்களாகிப் போன விடயங்களாகி விட்டன. 'பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும்' என்று முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீரலி வேண்டுகோளொன்றினை முன்வைத்ததாக அண்மையில் ஊடகங்களில் ஒரு செய்தியைக் காண நேர்ந்தது.

ஏறாவூரில் கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது, அமீரலி இந்த வேண்கோளினை விடுத்திருந்தார். அந்த நிகழ்வில் மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமும் கலந்துகொண்டார். அமீரலி - அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சிக்காரர். ஆனால், இவரின் அரசியல் நுழைவு 2004ஆம் ஆண்டு மு.காங்கிரசினூடாகவே நிகழ்ந்தது.

அந்த வருடம் நடைபெற்ற பொதுத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அமீரலி பாராளுமன்ற உறுப்பினரானார்.ஆயினும், ஒரு வருடத்துக்குள் - மு.கா. தலைவரோடு அமீரலி முரண்பட்டுக் கொண்டார். முஸ்லிம் காங்கிரசின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த றிசாத் பதியுத்தீன், நஜீப் ஏ மஜீத் ஆகியோருடன் கட்சியை விட்டும் பிரிந்து சென்றார்.

அப்படியே, அவரின் பதவிக் காலத்தில் ஆட்சிக்கு வந்த அரசுகளிலெல்லாம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றெடுத்தார். அ.இ.மு.காங்கிரஸ் எனும் கட்சியை றிசாத் பதியுத்தீனோடு இணைந்து உருவாக்கினார் - என்பதெல்லாம் நாமறிந்த பழைய கதைகளாகும். அமீரலி அமைச்சராக இருந்த காலங்களில் மு.காங்கிரசையும், அதன் தலைமைத்துவத்தினையும் மிக மோசமாக விமர்சித்தார். மு.கா. தலைவரை 'குமாரி' என்கிற ஒரு பெண்ணோடு தொடர்புபடுத்தி – எக்கச்சக்கமான கதைகளை அரசியல் அரங்குக்கும் அதற்கு வெளியிலும் பரப்பி விட்டவர்களில் அமீரலி பிரதானமானவராவார்.

இந்த நிலையில், அமீரலி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிலைச் சின்னம் சார்பாக போட்டியிட்டு தோற்றுப் போனார். இரண்டாம் முறை எம்.பி.யாகும் அமீரலியின் கனவு 2010 ஆம் ஆண்டு தகர்ந்து போனது. இதனையடுத்து, அமீரலி - அரசியலில் பதவிகளெதுவுமற்ற பூச்சியமனார். இதனைக் கருத்திற் கொண்ட அமைச்சர் றிசாத் பதியுத்தீன், தன்னுடைய அமைச்சின் கீழிருந்த நிறுவனமொன்றின் தலைவராக அமீரலியை நியமித்தார்.

இவ்வாறானதொரு நிலையில்தான் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடந்தது. முதலமைச்சர் கனவோடு, வெற்றிலைச் சின்னத்தில் அமீரலி – அந்தத் தேர்தலில் களமிறங்கி வெற்றியீட்டினார். ஆனால், பரிதாபம். அமீரலியின் முதலமைச்சர் கனவு நிறைவேறவில்லை. யாரும் எதிர்பாராத விதமாக, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டார்.

இதுவும் தெரிந்த கதையாயிற்றே. பிறகெதற்கு 'றிப்பீட்'டு என்று யாரும் கேட்கக்கூடாது. இனிவரும் கதையை விளங்கிக் கொள்வதற்கு இந்தப் பின்னணிக் கதை - தேவையாக இருக்கிறது. கிழக்கு மாகாணசபையில் ஐ.ம.சு.முன்னணி ஆட்சியமைப்பதற்கு மு.காங்கிரஸ் ஆதரவு வழங்கி வருகிறது. இந்த ஆதரவுக்குப் பகரமாக ஆட்சியாளர்களிடம் மு.கா. சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

