Breaking News

பம்பலப்பிட்டி படுகொலை: கொலைஞர்கள் சிக்கியது எப்படி?

vaasமே மாதம் 23ஆம் திகதி தொம்பே பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி மணி ஒலித்தது. அதிகாரி ஒருவர் பதிலளித்தார்.

`கூட்டுறவு சங்கக் கடையருகே உள்ள காட்டில் சடலம் ஒன்று இருக்கிறது. ஆடை எதுவும் இல்லை. யாருடையது என்றும் தெரியாது’ விரைவில் வாருங்கள் என்று தொலைபேசியில் மறுபக்கத்திலிருந்து பேசியவர் கூறினார்.

`யார்…?’ என்று கேட்டபோது அழைத்தவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

மீபாவிட கூட்டுறவுக் கடையருகே பொலிஸார் சென்றபோது அங்கு பெருந்தொகையான மக்கள் கூடியிருந்தனர். நிர்வாணத்துடன் வயிற்றிலும் தலையிலும் சுடப்பட்ட, ஒரு சடலம் இருப்பதை அங்கு சென்ற பொலிஸாரால் அவதானிக்க முடிந்தது. சடலம், கம்பஹா பொதுவைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

இதேநேரம், பம்பலப்பிட்டி பிரதேசத்தில், சியாம் என்ற வர்த்தகர் ஒருவர் கடந்த மாதம் 22ஆம் திகதி முதல் காணாமல் போயிருப்பதாக பெளஸ்தீன் என்ற வர்த்தகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதன்படி, கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். கம்பஹா வைத்தியசாலையில் வைத்திருந்த சடலத்தைக் காட்டுவதற்காக சியாமின் சகோதரரான முஹம்மத் சஹ்வானை அழைத்துச் சென்றனர். காணாமல்போய் 7 நாட்கள் கடந்திருந்த நிலையில், அது தனது சகோதரரின் சடலமே என சஹ்வான் அடையாளம் காட்டினார்.

இதன்படி கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முடுக்கவிட்டனர். உடனடியாக கொழும்பில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமெராக்களை பரிசோதித்தனர். அதில் அவர்களால் எவ்வித சான்றுகளையும் தேடிக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், நுகேகொட கந்தவத்தை பகுதியில் கைவிடப்பட்ட வாகனமொன்று இருப்பது பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இது சியாமின் KV 3639 என்ற இலக்க வாகனமாகும். மோட்டார் கார் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராவைப் பரிசோதித்தபோதுதான் சியாமை மற்ற வாகனமொன்றுக்கு மாற்றும் காட்சி உள்ளிட்ட விபரங்கள் பதிவாகியிருந்தன.

இந்த வீடியோ காட்சியின்படி, சியாமின் ஆருயிர் நண்பர் பற்றிய சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் அவரை கைதுசெய்தனர். அவர் வழங்கிய தகவல்களை அடுத்து, சியாமின் மற்றொரு நண்பரான கோட்டையைச் சேர்ந்த சிறிசாந்த என்பவரும் கைதுசெய்யப்பட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்த பணிப்புரைக்கமைய விசாரணைகள் துரித்தப்படுத்தப்பட்டன. இதன்படி கைதுசெய்யப்பட்ட இருவரும் வெளியிட்ட தகவல்களின்படி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேர் இந்தக் கொலையைச் செய்துள்ளதாகத் தெரியவந்தது. இதன்படி, குறித்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைதுசெய்ய இரகசியப் பொலிஸார் துரித நடவடிக்கை எடுத்தனர்.

அவர்கள் பணிபுரியும் பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்களை இரகசியப் பொலிஸ் தலைமையகத்துக்கு உடன் வருமாறு அழைக்கப்பட்டனர். பொலிஸ் கான்ஸ்டபிள்களான காமினி, ஹஸந்த, கெலும் ஆகியோர் அங்கு வந்தபோது கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் கொழும்பு வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் கீழ் பணிபுரிந்தவர்களாவர்.

இதன் காரணமாக இதுதொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பெறுவதற்காக கடந்த 06ஆம் திகதி காலை இரகசிய பொலிஸ் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டார். அங்கு வந்த வாஸ் குணவர்தன 5 மணிநேரம் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இக்காலகட்டத்தில், கொலைக்கு பொறுப்பான உப பொலிஸ் பரிசோதகர் பமுனுசிங்க இரகசிய பொலிஸாரிடம் சரணடைந்த பின், அவரும் கைது செய்யப்பட்டார்.

இக்கொலை தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு தொடர்பிருப்பது குறித்து இரகசிய பொலிஸ் அவரிடம் துருவித்துருவி விசாரித்தனர். அவரின் அலுவலகமும் பரீட்சிக்கப்பட்டது. பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

பேலியகொட பொலிஸ் நிலையத்தினால் வாஸ் குணவர்தனவின் பாதுகாவலர்களாகப் பணிபுரிந்த இரு கான்ஸ்டபிள்களுக்கும் வழங்கப்பட்டிருந்த ரி-56 ரக தன்னியக்க துப்பாக்கிகளை பொலிஸார் பெறுப்பெடுத்தனர். இந்தப் பின்னணியில் பிரதிப் பொலிஸ் மா அதிரப் வாஸ் குணவர்தன கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

இவர் தொடர்பாக நடாத்தப்பட்ட விசாரணையின் முன்னேற்ற அறிக்கையொன்று இரகசிய பொலிஸ் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியேட்சர் சானி அபேசேகரவினால் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி முஹம்மத் சஹாப்தீனுக்கு கையளிக்கப்பட்டது.

சம்பவங்கள் தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அலுவலகத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் 3 கான்ஸ்டபிள்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குற்றத்தை செய்வதற்கு பயன்படுத்திய டபள்கப் பிக்கப் வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நீதவானிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொலை செய்வதற்குச் சதிசெய்தல், கொலை செய்வதற்காக ஒருவரைக் கடத்துதல், கொலை செய்தல், இதற்கு உடந்தையாக இருத்தல் தொடர்பாக குறித்த சந்தேகநபர்களை கைது செய்ததாக இரகசியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(நன்றி : நவமணி)

No comments