Breaking News

இறைச்சிக்கடை இராஜதந்திரம்: முஸ்லிம்கள் மீது அடுத்த கட்ட பாய்ச்சல்

z_p18-Is-your-01கடை விவகாரம் சூடு பிடிக்கிறது, உண்மையில் அகிம்சைவாதத்தை போதிக்கும் பௌத்த தர்மம் மாடுகளை மாத்திரமன்றி உயிரினங்கள் எதனையும் கொள்வதனை விரும்பவில்லை. ஆனால் மாமிசம் உண்ணுவதை கண்டிப்பாக தடுத்ததற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, முயல், மான் என எதனையும் மிருகவதையை எதிர்ப்பவர்கள் விரும்பமாட்டார்கள். பசுவதையை குறிப்பாக இந்து மதத்தினர் விரும்புவதில்லை. ஏனெனில் பசுவிற்கு ஒரு புனிதமான இடத்தை வழங்கி உழவர் திருநாளில் சித்திரை புத்தாண்டில் அதற்கான விஷேடமான ஆசார தர்மங்களை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் முஸ்லிம்கள் மாத்திரமன்றி கிறிஸ்தவர்களும் மாமிசங்களை உண்ணுகிறார்கள், சிங்கள பௌத்தர்களில் “கொல்வதுதான் கூடாது” விற்பனைக்கு தயாராக இருந்தால் உற்கொள்ளலாம் என கருதுபவர்களும் இருக்கிறார்கள்.

இலங்கையில் தமிழ், சிங்கள விவசாயிகள் பாலுக்காக மாத்திரமன்றி இறைச்சிக்காவும் ஆடு மாடுகளை வளர்க்கிறார்கள், அவர்களது பொருளாதாரம் அதில் தங்கியுமிருக்கிறது. பொதுவாக ஆடு அல்லது மாடு வயது சென்று இயற்கையாக இறந்து போவது மிகமிக அரிது.

உயிரினங்களை கொள்ளக் கூடாது என்பவர்கள் தர்க்கரீதியாக பன்றியைக் கொள்தல், மீன்பிடிக் கைத்தொழில், இறைச்சி கோழி வளர்ப்பு என்பவற்றையும் எதிர்க்க வேண்டும் ஆனால், அவ்வாறு இல்லை.

என்றாலும் இறைச்சிக்கடை நடாத்தும் நம்மவர் பல்வேறு இலக்குகளுக்காக மிருகவதை கோஷங்களுடன் வெளிக்கிளம்பும் சக்திகள் குறித்து விழிப்பாக இருக்கவேண்டும். அனுமதிப் பத்திரங்களுடன் வியாபாரம் செய்பவர்கள் நவீன சந்தைப்படுத்தல் முறைகளை கையாளல் வேண்டும், அடுத்தவர் மனதை பாதிக்கும் காட்சிப்படுத்தல் முறைகளை கைவிடவேண்டும்.

முஸ்லிம்களது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இறைச்சிக் கடைகள் வந்து விடுமாயின் வாழ்விடங்கள் களநிலவரங்களை கவனத்திற்கொண்டு முன்னுரிமை அடிப்படையில் இறைச்சிக் கடைகளை தற்காலிகமாகவேனும் மூடிவிடுவது குறித்து கலந்தாலோசனைகள் செய்து முடிவுகளுக்கு வரலாம்.

அடுத்த சமூகங்கள் தமது மத விழுமியங்களை முன்னிறுத்தி நாடு முழுவதுமுள்ள மதுபான விற்பனை நிலையங்களை மூடிவிட முடிவெடுப்பின், முஸ்லிம்களும் இறைச்சிக் கடைகளை மூடிவிட முன்வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. என்றாலும் தற்பொழுது சூடுபிடித்து வரும் இறைச்சிக் கடை அரசியல் குறித்து முஸ்லிம் சமூகம் அவதானமாக இருந்து கொள்ள வேண்டும்.

(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)

நன்றி : நனமணி

No comments