எக்னெலிகொட உயிருடன் உள்ளாரெனில் அரசாங்கம் ஏன் அதில் அக்கறை காட்டவில்லை : ரணில் கேள்வி
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பிரான்ஸில் வசிப்பதாக அரசாங்கம் கூறுகின்றதென்றால் ஏன் அவ்விடயத்தை அந்நாட்டு அரசாங்கத்துடன் பேசி நடவடிக்கை எடுப்பதில் அக்கறை காட்டவில்லை என பிரதான எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்திலேயே காணமால் போயுள்ளார். ஆனால் அவர் உயிருடன் பிரான்ஸில் வசிப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது. அது அவ்வாறிருந்தால் ஏன் அரசாங்கம் அது குறித்து அந்நாட்டு அரசாங்கத்துட்ன பேசி நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டவில்லை. அது தொடர்பில் ஏன் தேடுதல்களை மேற்கொள்ளவில்லை. இது இலங்கையில் ஜனநாயகம், ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பிலான நிலைப்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. தற்போது இடம்பெறும் ஆட்சியில் மக்கள் ஆணைக்கு முன்னுரிமை இல்லை.
ஐக்கிய தேசியக் கட்சியினால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு யாப்பின் பிரகாரம் மக்கள் ஆணைக்கே முன்னுரிமையளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிகாரங்களை பகிர்ந்து எவ்வாறு மக்கள் ஆணையை பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments