இலங்கை அதிகாரிகள் தமிழ் கற்க பௌத்த அமைப்பு எதிர்ப்பு (BBC)
இலங்கையில் அரச அதிகாரிகள் தமிழ் மொழியை கற்பதை கட்டாயப்படுத்த, அரசு எடுத்துள்ள முடிவை ரத்து செய்யுமாறு கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா கோரியுள்ளது.
"தமது நாடு ஒரு சிங்கள பௌத்த நாடு என்பதை இலங்கை அரசு மறக்கக் கூடாது" என அந்த அமைப்பின் செயலர் கலபொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.
இலங்கையில் பெரும்பாலானவர்கள் சிங்கள மொழியை பயன்படுத்துவதால் அவர்களை தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசு கூற முடியாது என, கொழும்பில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அரசு தனது தீர்மானத்தை ரத்து செய்துவிட்டு, நாட்டில் அனைவரும் சிங்கள மொழியை கற்றுக் கொள்வதை கட்டாயமாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனங்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு அரச அதிகாரிகள் தமிழ் மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என அரசு கூறுவதை ஏற்க முடியாது எனவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
சீனா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் அரச அதிகாரிகள் தமது தாய்மொழியையே பயன்படுத்தி வருகின்றபோது, ஏன் இலங்கையில் மட்டும் ஏன் இவ்வாறான ஒரு சட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசின் முன்னெடுப்பு மூலம் சிங்கள மக்களின் உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
No comments