Breaking News

தேசிய முதலாளித்துவ அரசியலும் முஸ்லிம் கட்சிகளின் வீழ்ச்சியும்

photo_188ஷேக்ராஜா

வீதியால் மாட்டுவண்டில் போகின்ற போது அதனை பின்தொடர்ந்து வேறு பிராணி ஒன்றும் ஓடுவதுண்டு. இப் பிராணி மாட்டிற்கு கீழால் போகின்ற போது நிலத்தில் விழும் மாட்டின் நிழலுக்குள் மறைந்து கொள்ளும். அப்போது நாம்தான் இந்த மாட்டு வண்டிலை இழுத்துக் கொண்டு போகின்றோம் என்று அது நினைக்குமாம். ஒரு இறுமாப்பில் சில நொடிகள் அசையாமல் நின்று பார்க்கும் அப்பிராணி. ஆனால் மாட்டு வண்டில் தொடர்ந்து முன்னோக்கி நகர்வதைப் பார்த்ததும் மீண்டும் ஓடோடிச் சென்று வண்டிலின் நிழலுக்குள் அடைக்கலம் தேடிக்கொள்ளுமாம். 

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் மக்கள் பிரதிகள் மற்றும்; அரசியல் தலைமைகள் பலரது செயற்பாடுகளை ஒரு கோர்வையாக உற்றுநோக்குகின்ற போது, எனக்கு இந்த உவமானம் அடிக்கொரு தடவை ஞாபகத்திற்கு வருவதுண்டு. 

இலங்கை முஸ்லிம்களுக்கென தனியொரு அரசியல் கட்சியோ, இத்தனை முஸ்லிம் எம்.பி.க்களோ இல்லாத காலத்தில் பாதுகாக்கப்பட்ட அளவுக்குக் கூட அம்மக்களின் உரிமைகள் இப்போது பாதுகாக்கப்படுவது கிடையாது. இப்போது ஊருக்கொரு கட்சி, அரசியல் இயக்கம், காங்கிரஸ்கள் உருவாகிவிட்டன. வெடில் பறக்கும் பேச்சுக்கள், வீர வசனங்கள், பெருமையடித்தல்கள் என தேர்தல் காலத்தை கழிக்கின்ற இவர்களால் கிடைத்த ஆகுமான பயனொன்றுமில்லை. 

பெரிய பித்தலாட்டம்


முஸ்லிம் காங்கிரஸ்தான் மிகப் பெரிய பித்தலாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம்களின் ‘தாய் கட்சியாக’ மு.கா. இருப்பதால் அதனை சகித்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. ஒரு தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் போல தம்மைக் காட்டிக் கொண்டு மக்களின் வாக்குகளை கேட்பதும் தேர்தல் முடிந்த பின்னர் அம்மக்களின் வாக்குகளை எல்லாம் சுருட்டிக் கட்டிக் கொடுத்துவிட்டு அதற்கு கைமாறாக அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதுமாக அவர்களது அரசியல் வியாபாரம் நடந்து கொண்டிருக்கின்றது. 

அடுத்த தேர்தல் பருவகாலம் வரும் வரைக்கும் - “அரசாங்கத்திலிருந்து விலக மாட்டோம்”, “யாரும் எம்மை வெளியேற்ற முடியாது”, “தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிவரும்”, “அரசுக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நிலை ஏற்படும்” என தங்களுக்கு தோதான அறிக்கைகளை விட்டுக் கொள்வது மு.கா.வின் வாடிக்கையாகி விட்டிருக்கின்றது. 

மு.கா.வில் இருந்து பிரிந்து சென்று உருவான காங்கிரஸ் காரர்களும், நேரடியாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளும் இதற்கு சளைத்தவர்கள் அல்ல. தேர்தல் மேடைகளில் மு.கா.வை ஏசுவதன் மூலம் மக்களை கவர்வது, மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் சேவைகளை தமது சொந்த நிதியில் மேற்கொண்டது போல மக்களிடம் சொல்லிக்;காட்டுவது என அவர்களது பொழுதுகளும் போய்க் கொண்டுதான் இருக்கின்றன. அரசாங்கத்தின் செல்லப் பிள்ளைகளாக இருக்கும் வரைக்கும் அவர்களுக்கு எல்லாம் சுபம். 

