குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!
மப்றூக்
வாழைப்பழத்தைப் பார்த்து ஒருவர் பலாப்பழம் என்று கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். இதிலிருந்து நாம் இரண்டு எளிய முடிவுகளுக்கு வர முடியும்.
1. அந்த நபருக்கு வாழைப்பழம் என்றால் என்ன என்று தெரியாது.
2. அதே நபருக்கு பலாப்பழம் பற்றியும் தெரியாது.
சரி, இது எதற்கு இப்போது என்கிறீர்களா? இந்தக் கட்டுரையின் ஏதோ ஒரு புள்ளியில் மேலே சொன்ன விடயம் மீளவும் பேசப்படப் போகிறது. அப்போது இந்த உதாரணம் எதற்கு என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த பேரினவாத நெருக்குவாரங்கள் இன்னும் குறைந்த பாடில்லை. ஏற்கனவே 24 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. உணவு விடயத்தில் அனுபவித்து வந்த ஹலால் முறைமை கிட்டத்தட்ட பறிபோய் விட்டது. இவ்வாறு முஸ்லிம்களின் மத மற்றும் மன உணர்வுகளோடு முட்டி மோதிக் கொண்டு வரும் பேரினவாதப் பேயானது - இப்போது, முஸ்லிம்கள் உணவுக்காக மாடுகளை அறுப்பதைத் தடுக்கும் கோதாவிலும் குதித்துள்ளது.
இந்த நாட்டுக்கென்று சட்டங்கள் உள்ளன. சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் இருக்கின்றது. சட்டத்தை மீறுவோரைத் தண்டிப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் நீதித்துறை உள்ளது. ஆக – கண்டவர் நின்றவர்களெல்லாம் சட்டங்களை உருவாக்கவோ, பொலிஸார் போல் நடந்து கொள்ளவோ, அடுத்தவரைத் தண்டிக்கவோ முடியாது. அவ்வாறு செயற்படுவது சட்டப்படி குற்றமாகும்.
ஆனாலும், இப்போது நடப்பதெல்லாம் தலைகீழாகவே உள்ளன. காவி உடை அணிந்த ஒரு கூட்டம் - 'இந்த நாட்டின் உத்தியோகப்பற்றற்ற பொலிஸார் நாங்கள்தான்' என்கிறது. பள்ளிவாசல்கள் மீது அந்த பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். முஸ்லிம்களின் கடைகளில் பொருட்களை வாங்க வேண்டாம் என்று சிங்கள மக்களிடம் மேற்படி உத்தியோகப்பற்றற்ற பொலிஸார் பிரசாரம் செய்து வருகின்றனர். முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீது இந்தக் காவியுடைப் பொலிஸார் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
இந்த - உத்தியோகப்பற்றற்ற பொலிஸ்காரர்களினால் மேற்கொள்ளப்படும் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் குறித்து, அரச தரப்பிலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் வாயைத் திறப்பதில்லை. காவி உடைப் பொலிஸ்காரர்களைத் திட்டினால், ஆட்சியாளர்கள் கோபித்து விடுவார்களோ என்பது அவர்களின் பயமாகும். இதனால், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் போதெல்லாம், இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் 'ஒழித்து விளையாடி' வருகின்றனர்.
இன்னொருபுறம், சில முஸ்லிம் பிரதிநிதிகள் இதற்கும் மேல் சென்று – அரசுக்கு வக்காலத்து வாங்குகின்றனர். பௌத்த பேரினவாதிகளால் பள்ளிவாசல்கள் தாக்கப்படும் போதெல்லாம், இவ்வாறான முஸ்லிம் அரசியல்வாதிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு வந்து – 'பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதாகச் சொல்லப்படும் செய்திகளெல்லாம் வெறும் வதந்திகள்' என ஊடகங்களில் அறிக்கை விடுகின்றனர்.
இருந்தபோதும், மனச் சாட்சியுள்ள சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சமூகம் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். மேலும், தமிழ், சிங்கள – அரசியல்வாதிகளில் சிலரும், மேற்படி பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக பேசி வருகின்றனர்.
