இலங்கையை கவனமாக அவதானிக்கிறது அமெரிக்கா - தூதுவர் ஸ்டீபன் ராப்
தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, இலங்கையை அமெரிக்கா கவனமாக அவதானித்து வருவதாக, போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்டீபன் ஜே ராப் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க்கில் உள்ள ஐ.நா செயலகத்தில், நேற்று செய்தியாளருக்கு அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
“இலங்கையில் போரின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பாக பொறுப்புக்கூறப்படாதது, மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதது குறித்த எமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் வகையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், அமெரிக்காவினால் இரண்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை இலங்கைக்குக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை அரசுடன் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்காக, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் மற்றும் சிறப்பு பிரதிநிதிகளை இணைந்து செயற்படும்படி கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கோரியுள்ளது.
தேவையான அடுத்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து முடிவு செய்வதற்கு, அமெரிக்கா மிகக்கவனமாக அவதானித்து வருகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார் என இன்னர் சிற்றி பிரஸ் வெளியிட்டுள்ளது.
No comments