ஆனால் ஒன்று, முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தி அரசியலை அடியோடு மறந்து விட்டது. (தலைவர் அஷ்ரஃபுக்கு பிறகு) உரிமை அரசியலிலும் சாதிக்கவில்லை. அதேபோல் அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற மற்றைய காங்கிரஸ்கள் உரிமை அரசியலை வசதியாக மறந்துவிட்ட போதிலும் அபிவிருத்தி அரசியலில் குறிப்பிடத்தக்களவுக்கு சாதித்திருப்பதை மறுக்கவியலாது. 

ஆக மொத்தத்தில், (நண்பர் ஒருவர் சொன்னதைப்போல) அரசுடன் சங்கமமாகி இருக்கின்ற ஏனைய முஸ்லிம் கட்சிகள் சைனீஸ் போனை ‘சைனீஸ் போன்’ என்று சொல்லி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் மட்டும்தான் சைனீஸ் போனை ‘நோக்கியா போன்’ எனக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றது. 

அது ஒருபுறமிருக்க, மேற்சொன்ன எந்தத் தரப்பினராலும் இச்சமூகத்தின் இன, மத, உரிமைசார் விடயங்களில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பதே நமது நிகழ்கால நிதர்சனம். முற்போக்கு சமூக விடுதலை இயக்கச் செயற்பாடு -  பேரம்பேசும் அரசியலாகி – சோரம்போகும் அரசியலாகி - இன்று முதலாளித்துவ அரசியலாக விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்றது. 

இதில் வேடிக்கை என்னவென்றால் - இந்த முஸ்லிம் சமூகத்தை முன்கொண்டு செல்லும் தானைத் தலைவர்கள் தாமே என்றும் தமக்குப் பின்னாலேயே முழு சமூகமும் அணிதிரண்டு இருக்கின்றது என்றும் இவர்கள் ஒவ்வொருவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றமைதான். இவர்கள் எதுவுமே செய்யாமல் நிற்கையிலும் அச் சமூகம் தன்பாட்டில் போய்க் கொண்டேயிருக்கின்றது என்பது அவர்களுக்கே புரியும். 

இப்போது உங்களுக்கு மேற்சொன்ன உவமானம் விளங்கியிருக்கும். எது எப்படியிருப்பினும் இவர்கள் எவரும் எதுவுமே செய்யவில்லை என்று கூறி, நன்றி மறந்தவனாவதிலும் எனக்கு உடன்பாடில்லை. 

உயரிய நோக்கம்


முஸ்லிம் சமூகம் விடுதலை பெற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் உருவாகி பின்னர் கட்சியாக உருமாற்றப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய தலைவர் எம்.எச்.எம். அஷரஃப் மற்றும் சேகு இஸ்ஸதீன் உள்ளிட்டோர் இவ்வியக்கத்தை ஆரம்பித்து வைத்தபோது அதில் ஒரு உயரிய நோக்கமிருந்தது. அரசியல் அபிலாசைகளும் சுயநிர்ணய தாகமும் ஏகத்திற்குக் காணப்பட்டது. 

ஜனநாயக ரீதியான அரசியல்சார் போராட்டமாக மு.கா.வின் அரசியல் இருந்ததன் காரணமாகவே ஆரம்ப காலத்தில் கட்சிக்குள் வந்து சேர்ந்தவர்கள் ‘போராளிகள்’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டனர். தேர்தல் காலத்தில் மாத்திரம் புத்துயிர் பெறுகின்ற வெறும் அரசியல் கட்சியாக மு.கா. கருதப்பட்டிருக்கும் என்றால் ‘ஆதரவாளர்கள்’ என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ‘போராளிகளையே’ ஸ்தாபகத் தலைவர் கட்சிக்குள் உள்ளீர்ப்புச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

கட்சியை வளர்க்க நிதி வேண்டும் என்பதற்காக ஒருவருக்கு தேசியப் பட்டியல் வழங்கியது, தனக்கு ஜூனியராக சட்டம் பயிலவந்த ரவூப் ஹக்கீமுக்கு செயலாளர் பதவி வழங்கியது போன்ற ஒரிரு விடயங்களை கையாளும்போது மாத்திரம் விதிவிலக்காக செயற்பட்டாரேயொழிய, வேறு எந்த சூழ்நிலையிலும் அவர் போராளிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். அவரது ‘நான் எனும் நீ’ கவிதைத் தொகுப்பிலும் ‘அரசியல் முதலாளிமார்’ பற்றி ஒரு வரியேனும் இல்லை. 

