மேற்குலகின் மலாலா விளையாட்டு!
எம்.எப்.எம்.பஸீர்
மலாலா யூசுப் ஸை. இவரை அறியாதவர்கள் இன்று இருப்பதென்பதே அரிது. அத்தனைக்கும் காரணம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி நடந்த அந்தச் சம்பவமாகும்.
அன்றைய தினம் மலாலா மீது இனம் தெரியாத ஆயுததாரிகள் சிலர் நடத்திய தாக்குதலில் மலாலாவும் அவரது இரண்டு பள்ளித் தோழிகளும் படுகாயமடைய மறுகணமே பழி தலிபான்கள் மீது போடப்பட்டது.
ஆரம்பக் கட்ட விசாரணைகள் கூட நிறைவு பெற முன் தலிபான்கள் மீது பழிபோடப்பட்டு பெண்கள் கல்விக்கு எதிரானவர்களாக தலிபான்களும் இஸ்லாமும் சித்தரிக்கப்படும் நடவடிக்கைகள் மேற்குலகின் ஊடகங்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டன. 75 வீதமான ஊடகங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேற்குலகிற்கு 'மலாலா' -என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றுவது என்பது கடினமான விடயமாக இருக்கவில்லை.
‘சுவாத்’ பள்ளத்தாக்கு தலிபான்களின் ஆளுகையின் கீழ் இருக்கின்ற நிலையில், ஆப்கானிஸ்தானிலும் வசிரிஸ்தானிலும் அமெரிக்க துருப்புக்களுக்கு படை நகர்வுகளை மேற்கொள்ள அது பாரிய சவாலினை கொடுத்தது. இதனால் திட்டம் தீட்டிய அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ மாற்று வழிகளை சிந்திக்கத் தொடங்கியது.
அதற்காக ஒரு நாடகத்தை சி.ஐ.ஏ. தயார் செய்தது. அதற்கமைய கடந்த ஆண்டு ஒக்டோபர் 09ஆம் திகதிக்கு முன்னரே மலாலா என்ற சிறுமி சி.ஐ.ஏ ஏஜெண்டுக்களின் வலையில் சிக்குண்டிருந்தார். இன்னும் அந்த வலையிலேயே அவர் உள்ளார்.
மலாலா பி.பி.சி செய்திச் சேவையின் உருது மொழிச் சேவைக்கு புனைப் பெயரில் தலிபான்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டமை தொடர்பில் கடந்த வருடம் ஒக்டோபர் மாத விடிவெள்ளி இதழ் ஒன்றில் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.
அதனைவிட மலாலா உலகுக்கு தெளிவாக அடையாளப்படுத்தப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பமும் உள்ளது. 2009 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் என்ற அமெரிக்க ஊடகத்தின் Class Dismissed என்ற ஆவணப்படமொன்றில் மலாலா நடித்திருந்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 11 மட்டுமே. எனினும் அந்த ஆவணப்படத்தில் முற்றுமுழுதாக தலிபான்களுக்கு எதிரானவராக மலாலா காட்டப்பட்டிருந்ததுடன் அதன் பின்னரும் அவர் சுவாத் பள்ளத்தாக்கிலேயே வாழ்ந்தும் வந்துள்ளார்.
மலாலாவின் தந்தை சற்று முற்போக்கான சிந்தனையை உடையவராக இருந்த போதிலும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான அவரது தொடர்புகள் சி.ஐ.ஏ யின் வலைக்குள் அவர் சிக்குவதற்கு ஏதுவானது.
குறிப்பாக பாகிஸ்தானில் இன்னும் தாடி வைத்த அரபு, உருது மொழியினை சரளமாக உச்சரிக்கும் சி.ஐ.ஏ. மற்றும் மொஸாட் ஏஜண்டுக்கள் உலாவரும் நிலையில் தலிபான்களை விட இந்த தாடி வைத்த சி.ஐ.ஏ. காரர்கள் ஆபத்தானவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
மலாலா தாக்குதல் விவகாரமும் அப்படி சோடிக்கப்பட்டதொன்று தான். மலாலா மீது தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. அவர் காயமடைந்ததும் உண்மை.
தாடி வைத்த துப்பாக்கி தாரியால் முகமூடி அணிந்த நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுவதும் உண்மை. எனினும் தாக்குதல் நடத்தியது யார்? ஏன் தாக்குதல் நடத்தினார்கள்? என்ற கேள்விகளுக்கு சர்வதேச ஊடகங்கள் வாயிலாக அளிக்கப்படும் பதில்களே சந்தேகங்களை கிளறுகின்றன.
இதுவரை பூரணமான விசாரணையொன்று மலாலா தாக்குதல் விடயத்தில் இடம்பெறாமலேயே தலிபான்கள் குற்றவாளிகளாக காணப்பட்டு விட்டார்கள்.
உண்மையில் அன்று பாடசாலை வாகனத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபரின் விஷேட அடையாளமாக சர்வதேச ஊடகங்கள் தாடியையே குறிப்பிட்டன.
மேற்கத்தேயத்துக்கு தாடி விஷேட அடையாளமாக தென்பட்ட போதும் சுவாத் பள்ளத்தாக்கில் பொதுவாக அனைத்து ஆண்களுமே தாடி வைத்தவர்களே.
இந்த இடத்தில் பாகிஸ்தானுக்கான அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விக்டோரியாவின் கருத்துக்களும் அவதானத்துக்குரியவை. ஏனெனில் மலாலா மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க அரசானது மக்கள் ஆதரவை திரட்ட முனைப்புக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
தலிபான்களின் கொள்கைகளில் பல முரண்பாடுகள் இருக்கின்ற போதும் பாகிஸ்தானில் இடம்பெறும் அத்தனை அழிவுகளுக்கும் அவர்களை காரணம் கூறுவது முட்டாள் தனமானது.
பி.பி.சி செய்திச் சேவையில் மலாலாவின் பதிவுகளின்படி பல பாடசாலைகள் விமானத்தாக்குதல்களிலும் குண்டுத்தாக்குதல்களிலும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் உலகு தலிபான்களிடம் விமானத் தாக்குதல் நடத்தும் வசதி இல்லை என்பதையும் வசிரிஸ்தான் மாநிலம் முழுவதும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்தும் குண்டு வீச்சு தாக்குதல்களால்தான் அப்பள்ளிக் கூடங்கள் பல சேதமானதையும் ஏற்றுக் கொள்ள மறுப்பதன் பின்னணி என்ன?
சுவாத்தில் பாடசாலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தனியே தலிபான்களை மட்டும் குறை கூறுவது பொருத்தமற்றது. அத்துடன் தலிபான்களை பெண்களுக்கு எதிரானவர்களாக சித்திரிக்கும் நோக்குடனேயே இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதும் வெளிப்படையானது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தாக்குதல்களில் ஆயிரமாயிரம் மலாலாக்கள் கருகும் நிலையில் தலிபான்கள் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக மேற்கத்தைய ஊடகங்கள் சில தாமாகவே வெளியிட்ட சில கடிதங்களும் நகைப்புக்குரியவை.
இந்த தாக்குதல் நடந்ததும் தலிபான்கள் மீது விரல் நீட்டப்பட அவ்வமைப்பு வெளியிட்ட மறுப்புச் செய்திகளை எந்தவொரு ஊடகங்களும் வெளியிட முன்வராமை கவலைக்குரியதே. அத்துடன் அண்மையில் பாகிஸ்தானின் தஹ்ரீர் ஈ. தலிபானின் (PTT) தலைவர் ரஷீத் எழுதியதாக வெளியிடப்பட்ட கடிதமும் இந்த இடத்தில் சற்று அவதானிக்கத்தக்கதே!
