மெல்லச் சரியும் இராணுவ சர்வதிகாரம்!
(றவூப் ஸெய்ன்)
எகிப்தில் சதிப் புரட்சியினூடாக அதிகாரத்தைக் கைப்பற்றிய இராணுவம் நாட்டை முன் கொண்டு செல்வதில் தடுமாறி நிற்கின்றது. கைதுசெய்யப்பட்ட முர்ஸியையும் அவரது சகாக்களையும் என்ன செய்வது, நாட்டின் பொருளாதாரத்தை எங்ஙனம் கொண்டு செல்வது,தொடராக இடம்பெறும் மக்கள் எதிர்ப்பு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் எப்படிக் காயடிப்பது என்பது குறித்து திணறிக் கொண்டிருக்கின்றது இராணுவ அரசு.
முர்ஸி சமீபத்தில் நீதிமன்ற விசாரணைகளுக்காகக் கொண்டு வரப்பட்டபோது தூரத்தே இருந்து அவரை காட்சிப்படுத்திய ‘வதன்’ தொலைக்காட்சி, முர்ஸி தனது நிலைப்பாட்டில் மிகத் தெளிவாக உள்ளார் என்பதை எகிப்தியர்களுக்கு சொல்லிவிட்டது.
நானே இன்னும் சட்டபூர்வமான ஜனாதிபதி. என் மீதான குற்றச்சாட்டுகள் சட்டவிரோதமானவை என வெற்றியின் குறியீடாக தனது இரண்டு விரல்களையும் சுட்டிய நிலையில் கம்பீரமாகக் காட்சி தந்த முர்ஸி இராணுவத்தின் உளவியலுக்கு அனுப்பும் செய்தி முக்கியமானது. நீண்ட காலமாக,பொதுப்பார்வைக்கு அகப்படாமல் இருந்த ஸீஸி தற்போது மிகுந்த நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் பேசி வருகின்றன.
முர்ஸியைப் பதவி கவிழ்ப்பதற்கு சற்று முன்பதாக சில அமெரிக்க அதிகாரிகள் அவரோடு பேரம் பேசலில் ஈடுபட்டனர். பேரளவில் அவர் ஜனாதிபதியாக இருந்தால் அவருக்கும் அவரைச் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கும் எந்த இடையூறுகளும் ஏற்படாது. ஆட்சியில் அவர்களே இருப்பது போன்ற தோற்றத்தோடு அமெரிக்கா இராணுவத்தோடு சார்ந்து காய்களை நகர்த்தலாம் என்றெல்லாம் பேரம் பேசின. முர்ஸி அதற்குப் பணியவில்லை. தனது உயிர் இருக்கும் வரை அது நடக்காது என்று ஆணித்தரமாக அறிவித்து விட்டார்.
அப்படியாயின் எங்கள் முடிவு இதுதான் என்பதைப் போல ஒபாமாவும் அவரது மத்திய கிழக்கு நேசர்களும் சேர்ந்து முர்ஸியைப் பதவி கவிழ்த்தனர். இராணுவத்தால் அவர் கைதுசெய்யப்பட்டார். சில வாரங்களில் சகோதரத்துவ அமைப்பின் மூத்த தலைவர்கள் பலர் மோசமான முறையில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
முர்ஸி சாதாரணமானவர் அல்ல. அவர் சார்ந்திருக்கும் இயக்கமும் சாதாரணமானதல்ல. 60 வீத மக்கள் ஆதரவைப் பெற்ற முதல் ஜனநாயகத் தலைவர் அவர். அவரைப் பதவி கவிழ்ப்பது எகிப்தில் பெரும் அமளிதுமளியை உருவாக்கும் என்பதை நன்கு அறிந்த சூழ்ச்சிக்காரர்கள் சிறையில் சென்று அவரை சந்தித்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டு அமைச்சர்களின் தலைவர் ஆஷ்டன் உள்ளிட்டு பல அமெரிக்க உயரதிகாரிகள் முர்ஸியையும் கைரத் ஷாதிரையும் சந்தித்து பேரம்பேசலின் இரண்டாம் கட்டத்தைத் துவங்கினர். அவர்களுக்கு கிடைத்த ஒரே பதில் எங்களோடு பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்பதுதான் தான்.
கடந்த நான்கு மாதங்களாக சிறையில் உள்ள முர்ஸியோடு தொடர்ந்தும் இராணுவம் பேரம் பேசி வருகின்றது. அதன் மூலம் அமைதியான வழியில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு சகோதரத்துவ அமைப்பை களத்திலிருந்து ஒதுக்கி விடலாம் என்று அது கனவு காண்கின்றது.
