ஈரானில் விறுவிறுப்பான தேர்தல் - அடுத்த அதிபர் யார் என்று இன்று தெரியவரும்!
ஈரானில் அதிபர் பதவிக்கான தேர்தலில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய நாடுகளின் தனிமைப்படுத்தல் மற்றும் அண்டை நாடுகளுடனான பிரச்னை ஆகியவற்றுக்கு மத்தியில் ஈரான் அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஈரான் நேரப்படி காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நீடித்தது.காலை 8 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
பழமைவாதிகள், சீர்திருத்தவாதிகள் என இரு பிரிவுகளில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிபர் தேர்தலோடு மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலும் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தேர்தலில் வாக்களிக்க 5 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். தேர்தலில் 50.1 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் இந்த அளவு வாக்குகளை பெறாத பட்சத்தில், இரண்டாம் முறையாக வாக்குப்பதிவு நடைபெறும்.
தெஹ்ரான் மேயர் முகமது பாகர் கலிபாஃவ், மதத் தலைவர் ஹஸன் ரவ்ஹானி, முன்னாள் அணுசக்தி தூதர் சயீத் ஜலீல் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments