ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியமை அம்பலம் - சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் தர தயாராகுகிறது!
சிரியா சண்டையில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியது அம்பலமானதால் கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக இராணுவ உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதனால் அதிபர் ஆசாத்துக்கு நெருக்கடி முற்றுகிறது. சிரியா நாட்டின் அதிபராக இருக்கும் பசீர் அல்�ஆசாத்தை பதவியில் இருந்து விரட்ட 2 ஆண்டுக்கும் மேலாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது. இதை ஒடுக்க அதிபர் ஆசாத் இராணுவத்தை ஏவி விட்டுள்ளார். தலைநகர் டமாஸ்கஸ் புறநகர் பகுதி, அலிப்போ, ஹோம்ஸ் ஆகிய இடங்களில் கடும் சண்டை நீடிக்கிறது.
இதில் பலியானோர் எண்ணிக்கை 93 ஆயிரமாக உயர்ந்து விட்டது. சமீபத்தில் மாதம் தோறும் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை எட்டி விட்டதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இது மட்டுமின்றி லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எனவே இதை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சி எடுத்தும் சிரியா முட்டுக்கட்டை போடுகிறது. ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவு கொடுக்கின்றன. இந்நிலையில் சிரியாவில் நடைபெறும் சண்டையில் அதிபர் ஆசாத்தின் இராணுவம், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது குறித்து நிபுணர்கள் ஆய்வு நடத்தினர்.
அதில் சிரியா ராணுவத்தினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கானோரை கொன்று குவித்திருபது அம்பலமானது. அதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உறுதி செய்தன. இவ்வாறு ரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது சர்வதேச விதிமுறைக்கு எதிரானதாகும். எனவே இதன் மூலம் சிரியா அதிபர் ஆசாத் அபாயகர எல்லைக்கோட்டை தாண்டி விட்டார்.
இதன் எதிரொலியாக சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா நேரடியாக ராணுவ உதவி வழங்க முன் வந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோடிஸ் கூறியதாவது:
எங்களுடைய உளவுத்துறை ஆய்வு செய்ததில் ஆசாத் அரசுப்படை ரசாயன ஆயுதங்களை வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இவை பல தடவை பயன்படுத்தப்பட்டு 100 முதல் 150 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த புள்ளி விவரம் இன்னும் நிறைவடையவில்லை. இத்தகைய அபாயகர ஆயுதங்களை பாதுகாக்க ஆசாத் அரசு தவறி விட்டது.
ஆதலால் சிரியா எதிர்தரப்பினருக்கு கூடுதல் உதவி செய்வது என ஜனாதிபதி ஒபாமா முடிவு செய்திருக்கிறார். கிளர்ச்சியாளர்களுக்கு நேரடியாக ராணுவ உதவி உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும். எந்த வகையில் இந்த உதவி அளிக்கப்படும் என்பது தக்கநேரத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால் என்னென்ன ஆயுதங்கள், எப்போது வழங்கப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. சிரியா கிளர்ச்சியாளருக்கு ஆயுத உதவி அளிப்பதற்கு அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். அமெரிக்கா உதவி அளிக்க முன்வந்திருப்பது கிளர்ச்சியாளருக்கு உற்சாகம் கொடுத்துள்ளது. பீரங்கி, விமான எதிர்ப்பு ஆயுதங்கள் தரும்படி கோருகிறார்கள்.
ராணுவ உதவி அளிக்கும் போது அவை தீவிரவாதிகள் கைக்கு சென்று விட கூடாது என அமெரிக்கா கருதுகிறது. எனவே ஜோர்டானை யொட்டியுள்ள பகுதியை விமானம் பறக்காத பகுதியாக அறிவிக்கலாமா? என்று ஆய்வு செய்கிறார்கள். சமீபத்தில் சிரியா ராணுவமும், ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இணைந்து சண்டை போட்டு கிளர்ச்சியாளர்களிடம் இருந்து பல நகரங்களை மீட்டார்கள். தற்போது அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் அதிபர் ஆசாத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.
No comments