இவ்வாறு முஸ்லிம் சமூகம் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த அடக்குமுறைக்கு எதிராக பேசும் தமிழ் அரசியல்வாதிகளில் குறிப்பிடத்தக்கவர் மனோ கணேசன். யதார்த்தமான மனிதர். இனவாதம் பேசி அரசியல் செய்வதில்லை. முஸ்லிம், சிங்கள மக்களாலும் விரும்பப்படுபவர். முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதெல்லாம் - மனோகணேசன் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வந்தார்.
'ஹிரு' தொலைக்காட்சியில் இடம்பெறும் 'பலய' என்கிற அரசியல் விவாத நிகழ்ச்சியில் - மனோகணேசன் அண்மையில் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். அஸ்வர், சுமந்திரன் ஆகியோருடன் - சில சிங்கள அரசியல்வாதிகளும் வந்திருந்தனர்.
குறித்த நிகழ்சியில், தம்புள்ளையிலிருந்து தொலைபேசி வழியாக பொதுமகன் ஒருவர் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வரிடம் பேசினார். அதன்போது, 'தம்புள்ளை பள்ளிவாசல் மீதான அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், பள்ளிவாசலுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று அரசு கூறுகிறது. ஆட்சியிலுள்ள அரசியல்வாதிகளான நீங்களும் இவ் விடயத்தில் தலையிட்டு எவ்வித தீர்வுகளையும் பெற்றுத் தரவில்லை' என்று தொலைபேசி நபர் - அஸ்வர் மீது குற்றம் சாட்டினார். இதற்கு அஸ்வர் பதிலளித்தார். 'தம்புள்ளை பள்ளிவாசலுக்கு இப்போது எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அந்த விவகாரத்துக்கு அரசாங்கம் நல்ல தீர்வினைப் பெற்றுக் கொடுத்துள்ளது என்றார்'. இதன்போது குறுக்கிட்ட மனோகணேசன் - தம்புள்ளையிலிருந்து பேசும் நபர் பள்ளிவாசலுக்கு இன்னும் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறுகின்றார். ஆனால், பள்ளி விவகாரம் தொடர்பில் தீர்வு காணப்பட்டு விட்டது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். பூசி மெழுகாமல் நேரடியாகப் பதில் வழங்குங்கள் என்று அஸ்வரிடம் கூறினார்.
மனோகணேசன் இவ்வாறு கூறியமை அஸ்வருக்குப் பிடிக்கவில்லை. 'இலங்கையில் எந்தப் பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படவில்லை' என்றும், 'பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் சிறிய சம்பவங்கள்' என்றும் கூறிவருகின்ற பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு – மனோகணேசன் அப்படிப் பேசியமை கோபத்தினை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் அஸ்வர் நிதானமிழந்தார். 'கோயில்களைப் பற்றி வேண்டுமானால் பேசு. பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசுவதென்றால் சுன்னத் செய்து கொண்டு வா' என்று மனோகணேசனைப் பார்த்து உரத்த குரலில் கத்தினார்.
அஸ்வருடைய அந்தக் கூற்றானது அருவருப்பு நிறைந்த ஆபத்தான அரசியல் கோட்பாடொன்றினை மீளவும் தூசு தட்டும் வகையிலானது. முஸ்லிம்களுக்காக தமிழர்கள் பேசக் கூடாது. தமிழர்களுக்காக முஸ்லிம்கள் பேசக் கூடாது. அல்லது முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களும், தமிழர்களுக்காக தமிழர்களுமே பேச வேண்டும் என்கிற குரூரமான அரசியலைத்தான் மேற்படி கூற்றினூடாக அஸ்வர் முன்வைக்க முயற்சித்துள்ளார். இது – குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் குறுங் குழு வாத அரசியல் மனநிலையின் உச்ச வெளிப்பாடாகும்.
'பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசுவதென்றால் சுன்னத் செய்து கொண்டு வா' என்கிற கூற்றினூடாக அஸ்வர் தனக்குள் இருந்த வேறு சில மனப் பதிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். அவை:
1. பள்ளிவாசல்கள் பற்றிப் பேசுவதென்றால் - குறித்த நபர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.
2. முஸ்லிமாக இருப்பதென்றால் - சுன்னத் செய்திருக்க வேண்டும்.
3. முஸ்லிம் அல்லாத நபர்கள் சுன்னத் செய்வதில்லை.
ஆரம்ப பந்தியில் எழுதியுள்ள உதாரணத்தினை இப்போது படியுங்கள். வாழைப்பழத்தைப் பார்த்து ஒருவர் - பலாப்பழம் என்று கூறினால் - என்ன அர்த்தம்? அவருக்கு வாழைப்பழத்தினையும் தெரியாது. பலாப் பழத்தினையும் தெரியாது. அதுபோல, 'பள்ளிவாசல்களைப் பற்றிப் பேசுவதென்றால் சுன்னத் செய்து கொண்டு வா' என்று கூறியதனூடாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் - தனக்கு 'இஸ்லாத்திலும் தெளிவில்லை, பிற மதங்கள் பற்றிய புரிதலுமில்லை' என்பதை நிரூபித்துள்ளார்.
ஆணுறுப்பின் முன் தோலை நீக்குவதையே 'சுன்னத்' என்று நம்மவர்கள் கூறுகின்றனர். இதை தமிழில் 'விருத்த சேதனம்' என்பார்கள். 'கத்னா' என்றும் இதைக் கூறுவதுண்டு. 'கிதான்' எனும் அரபுச் சொல்லில் இருந்தே – 'கத்னா' எனும் சொல் உருவானது. 'கிதான்' என்கிற அரபுச் சொல்லுக்கு – 'ஆண் பிறப்புறுப்பின் நுனித்தோலை அகற்றுதல்' என்று அர்த்தமாகும்.
சமய அடிப்படையிலும், சுகாதார நோக்கம் கருதியும் 'சுன்னத்' செய்து கொள்ளப்படுகிறது. 'சுன்னத்' செய்து கொள்வது நபிமார்களின் வழிமுறையாகும். ஆனால், முஸ்லிம்கள் மட்டுமே 'சுன்னத்' செய்து கொள்வதில்லை. யூதர்களிடமும் இந்தப் பழக்கம் இருக்கிறது. ஆண்குறியின் முன்தோலை அகற்றுவதை யூதர்கள் 'மித்வா அசா' என்கின்றனர். கிறிஸ்தவர்களிடமும் 'சுன்னத்' செய்து கொள்ளும் பழக்கம் இருந்தது. இயேசு நாதர் பிறந்து எட்டாம் நாள் அவருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நிகழ்வினைச் சித்தரிக்கும் ஓவியங்கள் - இப்போதும் உள்ளன.
இப்றாஹிம் நபியவர்களிலிருந்தே சுன்னத் செய்து கொள்வது பரம்பரை வழக்கமாகியதாகச் சொல்லப்படுகிறது. இப்றாஹிம் நபியவர்கள் 80 வயதுக்குப் பிறகே 'சுன்னத்' செய்து கொண்டார்கள் என புகாரியில் ஒரு ஹதீஸ் உள்ளது.
'சுன்னத்' செய்யாமல் இஸ்லாமியராக இருக்க முடியாது என்றில்லை. ஆனால், இஸ்லாத்தில் 'சுன்னத்' செய்வது - வலியுறுத்தப்பட்ட ஒரு வழிமுறையாக உள்ளது. 'விருத்த சேதனம் செய்து கொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகிய ஐந்து விடயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
ஆக, 'சுன்னத்' செய்யாமல் முஸ்லிமாக இருக்க முடியாது என்றும், முஸ்லிமல்லாதவர்கள் சுன்னத் செய்வதில்லை எனவும் நினைத்துக் கொண்டிருக்கும் அஸ்வர் - பரிதாபத்துக்குரியவர்.
சக மனிதன் வருந்தும் போது, அவனுக்காக குரல் கொடுப்பதற்கு இனம், மதம், சாதி, குலம் போன்றவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கத் தேவையில்லை. இதற்கு கருணையுள்ள மனது மட்டுமே போதுமானதாகும். கருணையற்ற மனதில் கடவுள் இருப்பதில்லை என்பார்கள். அது இஸ்லாத்துக்கும் பொருந்தும்.
இது ஒருபுறமிருக்க, இப்படியான மனநிலை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வருக்கு – 'உயர்ந்த மண்ணின் உன்னத விருது' என்கிற பெயரில் ஒரு 'கௌரவம்' வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று மாநாகரசபைத் திறப்பு விழா நிகழ்வில் வைத்து, அமைச்சர் அதாஉல்லா இந்த விருதினை அஸ்வருக்கு வழங்கி வைத்துள்ளார்.
