13ஆவது அரசியல் திருத்தத்தை பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் ஆதரிப்பதில்லை - தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
மாகாணசபை முறைமையையோ 13ஆவது அரசியல் அதிகாரத்தையோ பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் ஆதரிப்பதில்லை என்பதுடன், அதற்கு எதிராக தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனும் ஏனைய ஒருமித்த கருத்துடையவர்களுடனும் இணைந்து பணியாற்றுவது எனவும் அக்கட்சியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அறிமுகம் செய்யப்பட்ட மாகாணசபை முறைமையும் அதனோடு இணைந்த 13ஆவது அரசியல் அதிகாரங்கள் தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள், விமர்சனங்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆழ்ந்த கவனம் செலுத்தி வருகிறது. 13ஆவது அரசியல் அதிகாரம் குறித்து இனவாத நோக்குடன் தென் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பிரசாரங்களுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இம்முயற்சியானது, இயல்பு நிலையின் ஊடாக நிலையான சமாதானத்தை அடையும் உன்னத நோக்கத்தை சீர்குலைத்துவிடும்.
இதனால் மாகாணசபை முறைமையையோ 13ஆவது அரசியல் அதிகாரத்தையோ பலவீனப்படுத்தும் எம் முயற்சியையும் ஆதரிப்பதில்லை என்பதுடன், அதற்கு எதிராக தென்னிலங்கை முற்போக்கு சக்திகளுடனும் ஏனைய ஒருமித்த கருத்துடையவர்களுடனும் இணைந்து பணியாற்றுவது எனவும் அக்கட்சியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையில் மட்டக்களப்பு தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பொதுக் குழுக் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார். இவ்வாறு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்த காலம் தொட்டு மாகாண சபையும் 13ஆவது அரசியல் அதிகாரத்தையும் அடிப்படை அலகாக ஏற்றுக்கொண்டு அதனூடாக முன்நோக்கி பொருத்தமான அரசியல் தீர்வினை எய்த வேண்டும் என்ற கோட்பாட்டில் செயற்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் 2008ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைமையில் அமையப்பெற்ற கிழக்கு மாகாண சபை நிகழ்ச்சி நிரலில் 13ஆவது அரசியல் அதிகாரத்தினை முழுமையாகப் பெறுவதனை முன்னிலைப்படுத்தி செயலாற்றி வந்தது.
ஆனால் துரதிஸ்டவசமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 13ஆவது அரசியல் அதிகாரத்தினை முழுமையாக பெற்றுக் கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்கு பிரதானமான தமிழ் கட்சிகள் ஆதரவினை நல்கவில்லை என்பது கசப்பான உண்மையாகும். 13ஆவது அரசியல் அதிகாரத்தினை பாதுகாப்பதிலிருந்து தவறியதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள பங்கு கணிசமானது. 2008ஆம் ஆண்டு காலப் பகுதியில் எமது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைக்கப் பெற்றிருந்தால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலப் பகுதியிலேயே அதனை முழுமையாக அமுல்படுத்துவதில் வெற்றி கண்டிருக்க முடியும்.
எமது சமூகத்தின் துரதிஸ்ட வரலாற்றுப் பக்கங்கள் போன்று பொருத்தமான தருணத்தில் ஒன்றிணைந்து செயற்படாமல் இழந்து விட்ட பிறகு இணைந்து பெற்றிருக்கலாம் என்று வருத்தப்படுகின்ற தருணம் மாகாண சபை முறைமைகளுக்கோ 13ஆவது அரசியல் அதிகாரங்களுக்கோ ஏற்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. அதே நேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இன்றைய அரசாங்கம் கடினமாகப் பெற்றுக்கொண்ட நாட்டின் சமாதானத்தையும், ஒருமைப்பாட்டையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைப்பதற்கு இடமளிக்காது என்பதனை உறுதியாக நம்புகின்றோம்.
அந்த வகையில் 13ஆவது அரசியல் அதிகாரம் தொடர்பில் பங்காளி கட்சி என்ற வகையில் எமது கருத்துக்களுக்கும் அரசாங்கம் உரிய மதிப்பளித்து தெற்கு இனவாதிகளையும் வடக்கு குறுந்தேசிய அரசியல் தலைமைகளையும் தோற்கடிக்கும் என திடமாக நம்புகின்றோம்" என அத்தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments