ஒஸாமா தற்கொலை செய்து கொண்டாரா?
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரிலுள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த சமயம் 2011 மே 2 அன்று அல்கைதா இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி நாமறிந்ததே. ஆனால் அவர் அவ்வாறு சுட்டுக் கொல்லப்படவில்லை எனவும் தனது உடலில் கட்டியிருந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து தானாகவே உயிரை மாய்த்துக்கொண்டார் எனவும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தத் தகவல்களை 'கல்ப் நியூஸ்' பத்திரிகைக்கு தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல. ஒஸாமாவின் மெய்ப் பாதுகாவலராக பல வருடங்கள் கடமையாற்றிய நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் என்பவர் தான்.
எகிப்தின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் முன்னாள் தலைவரான அப்துல் பத்தாஹ் பல வருடங்கள் ஒஸாமாவின் மெய்பாதுகாவலராகவும் பணிபுரிந்திருக்கிறார். ஒஸாமா கொல்லப்பட்ட சமயம் அவருடன் பக்கத்தில் இருக்காவிடினும் ஒஸாமாவின் உறவினர் ஒருவர் மூலமாக இறுதிக் கட்டத்தில் நடந்த விடயங்களை அறிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
இனி அவர் சொல்வதைக் கேளுங்கள்....
'' அபோதாபாத்தில் ஒஸாமா பின்லேடன் தங்கியிருந்த கட்டிடத்தை கண்டுபிடித்து அமெரிக்கப்படையினர் தாக்குதல் நடத்தியது உண்மைதான்.
ஆனால் ஒபாமா சொல்வது போல ஒஸாமாவை அமெரிக்க படையினர் சுட்டுக் கொல்லவோ அவரது உடலை கடலில் வீசவோ இல்லை. அவை எல்லாம் பெய்யான கட்டுக் கதைகள்.
ஒஸாமா கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தனது உடலில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட பட்டி (பெல்ட்) ஒன்றை அணிந்தே இருப்பார். தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளிடம் பிடிபட்டால் இரகசியங்களை வெளிப்படுத்தி விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வே இதற்குக் காரணமாகும். அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் ஒஸாமாவை உயிருடன் பிடிக்கவே திட்டம் தீட்டினர். ஆனால் அவர்களது கணக்கு பிழைத்து விட்டது.
அவர் தன்னைத் தானே வெடிக்க வைத்து ஷஹீதாகிவிட்டார். தான் மரணிக்கும் வரை தனது போராட்டம் பற்றிய இரகசியங்களை பாதுகாக்கவே விரும்பினார். ஏனெனில் அவருக்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பல செல்வந்தர்கள் நிதி உதவிகளை செய்து வந்தனர். அவர்களை காட்டிக் கொடுத்து சிக்கலில் மாட்டிவிடுவதை அவர் விரும்பவில்லை.
கஃபதுல்லாஹ்வின் முன்னால் நின்று அவர் தான் மரணிக்கும் வரையும் இந்தப் போராட்டத்தின் இரகசியங்களை பாதுகாப்பேன் என உறுதி மொழியெடுத்திருந்தார்.
ஒஸாமா பின்லேடனின் இருப்பிடத்தையோ அல்லது அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்களையோ கண்டுபிடிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. அவரது மெய்பாதுகாவலர்கள் யெமனிக்கள் அல்லது சவூதி அரேபியர்களே. வேறு எந்த தரப்பினையும் அவர் தனது மெய்பாதுகாவலர்களாக வைத்துக் கொள்வதில்லை.'' என்றார்.
ஒஸாமா பின்லேடன் இருக்கும் இடத்தை அமெரிக்கா எப்படிக் கண்டுபிடித்தது? எனும் கேள்விக்கு அப்துல் பத்தாஹ் இவ்வாறு பதிலளிக்கிறார்.
''குவாண்டனாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட குவைத் நாட்டவர் ஒருவரின் சகோதரர் பின்லேடனுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்.
2008 ஆம் ஆண்டு இவர் குவைத்தில் இருப்பதை சீ. ஐ. ஏ. கண்டுபிடித்த போதிலும் அவரது நடமாட்டங்களை அவதானிக்கு நோக்கில் அவரைக் கைது செய்ய வேண்டாம் என குவைத் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டது. அந்த நபர் தனது குடும்பத்தை சந்திக்கும் நோக்கில் போலியான கடவுச் சீட்டைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு அடிக்கடி போய் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்
.
அவரது தொலைபேசி உரையாடல்களை அமெரிக்க புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக பதிவு செய்ததுடன் அவருடன் தொடர்பில் இருப்பவர்களையும் கண்டுபிடித்தனர்.
ஆனால் அவர் சில இடங்களுக்குச் செல்லும் போது மாத்திரம் தனது கையடக்கத் தொலைப்பேசியை நிறுத்தி வைப்பதையும் அச் சமயம் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடியாதிருப்பதையும் அவதானித்தனர்.
பல மாதங்களாக இந்த நபரை அமெரிக்க புலனாய்வாளர்கள் பின் தொடர்ந்த போதிலும் பின்லேடன் இருக்குமிடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனையடுத்து வேறு திட்டம் ஒன்றைத் தீட்டினர். குறித்த பகுதியில் சிறுவர்களுக்கு சின்ன அம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை தொடங்கினர். இதன் மூலமாக அப்பகுதியில் உள்ள பிள்ளைகளின் இரத்த மாதிரிகளை சேகரித்து டி. என். ஏ. பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன் மூலம் அப் பகுதியில் அரபு வம்சாவளியைக் கொண்ட பிள்ளைகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டனர். ஏலவே அபோதா பாத்தில் ஒஸாமா மறைந்திருப் பதற்கான சாத்தியங்களை வேறு வழிகளில் பெற்றிருந்த சி.ஐ.ஏ.வினர் அங்கு பெறப்பட்ட சில டி. என். ஏ. மாதிரிகளும் பின்லேடன் பரம்பரையுடன் ஒத்திருந்த தையடுத்து தமது எதிர்பார்ப்பை உறுதிப் படுத்திக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்தே அபோதாபாத்தில் ஒஸாமா தங்கியிருந்த கட்டிடத்தை இலக்கு வைத்து தமது தாக்குதல் நடவடிக்கை தொடங்கினர்.
பின்லேடனும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் அமெரிக்க படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். அமெரிக்க படையினர் வந்திறங்கிய ஹெலிகெப்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவரது மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பின்லேடனின் முழங்காலில் துப்பாக்கிச் சூடு பட்டது. அச் சமயத்தில்தான் அவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுப் பட்டியை வெடிக்கச் செய்தார். அவரது உடல் அடையாளம் காணவே முடியாதளவு துண்டு துண்டாக சிதறிப் போனது.
ஒஸாமாவின் உடலை தாம் கைப்பற்றியதாகவும் கடலில் அடக்கம் செய்ததாகவும் ஒபாமா பீற்றிக் கொள்கிறார். அவர் பொய் சொல்லி உலகையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
எது எப்படியிருந்தாலும் ஒஸாமாவின் மனைவி என்றோ ஒரு நாள் உலகுக்கு இந்தக் கதையைச் சொல்லத்தான் போகிறார் என்றும் பத்தாஹ் மேலும் குறிப்பிடுகிறார்.
* நபீல் நயீம் அப்துல் பத்தாஹ் எகிப்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.1988 முதல் 1992 வரை எகிப்தின் இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் தலைவராக இவர் கடமையாற்றியிருக்கிறார். இருப்பினும் ஹுஸ்னி முபாரக் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்ட இவர் 20 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தார்.முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்த சில வாரங்களில் விடுவிக்கப்பட்டார்.
No comments