Breaking News

ஹெல உறுமயவின் தனிநபர் பிரேரணை இனவாதத்தை அடிப்படையாக கொண்டது - சோமவன்ச அமரசிங்க

Somawansa 5_CI அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையானது பௌத்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே, இதற்கு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆதரவளிக்காது. மாறாக தேசியளவில் புதிய அரசியல் அமைப்பொன்றுக்கான தேவை காணப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். அனைத்து இன மக்களுக்கும் சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம் என்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய அரசியல் அமைப்பு நிறுவப்பட வேண்டும். அவ்வாறு அல்லாது தற்போதுள்ள அரசியலமைப்பில் சிறு சிறு திருத்தங்களை ஏற்படுத்தி நாட்டில் இனவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுப்புக்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமய 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக தனிநபர் பிரேரணையினை பாராளுமன்றத்தில் முன்வைத்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு வலியுறுத்தி அனைத்து கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது. ஆனால், இப்பிரேணையில் நியாயமான நோக்கங்கள் எதுவும் இல்லை. மாறாக இனவாதத்தை அடிப்படையாக கொண்ட உள்நோக்கங்களே காணப்படுகின்றது. அனைத்து இன மக்களுக்கும் சமத்துவமான சந்தர்ப்பங்கள், சமாதானம் மற்றும் சகோதரத்துவம் என்பவை உரியவகையில் கிடைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து இன மக்களுக்கும் பொருளாதார மற்றும் அரசியல் சமத்துவம் கிடைக்கும். இல்லையென்றால் இன முரண்பாடுகளே தோன்றும்.

தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமையானது ஏற்றுக்கொள்ளும் விதத்திலோ அனைத்து இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலோ அமையவில்லை. எனவே, இம்முறைமையினை முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. தொடர்ந்தும் உள்ளது. 13ஆவது திருத்தச்சட்டத்தை பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலை உண்மையான தன்மையை கடந்து சென்றுள்ளது. எனவே, இதனை மாத்திரம் திருத்தத்திற்கு உட்படுத்துவதால் எவ்விதமான பலனும் ஏற்படப்போவதில்லை. ஆளும் தரப்பினரால் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளானது வெறும் அரசியல் மற்றும் குறுகிய நோக்கங்களையே கொண்டுள்ளது எனக் கூறினார்.

No comments