அஷ்ரஃ;பிற்கும் இப்போதிருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும்; இடையில் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பது மட்டும் திண்ணம். அவரிடம் ஒரு முற்போக்குவாத சிந்தனை மேலோங்கி இருந்தது. மக்களுக்குள் மக்களாக பழகி அவர்களின் மனங்களை வெல்லும் கலையை அவர் வரமாகப் பெற்றிருந்தார். 

அப்போதெல்லாம் முஸ்லிம் மக்களில்; கணிசமானோர் முஸ்லிம் காங்கிரஸிற்கே தமது வாக்குரிமையை எழுதிக் கொடுத்திருந்தனர். சொற்பளவானோர்; ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் தொடர்ந்து வாக்களித்துக் கொண்டிருந்தனர். ஒரு வீதியில் நடந்து சென்றால் முன்னே வருகின்றவன் தமக்கு ஆதரவாளனா இல்லையா என்பதை கணப்பொழுதில் கண்டறிந்து பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்துவாராம் தலைவர் அஷ்ரஃப்.

ஒரு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தால் மேடையில் இருந்தவாறே பார்வையாளர்களை நோட்டமிடும் தலைவர், முக்கிய போராளி ஒருவர் கீழே நிற்பதைக் கண்டால் உடனடியாக ஆள் அனுப்பி கூட்டிவந்து மேடையில் அமரச் செய்வார். இப்படி மு.கா.வை நேசிக்கின்றவர்களையும் தன்னிடம் உதவி நாடி வருகின்றவர்களையும் நெகிழ்ந்துபோகச் செய்த சந்தர்ப்பங்கள் ஏராளம் உண்டு என்கின்றார் மூத்த போராளி ஒருவர். 

ஒவ்வொரு ஊரிலும் மத்திய குழுக் கூட்டங்களும் மக்கள் சந்திப்புக்களும் மாதாந்தம் கிரமமான அடிப்படையில் நடாத்தப்படும். மிகத் தெளிந்த மனதுடனும் நட்புறவாகவும் அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்து கொள்வார். மக்கள் என்ன வேண்டுமெனக் கேட்கிறார்களோ அதனையே பெற்றுக் கொடுக்க உயிரைக் கொடுத்துப் போராடுவதற்கு அவருக்கு நிகர் வேறு ஒருத்தருமில்லை. மாறாக, தனது சொந்த தேவைகளை முன்னிறுத்தி முடிவுகளை எடுத்துவிட்டு, அதனையே மக்களும் எதிர்பார்க்கின்றனர் என்று விளக்கம் கற்பிக்கும் வெட்கக்கேடான அரசியலை அவர் முன்மொழிந்தது கிடையாது. 

வீழ்ச்சியின் தொடக்கம்


தலைவர் அஷ்ரஃபின் மரணம் நிகழ்ந்த பிறகே மு.கா. பாசறையில் வளர்ந்தவர்களின் சுயரூபம் வெளிப்படத் தொடங்கியது. மு.கா.வில் உள்ள அதிலிருந்து பிரிந்து சென்றுள்ள எல்லாருக்கும் இது பொருந்தும். தலைவரின் மரணம் இயற்கையானதா? செயற்கையானதா என்பதைக் காட்டிலும் அடுத்து வரப்போவது இணைத் தலைமையா? தனித் தலைமையா என்பதிலேயே இவர்கள் எல்லோரும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். இந்த தலைமைத்துவ போட்டியும், பின்னர் ஏற்பட்ட தலைமை மீதான அதிருப்தியுமே இன்று ஊருக்கொரு கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு அடிப்படைக் காரணமாயிற்று என்பதால் முஸ்லிம் அரசியலின் வீழ்ச்சி என்பது தலைவராக யாரை ஆக்குவது என்ற இழுபறி ஆரம்பித்த போதே இனிதே ஆரம்பமாகிவிட்டது எனலாம்.