அந்தக் கடிதத்தில் மலாலாவை மீண்டும் தாயகத்துக்கு அழைத்துள்ள தலிபான்கள் தாய் நாட்டில் கல்வியை தொடரவும் வேண்டியுள்ளதுடன் தலிபான் உள்ளிட்ட போராளி அமைப்புக்கள் கல்விக்கோ பெண்களுக்கோ எதிரானவை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
பல ஊடகங்களில் தலிபான்கள் தமது தாக்குதலை நியாயப்படுத்தி கடிதம் எழுதியிருந்ததாக கூறப்பட்ட போதும் மலாலா மீதான தாக்குதலை யார் நடத்தினர்? அது சரியா? தவறா? என விவாதிக்க விரும்பவில்லையெனவும் அனைத்தையும் இறைவன் அறிவான் என்றுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கத்தேய சடவாத கல்விக் கொள்கையை கைவிட்டு மலாலா இஸ்லாமிய முறைமையில் கல்வி பயில வேண்டுமெனவும் தீய சதித்திட்டங்கள் மூலம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் அடிமைப்படுத்த நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மலாலாவுக்கு உலக அளவில் பல்வேறு விருதுகளும் பாராட்டுக்களும் குவிந்த வண்ணமுள்ளன. ஐ.நா. சபையில் உரையாற்றும் அளவுக்கு புகழின் உச்சியை தொட்டுள்ள மலாலா சமாதானத்துக்கான நோபல் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயரிய விருதான மனித உரிமைகளுக்கான விருதினையும் இவரே இம்முறை தட்டிச்சென்றுள்ளார். அத்துடன் ஐ.நா.வின் கல்வித் தூதுவராகவும் மலாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவையனைத்தையும் வைத்து பார்க்கும் போது மேற்குலகும் அமெரிக்காவும் மலாலாவை வைத்து பிரதான இரு செயற்பாடுகளை முன்னெடுக்க விளைகின்றமையை இலகுவில் விளங்கலாம்.
ஒன்று, இஸ்லாம் -பெண்கள் கல்விக்கு எதிரானது என்ற மாயையை பரப்பி பாகிஸ்தான்- -ஆப்கான் எல்லையில் உரிமை மீறல் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் தீவிரவாதிகள் அங்கு அட்டூழியம் புரிவதாகவும் கூறிக் கொண்டு ஆக்கிரமிப்புகளுக்கும் விமானத் தாக்குதலுக்கும் நியாயம் கற்பிப்பது.
இரண்டு, மலாலா ஊடாக அனுதாப அலைகளை ஏற்படுத்தி அதன் பலனாக இஸ்லாமிய நாடுகள் புறக்கணிக்கும் மேற்கத்தேய சடவாதக் கல்விக் கொள்கையினை திணிப்பது.
இந்த இரு பிரதான செயற்பாடுகளை மையப்படுத்தியே மலாலா எனும் சிறுமியை பயன்படுத்தி அமெரிக்காவும் மேற்குலகும் பல்வேறு அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்கின்றன.
இந்நிலையில் உண்மையில் மலாலா தலிபான்களால் தான் சுடப்பட்டாரா? அதற்கான ஆதாரம் என்ன? சர்வதேச ஊடகங்கள் பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் அமெரிக்க வான் தாக்குதல்களில் கொல்லப்படும் அப்பாவி மலாலாக்கள் தொடர்பில் முக்கியத்துவம் வழங்க மறுப்பதன் பின்னணி என்ன? தலிபான்களை முன்னிறுத்தி முழு இஸ்லாத்துக்கும் எதிரான பிரசாரங்களை மேற்குலகம் மேற்கொள்வதன் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு மறைக்கப்பட்ட பதில்களுடன் மேற்குலகின் மலாலா விளையாட்டு தொடர்கிறது.இந்த விளையாட்டு எங்கு போய் முடியப் போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
No comments