Breaking News

அனைத்து இன மக்களும் தமது கலாசார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமை உடையவர்கள்: ரணில்

Ranil நாட்டின் அனைத்து இன மக்களும் தமது சமய கலாசார மரபுகளை பேணி சுதந்திரமாக வாழும் உரிமை உடையவர்களாக அந்த வகையில் இன்று முஸ்லிம்களுக்கு பிரச்சினை எழுகின்ற போது அதற்கு குரல் கொடுப்பதற்கான அரசியல் வாதிகளை காண முடியாதுள்ளது.

எனவே முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் எழுகின்ற போது அதனை ஐக்கிய தேசிய கட்சிக்கு அறிவியுங்கள் நாம் அதனை பாராளுமன்றம் வரையில் எடுத்துச் சென்று குரல் எழுப்புவோம் என எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தைச்சேர்ந்த முஸ்லிம் சமய உலமாக்கள் பள்ளிவாசல்களின் நிர்வாக சபை பிரதிநிதிகள் முஸ்லிம் பிரமுகர்கள் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் வர்த்தகப் பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று கண்டி அணிவத்த ரிவடேல் ஹோட்டல் மண்டபத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு உறுதியளித்தார்.

இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, லக்ஷ்மன் கிரியெல்ல, எம்.எச்.ஏ.ஷலீம், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர், எம்.எஸ். சாபி, உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது முஸ்லிம் உலமாக்கள, பள்ளிவாசல் நிருவாகச் சபை பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டததரணிகள் என பலதரப்பட்டவர்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கும் சில பள்ளி வாசல்களுக்கும் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

இவற்றிற்கு பதிலளித்துப் பேசிய எதிர்கட்சித்தலைவர் மேலும் கூறுகையில் முஸ்லிம்களுக்கான பிரச்சினைகள் குறித்து நாம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்து வருகின்றோம்.

மேல்மாகாணத்தில் ஆளுநர் ஒருவர் முஸ்லிமாக இருந்த இருந்த போதிலும் பெஷன் பக் வர்த்தக நிலையம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து எவ்விதமான குரலும் எழுப்பவில்லை. அதேபோன்று முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம்கள் விடயத்தில் எவ்வித கவனமும் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசிய கட்சியினால் புதிய யாப்பு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் சகல இன மக்களும் நாட்டில் தாங்கள் சமய கலாசாரங்களைப் பேணி சுதந்திரமாக வாழ்வதற்கான வரைபுகளை உட்படுத்தியுள்ளோம்.

நாம் நீண்டகாலமாக சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினை அமைக்கக்கோரி வலியுறுத்தி வருகின்றபோதும் அது இன்றுவரை நிறைவேறவில்லை. அதனை அமைத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. பொலிஸாரும் இன்று அரசியலுக்கு அடிமையாகிவிட்டார்கள். அவர்களால் நீதி - நியாமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

மாதுறுவாவே கோபித்த தேரரை சந்தித்து எமது யாப்பு குறித்து கலந்துரையாடினேன். அவர் அரசியல் அமைப்பின் 17 ஆவது ஷரத்தை வலியுறுத்தினார். அதன் மூலம் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு அனைத்து ஆணைக்குழுக்களும் அமையப்பெறும். அதனூடாக பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படலாம் என்றும் கூறினார். அதனையும் நாம் எமது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளோம்.

ஒருவர் இலங்கைப்பிரஜை என்றால் அவருக்கு இந்நாட்டில் அனைத்து உரிமைகளும் உரித்தாகின்றது. மதத்தையும் கலாசாரத்தையும் அடிப்படைகளையும் அவர் பேணவேண்டும்.

இன்று பல்வேறு பிரிவுகள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கி வருகின்றனர். அவற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதி்ல்லை.

No comments