முஸ்லீம்களுக்காக குரல் கொடுப்போம் : சுரேஷ் பிரேமச்சந்திரன்
முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அவர்களது பிரச்சினைகளையும் கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் வழங்கிய செவ்வியொன்றில் கூறினார்.
குறித்த செவ்வியின் போது அவர் கூறியதாவது: பொது பலசேனா என்ற சிங்கள பௌத்த கடும்போக்கு அமைப்பு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்கின்றது. இதற்கு முஸ்லிம் தலைமைகள் உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்று முஸ்லிம் மக்களே குற்றம்சாட்டுகின்றனர். உங்களது நடவடிக்கைகள் என்ன?
முஸ்லிம் தலைவர்கள் பெரும்பாலும் அரசுடன் இணைந்திருக்கின்றார்கள். பொதுபலசேனா அமைப்பினால் முஸ்லிம் மக்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருகிறார்கள் என்பதும் அதனால் அவர்கள் கோபத்தில் இருக்கின்றார்கள் என்பதும் உண்மை.
முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு அவர்களது தலைமைத்துவங்கள் தயாராக இல்லை. அவர்கள் தமது நாடாளுமன்ற ஆசனங்களையும், அமைச்சுப் பதவிகளையும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் அவர்களது பிரச்சினைகளையும் கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது.
முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்தும், தமிழ் முஸ்லிம் உறவுக்கான முன் முயற்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். முஸ்லிம் மக்கள் மத்தியில் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டனர். எல்லாப் பிரச்சினைகளும் முடிந்துவிட்டது என்ற நிலைப்பாடும் உள்ளது. ஆனால் இன்று தாங்கள் தாக்கப்படுகின்ற சூழ்நிலையில் அச்சங்களும், கோபங்களும் அவர்களுக்கு வருகின்றன.
யுத்த காலத்தில் தமிழ் தரப்பால் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறின்னார், அது தொடர்பாக அவர் கூரியதாவது,
போராட்ட காலங்களில் தமிழர் தரப்புகளால் முஸ்லிம்களுக்கு சில பல இழப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை தவறு என்று நாம் பலமுறை பகிரங்கமாகவே ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். கடந்தகால சம்பவங்களுக்காக நாங்கள் மன்னிப்புக் கோரியுள்ளோம்.
இதே போன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும், வேறு முஸ்லிம்களாலும் சம்மாந்துறையிலும், காரைதீவிலும், வீரமுனையிலும் பலர் கொல்லப்பட்டும் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் இருக்கின்றன. எனவே ஒரு தரப்பில் மட்டுமல்ல இரு தரப்பிலும் பிழை நடந்திருக்கின்றது.
இரு தரப்பில் நடந்தாலும் பிழை பிழைதான். அதனை நாங்கள் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகாயத்திலிருந்து ஆண்டவன் மூலமாக எதுவும் வந்து நடைபெற்று விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
நாங்கள் எங்களிடம் இருக்கக் கூடிய பலம், வளம் எல்லாவற்றையும் ஒருமுகப்படுத்தினால் வெற்றி பெறலாம். சர்வதேச சமூகம் எல்லா விடயத்தையும் ஏற்றுக் கொள்ளும் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் தமிழ் மக்கள் சொந்த நிலத்திலிருந்து விரட்டப்படுவது யாரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரியமல்ல.
ஐ.நா. சாசனங்களின் பிரகாரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்தக் காணிகளுக்குச் செல்ல உரித்துடையவர்கள். இவ்வாறானதொரு நிலையில் நாங்கள் சர்வதேசத்திடம் பரப்புகளை மேற்கொள்வதன் மூலமும் எங்களின் வெற்றியைச் சாத்தியமாக்கிக் கொள்ளலாம்.
உள்நாட்டில் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கின்ற நேரத்தில்தான் சர்வதேசமும் தனது கவனத்தை எங்கள் மீது குவிக்கும். சர்வதேச சமூகமும் இலங்கை அரசின் மீது அழுத்தத்தை கொண்டு வருவதற்கு எமது போராட்டங்கள் முனைப்பானதாக இருக்கும் என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
No comments