இன்றையை எகிப்தின் நிலையை சரிசெய்ய வேண்டுமாயின் அதற்கான முதல் நிபந்தனை அமைதியான,அரசியல் ஸ்திரப்பாடு கொண்ட எகிப்தை உருவாக்குவதுதான். இராணுவ ஆட்சியால் அரச நிறுவனங்கள் பிளவுபட்டுள்ளன. எங்கும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புப் பேரணிகள் என வெடித்துச் சிதறுகின்றன.
அரச நிருவாகம் சீர்குலைந்துள்ளது. இராணுவ ஆட்சி என்ற விம்பம் வெளிநாட்டு முதலீட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளது. போகும்போக்கில் ஆபிரிக்காவிலேயே கடும் வறிய நாடாக மாறும் ஆபத்து எகிப்துக்கு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
இந்நிலையில் அமைதியை உருவாக்குவது இராணுவம் எதிர் கொண்டுள்ள பெரும் சவாலாகும். எல்லா வேளைகளிலும் மக்கள் மீது துப்பாக்கிகளை பிரயோகிப்பது புத்திசாலித்தனம் அல்ல என்பதை இராணுவம் உணரத் தொடங்கி விட்டது.
சதிப் புரட்சியின் பல்வேறு பங்காளர்கள் இடையே பாரிய பிளவுகளும் உடைவுகளும் ஏற்பட்டுள்ளன. பராதியும் அம்ர் மூஸாவும் ஷபீக்கும் துருவங்களாகி விட்டனர். அவர்கள் இழைத்தது பெரும் அரசியல் தவறு என்பதை நினைத்துப் பார்க்கின்றனர்.
இராணுவ அரசில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீளவும் இராணுவம் சகோதரத்துவ அமைப்போடு பேரம் பேசுவதில் ஈடுபட்டுள்ளதாக மிட்ல் ஈஸ்ட் மொனிடர் தொடர்ந்தும் செய்தி வெளியிட்டு வருகின்றது. முர்ஸியையும் அவரது சகாக்களையும் விடுதலை செய்தால் அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்பதை நாடி பிடித்துப் பார்க்கும் நோக்கில் இராணுவம் அவரோடு பேச முயல்கின்றது. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் ராபிஆ, நஹ்ழா என்பவற்றில் மக்களைக் கொல்வதற்கு துணை நின்ற இராணுவ அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எகிப்தில் இரத்தம் ஓட்டியவர்களோடு எந்த சமரசமும் இல்லை என்பதே முர்ஸியின் முடிவான பதிலாக கிடைத்துள்ளது. இராணுவத்தினரிடையே பாரிய பிளவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர்ந்தும் இவ்வாறு எகிப்தை முன் கொண்டு செல்ல முடியாது என்று இராணுவத்தின் பெரும்பாலானோர் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர்.
சகோதரத்துவ அமைப்பினரையும் அவர்களது ஜனநாயக அமைப்பிலான ஆட்சி முறையையும் ஆதிரிக்கும் பெரும்பாலான இராணுவ அதிகாரிகள் உள்ளனர் என தெரிய வருகின்றது.
இதனாலேயே ஸீஸி சூழ்ச்சிக்காரர்களோடு நிகழ்த்திய பல முக்கிய இரகசிய பேச்சுவார்த்தைகளை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு இந்த இராணுவத அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இவர்களைத் தண்டிப்பதில் ஸீஸிக்கு சில சவால்கள் உள்ளன.
எதிர்த்து நிற்கும் மக்கள் மீது துப்பாக்கிகளை பிரயோகிப்பதை பெரும்பாலான இராணுவத்தினர் நிராகரிக்கின்றனர். ஒரு தொகை இராணுவம் களத்திலிருந்து தப்பி யோடியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இராணுவத்தின் உள்ளே புகைந்து கொண்டிருக்கும் இந்தப் பூசல்கள் வெடித்துச் சிதறாதவாறு ஸீஸி பார்த்துக் கொள்கின்றார். எனினும், அதன் வெடிப்பை தடுத்து நிறுத்த முடியாது.
தற்போது எகிப்திய இராணுவத்துக்கு எதிராக சர்வதேச ரீதியான அழுத்தங்கள் மேற்கிளம்பியுள்ளமை இராணுவம் எதிர்நோக்கும் அடுத்த சவாலாகும். ஜூலையிலிருந்து இன்று வரை ஜனநாயக ஆட்சியை மீள நிலை நாட்டுமாறு கோரி சிவிலியன்கள் நடாத்திய அமைதிப் பேரணிகள் மீது இராணுவம் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் பற்றிய சர்வதேச சட்டவல்லுனர்களின் கவனம் திரும்பியுள்ளது.