clip_image002அவற்றில் ஒன்று – கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆட்சிக் காலத்தினை இரண்டாகப் பிரித்து, அதில் ஒரு பகுதிக்கான முதலமைச்சராக மு.கா. பிரேரிக்கும் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதாகும். 'இந்த நிபந்தனையினை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அந்தவகையில், முதல் இரண்டரை வருடங்களுக்கு ஆளுந்தரப்பைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டரை வருடங்களுக்கு தமது கட்சி சார்பான ஆள் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்' என்று மு.கா. கூறிவருகிறது. இதுவும் நமக்குத் தெரிந்த கதைதான்.

இந்த நிலையில், அண்மைக் காலமாக கிழக்கு மாகாணசபையை குறித்து, அதன் உறுப்பினர் அமீரலி, கூறிவரும் சில விடயங்கள் அவதானத்துக்குரியவையாக உள்ளன. உதாரணத்துக்கு அவர் தெரிவித்த இரண்டு கருத்துக்கள் இவை:

1.கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்து விட்டுள்ளோம். இதனால் கிழக்கு மாகாண அரசியலில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடிய சாத்திக்கூறுகள் நிலவுகின்றன. கிழக்கு மாகாண சபையில் ஏற்படும் மாற்றம் தேசிய அரசியலையும் பாதிக்கலாம். (14 ஏப்ரல் 2013 அன்று ஓட்டமாவடியில் வைத்து...)
2.கிழக்கு மாகாணசபையானது அதிகாரிகளைப் பழிவாங்குகின்ற இடமாக மாறிவிடுமோ என்கிற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது. (02 மே 2014 அன்று ஓட்டமாவடியில் வைத்து...)

கிழக்கு மாகாணசபையானது ஐ.ம.சு.முன்னணியின் ஆட்சியின் கீழ் உள்ளது. அமீரலி - ஐ.ம.சு.முன்னணியின் சார்பில் போட்டியிட்டு, கிழக்கு மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள ஓர் உறுப்பினர். இவ்வாறானதொரு நிலையில், தான் சார்த்த கட்சியின் ஆட்சியினையே அமீரலி ஏன் இப்படி மோசமாகத் திட்டித் தீர்க்கிறார் என்கிற கேள்ளி எழுகிறதல்லவா?

அமீரலியின் இந்த கூற்றுக்கள் ஒருபக்கம் இருக்க, இதற்கிடையில் இன்னுமொரு விடயத்தையும் இங்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மேல் மாகாணசபைக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றதல்லவா? அந்தத் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரஸ் கட்சியானது முதன் முதலாகத் தனித்துப் போட்டியிட்டது.

"இவ்வளவு காலமும், ஆளும் ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் இணைந்து போட்டியிட்ட நீங்கள், இப்போது ஏன் தனித்துப் போட்டியிடுகிறீர்கள்" என்று அமைச்சர் றிசாத் பதியுத்தீனிடம் கேட்கப்பட்டது. அதற்கு றிசாத் கூறிய பதில் இங்கு குறிப்பிடத்தக்கது. "கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அமீர் அலியை நியமிக்கும்படி நாம் ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், எமது கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டு, நஜீப் ஏ. மஜீதுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.

முதலமைச்சர் விவகாரம் தொடர்பில், அமைச்சர்களான பஷில் ராஜபக்ஷ, டலஸ் அலகபெரும ஆகியோரிடம் பல முறை பேசினோம். எந்தப் பலனும் கிடைக்கவில்லை. முதலமைச்சர் பதவிக்கு பதிலாக, அமீர் அலியை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக்கி – பிரதியமைச்சர் பதவியொன்றும் வழங்கப்படும் என அதன்போது எமக்கு உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், அந்த வாக்குறுதியினை, ஆட்சியாளர்கள் இன்றுவரை நிறைவேற்றவில்லை. அதன் காரணமாகவே, மேல் மாகாணசபைத் தேர்தலில் நாம் தனித்துப் போட்டியிடுகின்றோம்" என்று றிசாத் கூறினார். மேல் மாகாணசபையில் றிசாத் தனித்துப் போட்டியிட்டமைக்காக சொல்லப்பட்ட இந்தக் காரணமானது வெறும் சொதப்பலாகும்.

