விகாரைக்கு அருகில் சூதாட்ட நிலையம்; பொதுபலசேனா மௌனம் - தம்பர அமில தேரர்
கசினோ சூதாட்ட மத்திய நிலையம் இங்கு ஆரம்பிக்கப்பட்டால் அது இலங்கையின் சிறிய அரசாங்கமாக நாட்டை ஆட்டிப்படைப்பதோடு அரசியல், சமூக, பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் தலையெடுக்கும் என ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. சிங்கம் பசித்தாலும் அழுகிய இறைச்சியை உண்பதில்லை. ஆனால் அரசாங்கம் பணத்துக்காக எந்தவிதமான கீழ்த்தரமான வேலையையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் அவ்வியக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய இவ்வியக்கத்தின் ஏற்பாட்டாளர் தம்பர அமில தேரர்,
அவுஸ்திரேலியாவின் கசினோ சூதாட்ட அரசன் ஜேம்ஸ் பெக்கர் அண்மையில் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு திரும்பி சென்றுள்ளார். இதன் போது அரச உயர் மட்ட தலைவர்களை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொழும்பு டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் கசினோ மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியையும் பார்வையிட்டு சென்றுள்ளார். இந்தக் காணி எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பது தெரியவில்லை. இங்கு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான பொருட்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு வருவதற்காக 4 வருட கால வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் பெக்கரின் சூதாட்டத்திற்கு 25 வருட கால வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் வரிச்சட்டங்கள் அனைத்தையும் மீறியே இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் கசினோ சூதாட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அதனோடிணைந்து போதைவஸ்து, மது, மாது, விபசாரம் என அனைத்து கலாசார சீரழிவுகளும் ஆரம்பமாகும். இம்மத்திய நிலையம் சம்போதி விஹாரைக்கு அண்மையாகவே நிர்மாணிக்கப்படவுள்ளது. இதுவா அரசாங்கத்தின் தேசப்பற்று? பௌத்த கலாசாரம்? கசினோ சூதாட்டம் மது, மாது, விபசாரம் மற்றும் போதைவஸ்து மூலமா நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் கொள்கைகள்? இதனை பொதுபலசேனா ஆதரிக்கின்றதா? கசினோ சூதாட்ட மத்திய நிலையம் ஆரம்பிக்கப்படாமைக்கு முன்னர் அவ்விடத்தை பொதுபலசேனா முற்றுகையிடப் போகின்றதா?
இல்லா விட்டால் மத்திய நிலையம் அமைத்த பின்னர் முற்றுகையிடப் போகின்றதா? மேற்குலக நாடுகள் ஏனைய நாடுகளை வீழ்ச்சியடையச் செய்வதற்கு அந்நாடுகளில் கசினோ சூதாட்ட மத்திய நிலையங்கள் அமைக்கின்றன. படிப்படியாக இது நாட்டுக்குள் சிறிய அரசாங்கமாக தலையெடுப்பதோடு அந்நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதாரங்களை தீர்மானிக்கும் சக்தியாகவும் உருவெடுக்கும். கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரம் இவ்வாறே வீழ்த்தப்பட்டது. இங்கும் அதே நிலை தான் உருவாகும். எனவே இதற்கு எதிராக அனைத்து மதத் தலைவர்களும் பிரசாரம் செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் பணத்துக்காக எதனையும் செய்யத் தயாராகி விட்டது என்றும் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.
No comments