Breaking News

உயிர் நண்பனால் பறிக்கப்பட்ட உயிர்: பம்பலப்பிட்டி கொலை அதிர்ச்சி தகவல்கள்

muslim busnessman siyam பம்பலப்பிட்டியில் வசித்து வந்த இளம் வர்த்தகர் சியாம் உஸாம்தீனின் மர்மக் கொலை குறித்து அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 22ஆம் திகதி இரவு காணாமல் போன பாதணி கைத் தொழிற்சாலை உரிமையாளர் சியாமின் சடலம் எட்டு நாட்களின் பின் தொம்பேயில் கண்டெடுக்கப்பட்டது.

எட்டு நாட்களாகத் தகவல் எதுவும் இல்லாத காணாமல் போயிருந்த சியாமின் சடலம் கடந்த வியாழனன்று வைத்தியசாலை சவச்சாலையில் அடையாளங் காணப்பட்டது. மர்மமான இக் கொலை தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையை அடுத்து கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் (சி.சி.டி.) மேற்கொண்ட விசாரணையை அடுத்து இக் கொலை தொடர்பான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சியாமின் குடும்பத்தினர் செய்த முறைப்பாட்டையடுத்து சீனா செல்வதற்கு முன் உயர்மட்ட பொலிஸ் மகாநாடொன்றைக் கூட்டி 48 மணி நேரத்துக்குள் கொலைஞர்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென ஜனாதிபதி பணித்திருந்தார்.

படுகொலை செய்யப்பட்டவரை கடைசியாக இடம்மாற்றிய இடத்தில் வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த CC TV கமரா மூலம் பெற்ற சாட்சியங்களின்படி கொல்லப்பட்ட வர்த்தகர் சியாமுடன் எட்டு வருடங்களாக மிக நெருங்கிச் செயற்பட்ட அவரது வர்த்தகச் சகாவை இரகசியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திய பின்பே கொலை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

கடந்த 22ஆம் திகதி கொல்லப்பட்டவரும் அவரது கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகரும் கொழும்பு மயூரா வீதிப் பள்ளிவாசலில் இரவு நேர இசாத் தொழுகையை நிறைவேற்றியுள்ளனர். சியாம் கடிகாரங்களுக்கு மிக விருப்பம் உடைய ஒருவராகையால் கடிகாரம் ஒன்றிருப்பதாகக் கூறி நுகேகொடைக்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ளார்.

சியாமின் வாகனத்திலே இருவரும் சென்றுள்ளனர். நுகேகொடை கந்தேவத்த வீதியருகில் வாகனம் நிறுத்தப்பட்டு பிக்கப் வாகனம் ஒன்றிற்கு சியாம் அழைத்துச் செல்லப்பட்டார். சியாமை கொலை செய்வதற்காக கொந்திராத் வழங்கப்பட்டிருந்த பாதாள உலக கோஷ்டியினரிடம் சியாம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இரவு 8.25 மணியளவில் சியாம் குறித்த வாகனத்தில் கையளிக்கப்பட்டுள்ளார். பிக்கப் வாகனத்திற்கு மாற்றப்பட்ட போதே தான் சிக்கலில் மாட்டியிருப்பதனை சியாம் உணர்ந்துள்ளார். தன்னை ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் எனக்கேட்க உமது சகாவின் வேண்டுகோளின் பேரிலே இதனைச் செய்கின்றோம் என கொலைஞர்கள் தெரிவித்ததாக பிக்கப் வாகனச் சாரதி பொலிஸாருக்களித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த வாகனத்திலிருந்தே தனது நண்பருடன் சியாம் கைத்தொலைபேசியூடாகப் பேசி நீர் கேட்பதனையெல்லாம் தருகின்றேன். எனது சப்பாத்துத் தொழிற்சாலையையும் எழுதித் தருகின்றேன் என்னை விடுதலை செய்வதற்கு உத்தரவிடுமாறு கேட்டுள்ளார்.
வெளியே வந்ததும் அப்படி நீர் செய்யமாட்டீர் எனக்கூறி பதிலளித்துள்ளதாக சாரதி தெரிவித்துள்ளார்.