அமைச்சர் றிசாத்துடைய கட்சி தனித்துக் களமிறங்கியமைக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும், அமீரலியை கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஆட்சியாளர்கள் நியமிக்கவில்லை என்கிற விசனம் அமீரலிக்கும், அவருடைய கட்சியின் தலைவர் றிசாத்துக்கும் ஆறாத காயமாக இருக்கிறது என்பது உண்மையாகும்.

clip_image003ஆக, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியையும் தராமல், அதற்குப் பதிலாய் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியுடன் கூடிய பிரதியமைச்சுப் பதவியையும் தராமல் தன்னை ஏமாற்றி வரும் ஆட்சியாளர்களுக்கு - ஒரு பாடம் புகட்டியே ஆக வேண்டும் எனும் ஆத்திரத்தில் இருக்கின்றார் அமீரலி.

மட்டுமல்ல, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை எப்படியாவது பெற்றுக் கொள்வதெனும் திட்டமொன்றினை, அமீர் அலி போட்டு வைத்துள்ளதாகவும், அதை நோக்கி அவர் நகர்ந்து வருவதாகவும் அரசியல் அரங்கில் மிக வெளிப்படையாகவே பேசப்பட்டு வருகிறது. ஐ.ம.சு.முன்னணியில் இருந்து கொண்டு, கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெறுவதென்பது லேசுப்பட்ட காரியமல்ல என்பதை அமீர் அலி அறிவார்.

எனவே, இதற்கு மாற்றுவழி, மு.காங்கிரசில் இணைவதாகும். அப்படி இணைந்து கொண்டால், மு.காங்கிரசுக்கு இரண்டரை வருடங்களுக்கென கிடைக்கும் முதலமைச்சர் பதவியை, அப்படியே கையகப்படுத்தி விடலாம் என்பது அவரின் கனவாகும் என்று கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக் கொண்டுதான், கிழக்கு மாகாணசபையின் ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் அமீரலி – விமர்சித்து வருகின்றார்.

இன்னொருபுறம், மு.காங்கிரசின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபிஸ் நஸீருடன் அமீர் அலி ரகசியச் சந்திப்புக்களை நடத்தியதாகவும், இதன்போது மு.காங்கிரசில் இணைவது குறித்துப் பேசப்பட்டதாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில்தான் - பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டுமென்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் அமீர் அலி கோரிக்கை விடுத்திருக்கின்றார். "உண்மையில், இது பொதுவானதொரு கோரிக்கையல்ல. முஸ்லிம் காங்கிரசில் இணைவதற்கு தான் தயாராக இருப்பதை மு.கா. தலைவருக்கு அமீர் அலி தெரியப்படுத்தும் சமிக்சையாகவே இதனை நான் பார்க்கின்றேன்" என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியொருவர் கூறுகின்றார்.

அமீரலியின் இந்த சமிக்சை குறித்து மு.கா. தலைர் ஹக்கீமும் மிக நன்கு அறிவார். ஆனாலும் அமீரலி விவகாரத்தில் ஹக்கீம் - எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற வகையில் இனி முடிவுகளை எடுப்பாரென நம்ப முடியாது. அமீரலி விடயத்தில் ஹக்கீம் சூடுகண்ட பூனை. 'குமாரி' எனும் விவகாரத்தில் தன்னை மிக மோசமாக அவமானப்படுத்தியவர்களில் அமீர் அலியும் ஒருவர் என்பதை ஹக்கீம் மறந்திருக்க மாட்டார்.