'அஸ்வரின் 'சுன்னத்' கதை பற்றிய சர்ச்சைகளின் ஈரம் இன்னும் காயவில்லை. அதற்குள் அவரை அழைத்து இவ்வாறானதொரு 'விருதினை' வழங்கியதனூடாக, அமைச்சர் அதாஉல்லாவின் அரசியல் 'சித்தாந்தம்' என்ன என்பதை - மேலும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார் – அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.
அக்கரைப்பற்று மாநகர சபைக்கான புதிய கட்டிடம் 11 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அதாஉல்லாவின் கீழுள்ள உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அதற்கான நிதியினை ஒதுக்கியிருந்தது.
அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்காக, நுரைச்சோலை பகுதியில் சஊதி அரேபிய அரசாங்கத்தின் 50 கோடி ரூபாவுக்கும் அதிகமான நிதியில் வீட்டுத் திட்டமொன்று அமைக்கப்பட்டுள்ளமை பற்றி நீங்கள் அறிவீர்கள். அந்த வீட்டுத் திட்டமானது - மக்களிடம் கையளிக்கப்படாமல் பல வருடங்களாகக் காடு பிடித்துக் கிடக்கிறது. இது பற்றி, இந்தப் பிராந்தியத்தின் அமைச்சரான அதாஉல்லா இதுவரை கரிசனைகள் எடுக்கவில்லை.
ஆனால், தனது மகனார் மேயராக இருக்கும் அக்கரைப்பற்று மாநகரசபைக்கு 11 கோடியில் நிதியொதுக்கி, தடல்புடலாக கட்டிடமும் நிர்மாணித்துக் கொடுத்து – திறப்பு விழாவினையும் அமைச்சர் அதாஉல்லா நடத்தி முடித்திருக்கின்றார். இந்த மாநகரசபைத் திறப்பு விழா நிகழ்வில்தான் 'உயர்ந்த மண்ணின் உன்னத விருதினை' அஸ்வருக்கு அதாஉல்லா வழங்கி வைத்தார்.
பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட போதெல்லாம், அமைச்சர் அதாஉல்லாவும் விசித்திரமாகவே நடந்து கொண்டார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் ஆரம்பித்தபோது, 'அது ஒரு கட்டுக்கதை' என்று அதாஉல்லா கூறினார். பின்னர், 'தம்புள்ளை பள்ளிவாசலின் ஒரு கூரைத் தகடு மட்டுமே சேதமாகியுள்ளது. அதற்காக, உணர்ச்சிவசப்படத் தேவையில்லை' என்றார். அதன்பிறகு, 'பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதும், உடைக்கப்படுவதும் புதிய விடயமல்ல. முஹம்மது நபியவர்களின் காலத்திலும் இவ்வாறு நடந்துள்ளது' என்றார். எல்லாவற்றுக்கும் பின்னர், 'பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் விவகாரம் குறித்து பேச வேண்டிய இடத்தில் நான் பேசுவேன்' என்றார். அதற்குப் பிறகு அமைச்சர் அதாஉல்லா பள்ளிவாசல் விவகாரங்கள் குறித்துப் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
உண்மையில், அஸ்வரும் - அதாஉல்லாவும் ஒரே படகில் பயணிப்பவர்கள். ஆட்சியாளர்களைப் பகைத்துக் கொண்டால் - இவர்களின் அரசியல் சூனியமாகிவிடும் என்பதை இவர்கள் அறிவார்கள். அதனால்தான் ஆட்சியாளர்களின் மனமறிந்து இவர்கள் பேசுகின்றனர். தங்கள் இயலாமையினை ஏனையோர் காட்டிக் கொடுக்கும் போது இவர்கள் பதட்டமடைகின்றனர்.
முஸ்லிம்களின் விவகாரத்தில் - ஏறச் சொன்னாலும் கோபமடைகிறார்கள். இறங்கச் சொன்னாலும் கோபமடைகிறார்கள்.
அரசியலில், இவர்களை - பெரும் புள்ளிகளாக சிலர் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், இந்தப் புள்ளிகளை வைத்து, முஸ்லிம் சமூகத்தின் 'வாசற்படி'களில், ஒரு 'அலங்கோலத்தினை'க் கூடப் போட்டு வைக்க முடியாது.
No comments