Breaking News

ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று சொல்வது இனத்துவேஷம் இல்லையா?- மனோ கணேசன்

mano ஹலால் உணவு வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு சென்று வாழ வேண்டும் என்றும், வடக்கில் அரசியல் உரிமைகள் கேட்டால் கொழும்பில் வாழும் தமிழருக்கு ஆபத்து என்றும் கருத்துகள் தெரிவிப்பது இனத்துவேஷம் இல்லையா? இந்த கருத்துகளை சொல்லி வருபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் இல்லை.

ஆனால் அதிகாரத்தை பகிர்ந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கியமாக வாழும் நாட்டை கட்டி எழுப்ப எம்முடன் இணைந்து செயற்படும் அசாத் சாலியை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பது என்ன நியாயம்? என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணி செயலாளர் அசாத் சாலியை கைது செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

அசாத் சாலி ஒருகாலத்தில் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து அங்கே இருந்தவர். ஆனால், கடைசியில் அந்த நம்பிக்கை தகர்ந்து போன பின் அவர் எம்முடன் எதிரணியில் வந்து இணைந்து கொண்டுள்ளார்.

அவர் மீதான பயங்கரவாத குற்றச்சாட்டுகள் என்ன? புதிதாக அவர் மீது குற்றம் சுமத்தும் பைல்கள் கிடைத்துள்ளனவா? அரசாங்கத்தில் இருக்கும் வரை இல்லாத பைல்கள் இப்போதுதான் கிடைத்தனவா? அப்படியானால் இன்று அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் பைல்கள் இருக்கின்றனவா? அவர் கைது செய்யப்பட்டதுக்கு தமிழக பத்திரிகை ஒன்றிற்கு அவர் அளித்த நேர்முகத்தில் தெரிவித்த கருத்தும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

சில வேளைகளில் நமது கருத்துகள் தற்செயலாக பத்திரிக்கைகளில் மாறுபட்ட அர்த்தங்களில் பிரசுரமாவது சகஜம். இது ஊடக உலகில் தற்செயலாக நடக்கும் சமாச்சாரம். இங்கே என் பக்கத்தில் நண்பர் முஜிபுர் ரகுமான் இருக்கிறார். அவர் ஒரு பயங்கரவாதி இல்லை என்று நான் சொல்கிறேன்.

தவறுதலாக, இல்லை என்ற சொல் பிரசுரமாகாவிட்டால், முஜிபுர் ரகுமான் ஒரு பயங்கரவாதி என்று வந்து விடும். இதை நான் சொல்லவில்லை. ஆனால், ஒரு வார்த்தை தவறினாலும் வாசகர்களுக்கு தவறான அர்த்தம் கிடைத்து விடும். இதுபற்றி ஒரு வாக்குமூலம் பெற்று தெளிவு பெறலாம்.

ஆனால், இத்தகைய சில்லறை காரணங்களை வைத்துகொண்டு ஒருவரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தலைமறைவு அரசியல் செய்யவில்லை. எம்முடன் இணைந்து, அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தில் பகிரங்கமாக செயல்படுகிறார்.

முஸ்லிம் மக்கள் தொடர்பாக அரசாங்கம் முன்னெடுக்கும் கொள்கைகளை, அவர் கடுமையாக விமர்சனம் செய்கிறார். எனவே இவரது கைது திட்ட வட்டமான முறையில் அரசியல் பழிதீர்த்தல் என்பது உண்மை.

யாழ்ப்பாணத்தில் அரசியல் உரிமை கேட்டால் கொழும்பில் தமிழருக்கு ஆபத்து என்றும், ஹலால் உணவு சாப்பிட வேண்டுமானால் பாகிஸ்தானில் சென்று வாழுங்கள் என்றும் சொன்னவர்கள் இங்கே பகிரங்கமாக வாழுகிறார்கள்.

இவர்களை பிடித்து உள்ளே போடாமல், உள்ளதை உள்ளபடி பேசுபவரை தூக்கி உள்ளே வைப்பதன் மூலம் இந்த அரசாங்கம் தனக்கு தானே குழி வெட்டி கொள்கிறது. அசாத் சாலியின் மீது குற்றம் இருந்தால் அதை சட்டத்தின்படி நீதிமன்றத்துக்கு கொண்டு வாருங்கள்.

அதற்கு முன்னர் அவர் விடுவிக்கப்பட வேண்டும். அவரது ஜனநாயக அரசியல் முன்னெடுக்க சுதந்திரம் உறுதியாக வேண்டும்.

No comments