அதன்பிறகு இன்று வரைக்கும் என்ன நடந்து கொண்டிருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸ் என்ற மக்களின் அரசியல் இயக்கம், கட்சி இன்று ஒரு சிலரின் சட்டைப் பைகளை மட்டும் நிரப்பிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வியாபாரத்தை மேற்கொள்பவர்கள் மாதிரி, தேர்தல் காலம் வந்துவிட்டால் வாக்காளப் பெருமக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களுக்கு தலைவரும் பட்டாளங்களும் படையெடுத்து விடுகின்றனர். அரச தலைமையுடன் விருந்துண்டுவிட்டு புறப்பட்டு கிழக்கிற்கு வந்து அரசாங்கம் முஸ்லிம்களை நெருக்குவாரப்படுத்துவதாக, இனவாதத்தை வளர்ப்பதாக பீக்கர் கட்டிப் பேசுவதை என்னவென்று சொல்வது? பகட்டுப் பேச்சை நம்புகின்ற மக்களும் இதுதான் கடைசி முறை இதற்குப் பிறகு வாக்களிப்பதில்லை என்று கூறி ஒவ்வொரு தடவையும் வாக்கை அளி(ழி)த்து விடுகின்ற வாக்காளர்களும் இச்சமூகத்தில் இருப்பது மு.கா. தலைமைக்கு நன்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது. 

ஒரு தேர்தலுக்கும் - அடுத்த தேர்தலுக்கும் இடையில் மக்கள் சந்திப்பும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. உண்மையாகச் சொல்லப் போனால் தமக்கு வாக்களித்த மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வருவதே மிக அரிது. இந்த லட்சணத்தில் அஷ்ரஃப் காட்டித் தந்த பகிரங்க மக்கள் சந்திப்புக்களுக்கு எங்கு இடமிருக்கின்றது? இதனைப் பற்றி விசிறிகளிடம் கேட்டால் தலைவர் அல்லது முக்கிய பதவி வகிப்போர் ‘பிசியாக’ இருப்பதாக விளக்கம் கூறுவார்கள். 

முதலாளித்துவ நகர்வு


பேரம்பேசும் ஆற்றல் என்ற சொல்லை மு.கா. தேர்தல் மேடைகளில் பயன்படுத்துவதுண்டு. இந்த பேரம் பேசும் ஆற்றலால் அல்லது சாணக்கியத்தால், தீர்க்கதரிசனத்தால் ஹக்கீமின் தலைமையில் பெற்றுக் கொண்டவைதான் என்னவென்று புரட்டிப்பார்த்தால் எல்லாம் கிட்டத்தட்ட வெறுமையாகவே தெரிகின்றது. ஒன்றிரண்டு அமைச்சுப் பதவிகளும் அரை அமைச்சுப் பதவிகளும் கிடைத்ததும் சிலரின் வங்கிக் கணக்குகள் நிரப்பப்பட்டதையும் தவிர எதுவும் மிச்சமில்லை. தம்மோடு பேரம்பேசுகின்ற தரப்புக்கு இலாபம் தரக்கூடிய ஒரு அப்பட்டமான வியாரபார கொடுக்கல் வாங்கலுக்கு இவர்கள் வைத்துள்ள பெயர்தான் பேரம்பேசும் சக்தி. 

