Breaking News

சிறுபான்மையின மக்கள் ஒன்றுபட வேண்டிய காலமிது: அசாத் சாலியின் கைதும் புல்மோட்டை ஆக்கிரமிப்பும் இதையே வலியுறுத்துகின்றன: மாவை சேனாதிராஜா…

maavai senathiraja இலங்கையிலுள்ள இரு சிறுபான்மையினங்களையும் நாட்டிலிருந்து அப்புறப்படுத்தும் செயற்பாடுகளே இன்று பரவலாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் அவர்களின் இன அடையாளங்கள் அழிக்கப்பட்டும்வருகின்றன. மக்கள் ஆட்சி நடைபெறும் ஜனநாயக நாடொன்றிலுள்ள கருத்து வெளியிடும் சுதந்திரம் இந்த நாட்டில் இல்லை. நாட்டில் நடைபெற்று வரும் அநீதிகளுக்கு எதிராக எவருமே கருத்துக் கூற முடியாத நிலை தற்போது உருவாகியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
இனங்களுக்கிடையே ஒருமைப்பாட்டை விரும்பிய அசாத் சாலினின் கைது இதனையே வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது. இந்த நாட்டில் இன ஒற்றுமையை வலியுறுத்தி குரல் கொடுத்து வந்தவர் அசாத் சாலி. அதிகாரப் பரவலாக்கலூடாக நாட்டில் ஜக்கியத்தை தோற்றிவிக்க வேண்டும் என விரும்பியவர். அதற்காகவே கடந்த காலங்களில் அயராது பாடுபட்டு வந்தார். உரிமைகள் மறுக்கப்படும் இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நின்று குரல் கொடுத்தவர். தெல்லிப்பழையில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் முஸ்லிம் நல்லிணக்கத்தையும் அநீதிக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதையும் வெளிப்படுத்தியவர்.
இனங்களுக்கிடையே நல்லுறவும் நாட்டில் அமைதியும் ஏற்பட வேண்டும் என விரும்பிய அசாத் சாலின் கைது, இன ஒருமைப்பாட்டை விரும்பாது அதனை சீர்குலைக்கும் எண்ணத்தோடு நடைபெற்ற ஓர் செயலாகும். ஆசாத் சாலினின் கைதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிக்கின்றது. கருத்து வெளியிடும் சுதந்திரத்தை சிறுபான்மையினாரிடமிருந்து பறிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது இன அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
பேரினவாதிகளினால் ஆட்சி செய்யப்பட்டு வரும் இந்த அரசாங்கத்தின் இந்தகைய செயற்பாடானது தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்றார்.

No comments