உழ்ஹிய்யாவுக்கு மாற்று வழிகள் கிடையாது - அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
ACJU/NGS/101/2013
01.10.2013
ஊடக அறிக்கை
உழ்ஹிய்யா கடமையை இந்நாட்டு முஸ்லிம்கள் பண்டுதொட்டு நிறைவேற்றி வருகின்றனர். என்ன இடையூறுகள் வந்தபோதிலும் அதனை நிறைவேற்றவே எந்தவொரு முஸ்லிமும் விரும்புவார். இந்நாட்டுக்கு இஸ்லாம் வந்துசேர்ந்தது முதல் நம்நாட்டு முஸ்லிம்கள் சன்மார்க்கக் கடமைகளை நிறைவேற்றுவதில் கவனமாக இருந்து வந்துள்ளனர்.
இடையிடையே எத்தனையோ இனக்கலவரங்களும் பிரச்சினைகளும் தோன்றிய போதிலும் சமயக் கடமைகளில் எந்தவொன்றையும் விட்டுக்கொடுக்கவோ அல்லது விட்டுவிடவோ இல்லை. அந்த அளவுக்கு அவர்களது ஈமானும் பலவீனமுற்று இருக்கவில்லை. நாம் இப்போது இனவாதிகளென காட்டப்படுவோம் என்பதற்காக அல்லது பிறரின் கண்டனங்களுக்காக அல்லது அவர்களது எதிர்ப்புகளுக்காக உழ்ஹிய்யாக் கடமையை விட்டுவிடவோ, நிறுத்திவிடவோ ஷரீஅத் எமக்கு அனுமதிக்கவில்லை.
முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்றும் அதை அடுத்துள்ள மூன்று தினங்களிலும் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுகின்றனர். இது ஒரு ஸுன்னா முஅக்கதா எனப்படும் உறுதியானதொரு ஸுன்னாவாகும். ஈதுல் அழ்ஹாவினது தினத்தன்று நிறைவேற்றக்கூடிய அமல்களில் உழ்ஹிய்யா கொடுப்பதைவிட சிறந்த அமல் வேறெதுவுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (திர்மிதி, இப்னுமாஜா). மேலும் நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது 63 ஒட்டகங்களை அறுத்து உழ்ஹிய்யாவை நிறைவேற்றினார்கள்.
வழமைபோன்று உழ்ஹிய்யா நிறைவேற்றுவது சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அரசாங்கத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடியுள்ளது. அதன் பெறுபேறாக இவ்வருடமும் வழமைபோன்று பாதுகாப்புத் தரப்பினருக்கு சுற்று நிருபம் அனுப்பப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று உழ்ஹிய்யாவை கொடுக்காமல் விடவோ, அதற்கு மாற்றீடுகள் செய்யவோ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எவருக்கும் ஆலோசனை வழங்கவில்லை என தெரிவித்துக் கொள்கிறது. மாறாக உழ்ஹிய்யா கொடுப்போர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், ஒழுக்க முறைகள் யாவும் பேணப்படவேண்டும். அது பற்றி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகங்கள் வாயிலாக ஏற்கனவே அறிவித்தல் கொடுத்துள்ளது.
அஷ்ஷைய்க் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளா;
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
No comments