மொரட்டுவ பல்கலை நிகாப் தடை விவகாரம்
இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் வளாகத்தினுள் புர்கா, நிகாப் போன்ற முஸ்லிம் பெண்களின் ஆடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது பல்கலைக்கழக நிர்வாகத்தின் அங்கீகாரத்துடனேயே அமுல் செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களை பிரதானப்படுத்தி இந்த தடை அமுல் செய்யப்பட்டுள்ளதாக மொறட்டுவை பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ஏ.கே.டப்ளியூ.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இரு முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கண்களை மட்டும் தெரியும் படியாக முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாப் ஆடையினை அணிந்து கல்வி நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி வழங்குமாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பில் சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் விவாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு அனுமதி வழங்குவதில்லை என்ற தீர்மானத்துக்கு பல்கலை நிர்வாகம் வந்துள்ளது.
நிகாப் உடையில், அதாவது முகத்தை மறைக்கும் விதமாக பல்கலையினுள் வேறு யாரேனும் உள் நுழையக் கூடும் என்ற அச்சத்திலேயே பாதுகாப்பு காரணங்களை முதன்மைப்படுத்தி இத்தடை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மொறட்டுவை பல்கலையில் உப வேந்தர் இது தொடர்பில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள கருத்தில், புர்கா, நிகாப் அதாவது முகத்தை திரையிட்டு மறைக்கும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது எந்தவித உள் நோக்கங்களையும் கொண்டது அல்ல. பல்கலையின் நிர்வாகம் தமக்கிடையில் கலந்தாலோசித்தே இந்த முடிவுக்கு வந்தது.
ஆனால் பல்கலைக்கு வெளியே இந்த முடிவு தொடர்பில் சிலர் தவறான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
எவ்வாறாயினும் மொறட்டுவை பல்கலையின் வளாகத்தினுள் முகத்தை மறைக்கும் உடைக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஹிஜாப், அபாயா போன்ற தலை மற்றும் உடம்பின் ஏனைய பகுதிகளை முழுமையாக மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்கப்படவில்லை. தொடர்ந்தும் மொறட்டுவை பல்கலையில் ஹிஜாப், அபாயா ஆடையில் மாணவிகள் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடலாம் என பல்கலையின் உப வேந்தரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிகாப் தடை தீர்மானமானது பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவாகும். பல்கலைக்கழக நிர்வாகத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் பங்களிப்பும் இருப்பதாகவும் அவர்களின் சம்மதத்துடனேயே இந்த தடை தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் பல்கலையின் உப வேந்தர் தெரிவிக்கின்றார். இந் நிலையில் மொறட்டுவை பல்கலையில் நிகாப் தடை செய்யப்பட்டமையானது முஸ்லிம் சமூகம் சார்பாக அப் பல்கலையின் நிர்வாக சபையில் பிரதி நிதித்துவம் செய்துள்ள உறுப்பினரின் அல்லது உறுப்பினர்களின் பூரண சம்மதத்துடனேயே எடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் உள்ளூர் உரிமைக் குழுக்கள் சிலவும்,மனித உரிமை ஆர்வலர்கள் சிலரும் மொறட்டுவை பல்கலையின் தீர்மானத்தை கண்டிக்கின்றனர். மாணவர்கள் அவர்களது மத ரீதியான விழுமியங்களை பின்பற்ற அனுமதி அளிக்கப்படல் வேண்டும் என அவர்கள் தமது தரப்பு நியாயத்தை முன்வைக்கின்றனர்.
நாட்டில் நிகாபுக்கு எதிராக ஒரு குழு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் மொறட்டுவை பல்கலை மேற்கொண்டுள்ள தடையானது உள்ளர்த்தம் அல்லது பின்னணி ஒன்றை கொண்டதா என்ற சந்தேகமும் இல்லாமலில்லை. அது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் முஸ்லிம் சமூகம் உள்ளது.
இலங்கையில் எந்தவொரு இடத்திலும் இதுவரை நிகாப் ஆடை பகிரங்கமாக தடை செய்யப்படாத நிலையில் உயர் கல்வி நிலையமான மொறட்டுவை பல்கலைக்கழகம் எடுத்துள்ள இந்த முடிவானது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மூலம் : விடிவெள்ளி
No comments