அதிகாரத்தைப் பகிர்வது சிக்கலை ஏற்படுத்தாது! சரத் பொன்சேக்கா
அதிகாரத்தைப் பகிர்வது சிக்கலை ஏற்படுத்தாது என முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேக்காவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய சரத் பொன்சேக்கா இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்காவின் செயலாளரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியுமான சேனக சில்வா உள்ளிட்ட இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 10 பேருக்கு தங்க இடமளித்து, ஊதியம் வழங்கியதாக குற்றஞ்சுமத்தி இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்துரைத்த சரத் பொன்சேக்கா, சட்டரீதியாக வடக்கு கிழக்கில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஏனைய பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட, திட்டங்கள் வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
அவ்வாறு தேர்தல் நடத்தப்படாவிடின் அந்தப் பிரதேசம் தனிநாடாகவே கருதப்படும் என்றும் ஒரு தனிநபருக்குத் தேவையான வகையில் அனைத்தையும் செய்ய முடியாது என்றும் நாட்டின் எதிர்காலத்தை தனிநபருக்குத் தேவையான வகையில் தீர்மானிக்க இடமளிக்க முடியாது எனவும் சரத் பொன்சேக்கா கூறினார்.
No comments