இதனைவிட முக்கியமானது பல முஸ்லிம் கட்சிகள் ‘தேசிய முதலாளித்துவ அரசியலை’ நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பொருளியலைப் பொறுத்தமட்டில் சந்தைத் தொழிற்பாடுகள் அனைத்தும் தனிப்பட்ட வர்;த்தகர்கள் சிலரின் கைகளில் தங்கியிருப்பதும் தீர்மானிக்கும் அதிகாரத்தை முற்றுமுழுதாக அவர்களே கொண்டிருப்பதும் முதலாளித்துவம் என்று கூறலாம். அதேபோன்று, தேசிய முதலாளிமார் எல்லோரும் சேர்ந்து ஒரு ஆட்சியை அமைக்கும் பட்சத்தில் அது ‘தேசிய முதலாளித்துவ ஆட்சி’ என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அந்தவகையில், முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்களாக ஒரு சிலரே இருப்பதன் காரணமாகவும், அரசியல் முதலாளிமார்களின் சுயநலங்களே கருத்திற் கொள்ளப்படுகின்றமையாலும், முதலாளிகள் அல்லது பணம் படைத்தோர் அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்றமையாலும்….. நிகழ்கால முஸ்லிம் அரசியல் களநிலைவரத்தை ‘தேசிய முஸ்லிம் முதலாளித்துவ அரசியல்’ என்றோ அல்லது அதற்கான முன்னோட்டம் என்றோ குறிப்பிடலாம் என்கின்றார் அரசியல் ஞானமிக்க நண்பர் ஒருத்தர். 

பணக்கார வேட்பாளர்கள்


அவரது கருத்திலும்; உண்மை இருக்கின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை  அஷ்ரஃப் ஆரம்பித்தபோது அவர் பணம் படைத்தோரை தேடவில்லை. மாறாக சமூக விடுதலை பற்றிய முற்போக்கு சிந்தனையுள்ள இளைஞர்களையே அவர் தேடினார். அப்போது நிறையப்பேர் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். முன்னமே சொன்னதுபோல, புகார்டீனை தேசியப்பட்டிலில் போட்டது தவிர பணவசதியுடையவர் என்று மாத்திரம் அடையாளப்படுத்தப்படும் எந்தவொரு ஆளுமையையும் அவர் கட்சிக்குள் எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.  

ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலை பட்டாவர்த்தனமானது. ஒரு ஊரில் அல்லது பிரதேசத்தில் துடிப்புள்ள மக்கள் சேகவனையே தேர்தலில் நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம்கூட இல்லாமல் பலர் பணக்காரர்கள் என்பதற்காகவும், ஊரில் பெரிய முதலாளி என்பதற்காகவும் கட்சிக்குள் வலிந்து இழுக்கப்பட்டு நிறைய ‘கறக்கப்பட்டு’ உள்ளனர். முஸ்லிம் காங்கிரஸில் இவர்களில் சிலரின் கையே மேலோங்கிக் கொண்டிருப்பதாகவும் தகவல். முதலாளி என்ன செய்வான்? போட்ட முதலுக்கு இலாபம் தேட முனைவான். அதுதான் முஸ்லிம் அரசியலில் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால், முழுச் சமூகத்தின் எதிர்பார்ப்பும் நாசமாகிக் கொண்டிருக்கின்றது. 

பணத்தைக் கொண்டுதான் எல்லாம் நடக்கின்றது எல்லாவற்றுக்கும் காசுதான் தேவை என நீங்கள் ரெடிமேட் பதில்களைக் கூறலாம். ஆனால், ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும். சில பகுதிகளில் தேர்தலில் களமிறக்கப்பட்டவர்களைப் பார்த்தால் சிரிப்புத்தான் வந்தது. இவ்வாறானவர்கள் கொழும்புக்கு ஆட்களைக் கூட்டிக்கொண்டு சென்று தமக்கு முழு ஆதரவு இருப்பதாகவும் அப் பிரதேசத்தில் தாம் பெரிய புள்ளி எனவும் புரூடா விடுவார்கள். போதாக்குறைக்கு வங்கிக் கணக்குகளின் கனதியும் காண்பிக்கப்படும். பிறகென்ன வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்த மாதிரித்தான். வேண்டுமென்றால் இவ்வாறானவர்களுக்கு சமாதான நீதவான் (ஜே.பி.) கொடுக்கலாம், ஆனால் எம்.பி. கொடுக்க முடியாது என்பதை விளங்க வேண்டும்.  

காங்கிரஸ்களின் நிலை


மறுபுறத்தில், ஏனைய ‘காங்கிரஸ்களும்’ முஸ்லிம் கட்சிகளும் அடிப்படையில் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். ஆனால் சிறு வித்தியாசங்கள் உள்ளன. இக் கட்சிகள் தொடர்ச்சியாக தேசிய ஆட்சியில் பங்காளியாக இருப்பதால் வெளியிலிருந்து இவர்களுக்கு பணம் தேவைப்படும் சந்தர்ப்பங்கள் இதுவரை ஏற்படவில்லை. ஆனால் மிகக் கிட்டிய காலத்தில் இது நடக்கலாம். எப்படியிருப்பினும், பெரும்பாலும் ‘அரசியல் முதலாளிகளின்’ நலன் மேலோங்கியிருக்கின்ற முதலாளித்துவத்தின் முக்கிய பண்பு இவர்களிடையே இருப்பதை உன்னிப்பாக அவதானிப்போர் புரிந்து கொண்டிருப்பர். 

இப்படியான கட்சிகள் தேசிய ரீதியில் தம்மை பலமாக விரிவுபடுத்திக் கொள்ளவில்லை. ஒரு நிலப்பரப்பை மையமாகக் கொண்டே தமது இயங்குதளத்தை அமைத்துக் கொண்டுள்ளன. முஸ்லிம் காங்கிரஸ் அபிவிருத்தியை எவ்வாறு மறந்துவிட்டதோ அதுபோல இக்கட்சிகள் உரிமை தொடர்பாக பேசுவதற்கு நல்ல நேரம் பார்ப்பதுண்டு. முஸ்லிம் காங்கிரஸை வசைபாடுவதுதான் இவர்களது உச்சகட்ட அரசியல். 

மு.கா. இருக்கின்ற நிலையில் அதன் ஆரம்பகால உறுப்பினர்கள் என்ற வகையில் அதனை தட்டிக் கேட்பது இவர்களது கடமையாகக் கூட இருக்கலாம். ஆனால், இணைத்தலைமையில் இருந்து விலகி றவூப் ஹக்கீமை தனித் தலைவராக ஆக்கியதே இவர்கள்தான். ஆதலால், மு.கா. தலைமை இன்று செய்து கொண்டிருக்கின்ற ஏமாற்று வித்தைகளுக்கு காரணகர்த்தாக்கள் தாமே என்பதை இவர்கள் நேர்மையுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

கேவலம் கெட்டது


மு.கா.வினதும் அதிலிருந்து பிரிந்து சென்று புதுக்கட்சிகள் தொடங்கிய மற்றும் ஏனைய முஸ்லிம் கட்சிகளின் நிலைமை இதுவென்றால், இதற்கு வெளியே தமக்கென்று எந்தவித கட்சி அடையாளங்களும் இன்றி பெரும்பான்மைக் கட்சிகளுடன் காலகாலமாக தேனிலவு கொண்டாடிக் கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலைமை இதைவிட படுமோசமாக இருக்கின்றது. இதற்கு பதச்சோறாக ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேர்காணல் ஒன்றில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரதிநிதி ஒருவரும் மக்களால் தெரிவுசெய்யப்படாத முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் கலந்துகொண்டனர். அப்போது முஸ்லிம் அரசியல்வாதியின் பேச்சினிடையே குறிக்கிட்ட தமிழ் அரசியல்வாதியை நோக்கி “நீங்கள் முஸ்லிம்கள் பற்றி பேசுவதென்றால் சுன்னத் (விருத்தசேதனம்) செய்து கொண்டு வாருங்கள்” என்றார் முஸ்லிம் பிரதிநிதி. 

மானமுள்ள எல்லோரையும் தூக்கி வாரிப்போட்டது இந்த அபத்தமான வார்த்தைகள். முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரும் வாயைத் திறக்கவில்லை என்பதற்காக தமிழ் அரசியல்வாதிகளும் பேசக்கூடாது எனக் கூற முடியாது. அப்படி பேசுவதற்கான அடிப்படை நிபந்தனை, தேவைப்பாடு சுன்னத் செய்தல் ஆகவும் இருக்க முடியாது. அவர் குறிப்பிட்டதுபோல் சுன்னத் செய்தவர்கள்தான் பேசவேண்டும் என்றால் தர்க்கவியல் ரீதியில் இப்போது எதுவும் பேசாதிருக்கின்றவர்கள் சுன்னத் செய்யாதவர்கள் என்ற முடிவுக்கல்லவா வரவேண்டியிருக்கும்!