clip_image004எனவேதான், அமீர் அலிக்கு பிடிகொடுக்காத வகையில் அந்தக் கூட்டத்திலேயே ஹக்கீம் ஒரு பதிலைக் கூறினார். அதாவது, 'ஸ்ரீ.மு.காங்கிரசின் கல்குடா தொகுதி ஆதரவாளர்களைக் கலந்தாலோசிக்காமல் மு.கா. தலைவர் எந்த முடிவுக்கும் வரமாட்டார் என்பதை இந்த இடத்தில் நான் உறுதியாகச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். ஏனென்றால் கல்குடாத் தொகுதி மு.கா. ஆதரவாளர்கள் ஏற்கெனவே பல தடவை நொந்து போனவர்களாவர்'. அமீர் அலி - கல்குடா தொகுதிக்காரர் என்பது இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

இது இவ்வாறிருக்க, அமீரலியை மு.காங்கிரசுக்குள் எடுத்து, கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொடுப்பதில் மு.கா.வின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட் முனைப்புக் காட்டி வருவதாகவும் பேசப்படுகிறது. ஹாபிஸ் நஸீர் அஹமட் ஏறாவூர்க்காரர். மு.கா.வின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தும் ஏறாவூரைச் சேர்ந்தவர். இந்த இருவரும் பேசிக் கதைத்துக் கொண்டாலும், உள்ளுக்குள் பாம்பும் கீரியும் போலானவர்கள் என்று கூறப்படுவதுண்டு.

அடுத்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு எம்.பி.யாக வேண்டும் என்பது ஹாபிஸ் நஸீரின் கனவு. இதற்கு பசீர் சேகுதாவூத்துடைய ஆரவு கிடைக்காது. எனவேதான், அமீர் அலியை மு.கா.வுக்குள் சேர்த்தெடுத்து, கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக்க வேண்டுமென ஹாபிஸ் நஸீர் விரும்புகின்றார். அப்படிச் செய்தால், அமீர் அலியின் ஆதரவாளர்களிடமிருந்து ஆகக்குறைந்தது பத்தாயிரம் வாக்குகளை, தன்னால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது ஹாபிஸ் நஸீருடைய கணக்காகும்.

அமீரலியின் ஆதரவாளர்களுடைய வாக்குகள் அடுத்த பொதுத் தேர்தலில் மு.கா.வுக்குக் கிடைக்குமாயின், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹிஸ்புல்லாவால் வெற்றியடைய முடியாது போகும். ஆக, அமீர் அலியை மு.கா.வுக்குள் சேர்த்துக் கொண்டால், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்தி விடலாம் என்கிற கணக்கொன்று இருக்கிறது. இதை மு.கா. தலைவரிடம் ஹாபிஸ் நஸீர் போட்டுக் காட்டுவார். இந்தக் கணக்குக்குள் மூன்றாவது மாங்காயொன்றும் உள்ளது.

ஏறாவூரைச் சேர்ந்த ஹாபிஸ் நஸீர் பொதுத் தேர்தலொன்றில் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றி பெற வேண்டுமாயின், அதே ஊரைச் சேர்ந்த பசீர் சேகுதாவூத் தோற்றே ஆகவேண்டும். அதுவே, அரசியல் விதியாகும். மு.காங்கிரசுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் தலைவலியாக இருப்பவர் ஹிஸ்புல்லா. மு.கா. தலைவருக்கு தலைவலியாக இருப்பவர் அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் என்பதை நாம் அறிவோம்.

எனவே, அமீர் அலியை முஸ்லிம் காங்கிரசுக்குள் சேர்த்துக் கொண்டால், பசீரை கட்சிக்குள் பூச்சியமாக்கி விடலாம் என்கிற சமன்பாடொன்றும் உள்ளது. ஆனால், ஹக்கீம் இதைச் செய்வாரா என்பதுதான் இங்குள்ள பெருத்த கேள்வியாகும். சிலவேளை, ஹாபீஸ் நஸீர் போன்றவர்களின் அழுத்தம் காரணமாகவும், பசீரை மட்டம் தட்டுவதற்காகவும் அமீர் அலியை மு.கா.வுக்குள் ஹக்கீம் சேர்த்துக் கொள்வாராயின், அது நெருப்புக் கொள்ளியால், தலையைச் சொறிந்து கொண்ட கதையாகவே கடைசியில் முடியும்.

இன்னொருபுறம், அமீரலியை மு.கா.வுக்குள் கொண்டுவந்து - கிழக்கு மாகாண முதலமைச்சராக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட்டால், அதை - மு.கா.வின் அம்பாறை மாவட்ட ஆதரவாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிழக்கு மாகாணசபையில் மு.காங்கிரசின் 07 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 04 பேர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் திருகோணமலை மாவட்டத்தவர். மிகுதியானவர் மட்டக்களப்பு மாவட்டத்தவர்.

அந்தவகையில், மு.கா. சார்பில் முதலமைச்சர் பதவி வழங்கப்படுமாயின், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே அது கிடைக்க வேண்டும் என்பதுதான் அந்த மாவட்ட மு.கா. ஆதரவாளர்களின் வாதமாகும். இதேவேளை, அந்தப் பதவியை அம்பாறை மாவட்டத்தில் யாருக்குக் கொடுக்கலாம் என்பதும் விவாதத்துக்குரிய விடயமாக மாறாது. கிழக்கு மாகாணசபையின் அம்பாறை மாவட்டட மு.கா. உறுப்பினர்களில் ஏ.எல். தவம், ஏ.எல்.எம். நஸீர் ஆகியோர் கட்சியில் கனிஷ்டமானவர்கள். இம்முறைதான் மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளனர்.

மற்றையவர் எம்.ஐ.எம். மன்சூர். இவர் தற்போது கிழக்கு மாகாணசபையில் சுகாதார அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். எனவே, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா. உறுப்பினரொருவருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்க வேண்டுமாயின் அதற்கு பொருத்தமானவராக ஏ.எம். ஜெமீல் இருக்கின்றார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இவர் - இரண்டாவது தடவையாகவும் பதவி வகிக்கின்றார். கட்சியிலும் ஓரளவு சிரேஷ்டமானவர். மு.கா.வின் தேசிய இளைஞர் அமைப்பாரளராகவும் ஜெமீல் செயற்பட்டு வருகின்றார். உண்மையில், 'பிரிந்து போயிருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களையும், கட்சிகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றிணைக்க வேண்டும்' என்று அமீர் அலி கோரிக்கை விடுத்திருப்பது வியப்பாக உள்ளது.

கிட்டத்தட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் மு.காங்கிரசில் இணைந்திருந்த ஒரு காலப்பகுதியில் - மு.கா.வை உடைத்துக் கொண்டு, அந்தக் கட்சியிலிருந்து பாய்ந்து சென்றவர்களில் அமீர் அலி பிரதானமானவர். மு.காங்கிரசுக்கு எதிராக அ.இ.மு.காங்கிரஸ் என்கிற ஒரு கட்சியையே அமீர் அலியும் அவரின் சகாக்களும்தான் இணைந்து ஆரம்பித்தார்கள். இவ்வாறான ஒரு நபர் - ஒற்றுமை பற்றியும், மு.காங்கிரசின் தலைமையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றிணைய வேண்டுமென்றும் கூறியதைப் பார்த்து விட்டு, 'அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா' என்று கூறி விட முடியாது என்கிறார் மு.காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பிரமுகரொருவர்.

ஒரே கல்லில் வீழுகின்ற மூன்று மாங்காய்களை விடவும், இலக்கை அடையாமல் குறி தவறி கீழே விழுகின்ற ஒரு கல்லானது, அரசியலில் சிலவேளை பெறுமதியானது என்று சொன்னால், உங்களில் எத்தனை பேர் அதனை மறுப்பீர்கள்?!

-மப்றூக்-

நன்றி : விடிவெள்ளி

No comments