கொல்லப்படுவதற்கு முன் சியாமின் கழுத்து வயறினால் கட்டப்பட்டுள்ளது. பின்பு அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இரு கண்களுக்கும் நெஞ்சிற்குமே துப்பாக்கி பிரயோகஞ் செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட தினம் இரவு 9 மணியளவில் சியாம் கொல்லப்பட்டுள்ளார்.

சியாமைக் கடத்திச் சென்ற தினம் இரவே சியாமின் வர்த்தக சகா சியாம் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதே நேரம் சியாமின் வீட்டிலிருந்து கொண்டு அவரது குடும்பத்துடன் ஈடுபட்டதாக குடும்ப அங்கத்தவர்கள் தெரிவிக்கின்றனர். சியாமின் பாதணித் தொழிற்சாலையை தம் வசப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கொலையைச் செய்திருப்பார் என குடும்பத்தவர்களும் பொலிஸாரும் சந்தேகிக்கின்றனர்.
சியாம் தம் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்தபோது இந்தப் பாதணித் தொழிற்சாலையை சியாமின் சகாவே நிர்வகித்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான சியாம் தர்கா நகரைச் சேர்ந்த மூன்றாம் குறுக்குத் தெரு வர்த்தகர் அல்ஹாஜ் ஹுஸாம்தீனின் மூத்த மகனாவார். இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வர்த்தகரும் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவர் தலை நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் நம்பிக்கையாளராகவும் பணி புரிகிறார்.

உரிய நேரத்தில் ஜனாதிபதி தலையிட்டதால் இக் கொலை பற்றிய தகவல்கள் வெளியாகின. இல்லாவிட்டால் இது மர்மமாகவே இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதிக்கு இதற்காக விசேட நன்றியைத் தெரிவிப்பதாகவும் குடும்ப அங்கத்தவர் ஒருவர் தெரிவித்தார்.

இக்கொலையை செய்வதற்கு பொறுப்பேற்ற கொந்திராத் குழு உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் ஆசிர்வாதத்துடன் செயற்படுவதாக சில இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பாகவும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கொலை தொடர்பாக முஸ்லிம் வர்த்தகர் உட்பட ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இக் கொலை தொடர்பாக கொழும்பு பொலிஸ் பிரிவின் குற்றத்தடுப்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணவீர தலைமையில் விசேட பொலிஸ் கோஷ்டி ஒன்று விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

சியாமின் கொலையில் பாதாள சூத்திரதாரியாகக் கருதப்படும் அவரது எட்டு வருட நண்பர் தான் அவரைக் கடத்தி பாதாள உலகத்திடம் கையளித்ததாக வெளிவந்த செய்தி குறித்து குடும்பத்தினர்கள் பெரும் அதிர்ச்சியும் ஆத்திரமும் கொண்டுள்ளனர்.

சியாம் காணாமல் போன தினத்தன்று இரவு சியாமின் மனைவி குறிப்பிட்ட நண்பருடன் தொலைபேசியில் பேசி, தனது கணவருடன் பேச வேண்டுமென்று கூறியுள்ளார். அப்போது, அவர் என்னுடன் இருக்கவில்லை என்றார். அப்போது தான் சியாம் காணாமல் போயிருப்பதாக ஊகித்துக் கொண்டேன் என கைது செய்யப்பட்டுள்ள சியாமின் நண்பர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தாருடன் சியாமினைத் தேடியபோது சூத்திரதாரி அவர்களுடன் சேர்ந்தே சியாமைத் தேடியுள்ளார். ஒரு கட்டத்தில் விசாரணை நடத்திய பொலிஸார் சூத்திரதாரியைக் கைது செய்ய முற்பட்ட போது தடுத்துள்ளனர்.

கொலைக்கு மற்றுமொரு காரணமாக சியாம் நட்பின் அடிப்படையில் குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட 21 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட பணம் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

தொடர்புடைய செய்திகள்:

பிரதிப் பொலீஸ் மா அதிபர் வாஸ் குனவர்தன கைது செய்யப்படலாம்?

முஸ்லிம் வர்த்தகர் கொலை: 3 பொலிஸ் அதிகாரிகள் கைது

21 கோடி ரூபா கடனே கொலைக்கு காரணம்

No comments