தமிழ் - முஸ்லிம் உறவுக்கு குந்தகம் விளைவிக்காதீர்
விடிவெள்ளி ஆசிரியர் கருத்து
இலங்கையில் சிங்களவர்களும் தமிழர்களும் முஸ்லிம்களும் நீண்ட காலமாகவே மிகவும் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லையாயினும் அவ்வப்போது இச் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளதையும் மறுப்பதற்கில்லை.
குறிப்பாக சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையில் வெடித்த ஜூலைக் கலவரத்தின் விளைவாகவே இந்த நாட்டைக் குட்டிச் சுவராக்கிய 30 வருட கால போர் தோற்றம் பெற்றது. இலட்சக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட போர் முடிந்துவிட்டபோதிலும் இன்று வரை அதன் வடுக்கள் மாறவில்லை.
அதேபோன்றுதான் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் 1915 இல் வெடித்த கலவரமும் சிங்கள- முஸ்லிம் உறவில் பாரிய விரிசலைத் தோற்றுவித்தது. மிக அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்கு சக்திகள் முன்னெடுக்கும் மதவாத பிரசாரங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் தற்போது மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றுள்ளன. இது தொடருமானால் அதேபோன்றதொரு கலவரம் தோன்றலாம் என்ற எச்சரிக்கைகளும் அவ்வப்போது விடுக்கப்பட்ட வண்ணமிருக்கின்றன.
இதற்கப்பால் தமிழர்களும் முஸ்லிம்களும் மிக நீண்ட காலமாக தமக்கிடையில் பலமானதொரு உறவினைக் கட்டியெழுப்பி வந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. ஆனாலும் துரதிஷ்டவசமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மனிதாபிமானமற்றதும் முஸ்லிம் சமூகத்தை இனச்சுத்திகரிப்புச் செய்வதுமான செயற்பாடுகளால் இந்த உறவில் பாரிய விரிசல் தோன்றியது வரலாற்றின் கறைபடிந்த பக்கமேயாகும். இருப்பினும் போர் முடிந்த கையோடு வடக்கு கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் உறவு துளிர்விடத் தொடங்கியது. இன்றும் அந்த உறவு மிகச் சிறப்பாகவே நீடிக்கிறது. போரின்போதான பழைய காயங்களை மறந்து இவ்விரு சமூகங்களும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.
ஒரு காலத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் கடும்போக்குடன் நடந்து கொண்ட அல்லது தமது சமூகத்தின் நலன்சார்ந்து மாத்திரமே சிந்தித்த தமிழ் அரசியல் தலைமைகள் இன்று முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகின்ற அளவுக்கு அரசியல் களநிலைமைகள் மாற்றம் பெற்றிருக்கின்றன. அண்மைக்காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் தமது சமூகத்திற்காக பாராளுமன்றில் குரலெழுப்பியிருக்கவில்லை. ஆனால் அந்தக் குறையை நிவர்த்திக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்றத்தில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.
ஒருகாலத்தில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பறித்த விடுதலைப் புலிகளுக்கு துணை போன தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பாராளுமன்றத்திலேயே குரலெழுப்புவது இந்த நாட்டின் அரசியல் போக்குகள் எவ்வாறான தலைகீழான மாற்றங்களைக் கண்டிருக்கின்றன என்பதை அளவிடுவதற்கு பொருத்தமான உதாரணமாகும்.
ஆனாலும் கடந்த சில வாரங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அமைச்சர் ஒருவருக்குமிடையில் தோற்றம் பெற்றிருக்கும் முரண்பாடுகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளன. முள்ளியவளை பிரதேச மீள்குடியேற்றத்தை முன்னிறுத்தி தோற்றம் பெற்றுள்ள இம் முரண்பாடுகள் எதிர்வரும் காலங்களில் மேலும் கூர்மையடையக் கூடிய சாத்தியக் கூறுகளே தென்படுகின்றன.
வட மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இம் முரண்பாடுகள் தொடர்ந்து செல்லுமானால் தேர்தல் காலப் பிரசாரங்கள் அதற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமைந்துவிடக் கூடும்.
பொதுவாகவே தேர்தல் காலங்களில் தமிழ் முஸ்லிம் நல்லுறவு அடகு வைக்கப்பட்டு இன மற்றும் பிரதேச வாதங்களைத் தூண்டும் வகையிலான பிரசாரங்கள் முடுக்கிவிடப்படுவது வழக்கமாகும். அவ்வாறானதொரு நிலைமை வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்றம் பெற்றுவிடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
மீள்குடியேற்றம் என்பது வடக்கில் வாழ்கின்ற தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை பாதுகாக்க வேண்டியதே அரசியல்வாதிகளின் கடமையாகும். மாறாக அதன் பெயரால் அரசியல் செய்ய முற்படுவதோ தமது வாக்கு வங்கியை அதிகரிக்க முற்படுவதோ ஒருபோதும் மனிதாபிமானமிக்கதாக அமையாது என்பதையும் இங்கு குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.
நன்றி : விடிவெள்ளி
No comments