ராபிஆ அல் அதவிய்யா, அந் நஹ்ழா, ராம்ஸஸ் ஆகிய இடங்களில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு, கூட்டுப்படு கொலைகள், கைது நடவடிக்கைகள், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோர் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் சித்திரவதைகள் என்பன மனித நேயத்துக்கு எதிரான போர்க் குற்றங்களாகும். இவை குறித்து சர்வதேச நீதிமன்றத்திலும் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திலும் எகிப்திய இராணுவம் விசாரிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச அளவில் வலுத்து வருகின்றது.
சமீபத்தில் லண்டனில் ஒன்று கூடிய பல சர்வதேச சட்ட நிபுணர்கள் எகிப்திய இராணுவத்தை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதில் ஐ.நா மனித உரிமை சிறப்புப் பிரதிநிதி ரிசட் ஃபோல்க்,ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் மைக்கல் மென்ஸ்ஃபீல்ட், பொதுச் சட்டத் துறை அலுவலக பணிப்பாளர் லோட் கென்ட் மெக்டொனால்ட் போன்றோர் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.
எகிப்திய இராணுவத்துக்கு தமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இவர்கள் அறிவித்துள்ளதோடு,எகிப்திய இராணுவத்தினரை போர்க்குற்ற விசாரணைகளுக்கு உள்ளாக்கும் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்து விட்டு இராணுவ சர்வதிகாரத்தை நிலை நாட்டியுள்ள அமெரிக்கப் பேரரசுக்கும் இதுவொரு சவாலாகவே இருக்கப் போகிறது.
இதுவரை பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் சிறைப்பிடிக்கப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாமல் நீதிமன்ற விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை
இச்சட்ட வல்லுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எகிப்திய இராணுவம் நடத்திய தாக்குதல்களைப் பிரதிபலிக்கும் காணொளிகள் தம்வசம் இருப்பதாகவும் எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு எதிரான ஆதாரங்களை தொடர்ந்தும் திரட்டி வருவதாகவும் இவர்கள் அறிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க இரவு நேர ஊரடங்குச் சட்டத்தை நீக்கியுள்ள இராணுவ அரசு ஆர்ப்பாட்டங்களை சட்டபூர்வமற்றதாக்கும் புதிய சட்ட ஏற்பாடொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மக்கள் எதிர்ப்பே இராணுவத்தின் சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளபோதும் சட்டத்தால் மக்கள் எதிர்ப்பை எவ்வளவு தூரம் கட்டுப்படுத்தலாம் என்பது பற்றி இராணுவம் கொண்டுள்ள மனப் பதிவையே இப்புதிய அணுகுமுறை புலப்படுத்துவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
எகிப்தியர்களின் பலத்தை துப்பாக்கிகளாலும் குண்டுகளாலும் பணிய வைக்கும் இராணுவ நடவடிக்கை இதற்கு மேல் பழிக்கப் போவதில்லை. சிறையிலுள்ள இஸ்லாமியத் தலைவர்களோடு இராணுவம் நடத்தி வரும் பேரம்பேசல்களும் வெற்றியளிக்கப் போவதில்லை.
இன்னொருபுறம் எகிப்தின் பொருளாதாரம் நினைத்துப் பார்க்க முடியாதளவு வேகமாக சரிந்து வருகின்றது. எகிப்திய இராணுவத்துக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது. இந்நிலையில் அமெரிக்கா மீது மட்டும் நம்பிக்கை வைத்துள்ள எகிப்திய இராணுவத் தின் எதிர்காலம் என்னவாகப் போகின்றது என்பதுவே பலரினதும் கேள்வியாக உள்ளது.
நீண்ட காலமாக இராணுவத்தால் ஆளப்பட்டு வரும் எகிப்தில் இன்னொரு முறை தோன்றும் ஜனநாயக ஆட்சிக்கு எதிராக எகிப்தியர்கள் ஒருபோதும் ஆதரவளிக்கக்கூடாது என்ற செய்தியையே இராணுவம் மீள மீள மக்கள் மனதில் பதித்து வருகின்றது. வரலாறு ஒரு போதும் துரோகிகளை மன்னித்ததில்லை. எகிப்திய இராணுவமும் வரலாற்றின் இந்த இனிய பழிவாங்கலுக்கு உட்படும் தருணம் நெருங்கி விட்டது.
மூலம் : மீள்பார்வை
No comments