ஆக, அரசாங்கத்துடன் தற்காலிக உறவை ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் காங்கிரஸ_ம் சரி, இரண்டறக் கலந்துள்ள பிற காங்கிரஸ்களும் சரி, நேரடியாக அரசில் அங்கம் வகித்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும் சரி யாருமே அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன ஒடுக்குமுறைகளை தட்டிக் கேட்கவில்லை முதலாளித்துவத்தின் ஏதோவொரு பண்புடன்தான் இவர்களில் அநேகர் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். 

தமது கட்சிக்காக பாடுபட்டவர்கள், உயிரிலும் மேலாக கட்சியை நேசிப்பவர்கள், மனைவியின் தாலியை விற்று கட்சிச் செலவுக்கு காசு கொடுத்தவர்கள் எல்லோரையும் இக் கட்சிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிட்டது. தமக்கு வாக்களித்த மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? அவர்களுக்கு எது தேவையாகவுள்ளது? என்பவற்றை எல்லாம் 100 வீதம் நாடிபிடித்து அறிந்து நிறைவேற்றி வைக்க மேற்குறிப்பிட்ட அரசியல்வாதிகள் எல்லோரும் தவறிவிட்டனர். தமது கஜனாக்களும் ஆதரவாளர்கள் என்ற தோரணையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற கூட்டத்தினரது சட்டைப் பைகளும் நிறைந்தால் போதுமென்ற நிலைப்பாட்டில் அடுத்த தேர்தல் வரைக்கும் இக் கட்சிகள் இருக்கப் போகின்றன. 

மக்களின் மனமாற்றம்


ஆனால், மக்கள் இப்படியே இருக்கப்போவதில்லை. அவர்களது மனங்களில் மெல்ல மெல்ல மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் மக்களை அவர்களது  அரசியல்வாதிகள் தேசிய அரசியலில் அச்சொட்டாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற குறை பரவலாக முஸ்லிம்களின் மனதில் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக குறித்த கட்சிகள் முற்றாக தோல்வியடைந்துவிடும் என்று கூற முடியாவிட்;டாலும், வாக்கு வங்கிகளில் இது அதிர்வை ஏற்படுத்தும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும். நிலைமை இப்படியே தொடர்ந்தால் தேசிய ரீதியிலான மாற்று அரசியல் இயக்கம் ஒன்றின் தேவைப்பாடும் தவிர்க்கமுடியாததாக ஆகிவிடும். 

வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் அ.இ.ம. காங்கிரஸ் சார்பிலும் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள் - மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதிருப்திக்கு நிகழ்கால சான்றாகும். இந்நிலையில் “அம்பாறை மாவட்டத்தில் தேர்தலொன்று இடம்பெற்றால் ஒரு உறுப்பினரை பெறுதென்றால் கூட பல மில்லியன்களை வாரியிறைக்க வேண்டி ஏற்படும்” என்று மு.கா.வின் செயலாளரே தனக்கு நெருக்கமானவர்களுடன் சொல்லி புலம்புகின்றார் என்றால் பார்க்க வேண்டியதுதானே. இதுதான் எல்லாக் கட்சிகளும் நிலைப்பாடும்.

வடக்கில் தனித்தனி கொள்கைகளைக் கொண்ட தமிழ் கட்சிகள் பல ஒன்றிணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து அதில் வெற்றியும் கண்டுள்ளன. இதற்குப் பிறகும் முஸ்லிம் கட்சிகள் தனித்தனியே பிரிந்து நின்று ஆளுக்காள் குற்றம்சாட்டுவதிலும் காலத்தை கடத்துவதற்காக சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மட்டுமன்றி வாக்களித்த ஒட்டுமொத்த மக்களுமே வெட்கப்பட வேண்டும். 

மக்களின் உணர்வுகளை எக்காலத்திற்கும் புறந்தள்ளிவிட்டு, காலகாலத்திற்கும் ஏமாற்ற முடியாது. நீருக்குள் அழுத்தப்பட்ட பந்தைப்போல அவ்வுணர்வு ஒருநாள் மேல்கிளம்பும்.

அப்போது ‘முதலாளிமார்’ சிலர் ‘தொழில்’ இழப்பர்.

No comments