துயரம் நிறைந்த 90
என்.எல்.எம்.மன்சூர், ஏறாவூர்
1990 ஆம் ஆண்டு துயரங்கள் நிறைந்த கவலைகள் உறைந்த காலகட்டமாகும். எமது நாட்டில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் பல்வேறு சோதனைகளுக்கும் இன்னல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள்ளாக்கப்பட்டார்கள்.
தமிழ்த்தாயகம், தனிநாட்டுக் கோரிக்கையை இலக்காகக் கொண்டு தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதமேந்தி சகல ஆயத்தங்களுடனும் போராடத்துணிந்த விடுதலைப் புலிகளின் செல்வாக்கு மிகைத்திருந்த காலம். அரசையும், அரச படைகளையும் குறியாக வைத்து தாக்குதல் நடாத்திய போராளிகள் சிங்களப் பொதுமக்கள் மீதும் ஆயுதத் தாக்குதலை ஆரம்பித்தார்கள்.
நாளடைவில் தமது போராட்டப் பாதையை தமிழ் மக்களுடன் பரஸ்பரம் ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்த ஏதுமறியாத அப்பாவியான முஸ்லிம்களுக் கெதிராகவும் திசை திருப்பி விட்டார்கள்.
முதற்கட்டமாக முஸ்லிம் வாலிபர்களை இயக்கத்தில் இணைத்து ஆயுதக் கவர்ச்சியைக் காட்டி பயிற்சி கொடுத்து முஸ்லிம் தனவந்தர்களையும் அவர்களின் பொருளாதார இலக்குகளையும் அடையாளம் காட்டக்கூடியவர்களாக பயன்படுத்தினார்கள். இவ்வாறு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை சூறையாடி சாதுர்யமாக காய் நகர்த்தி முஸ்லிம் சமூகத்தை கருவறுத்தார்கள்.
அடுத்த கட்டமாக தமிழ் பிரதேசங்களுக்குள் தமது குடும்ப ஜீவனோபாயத்திற்காகச் செல்லும் ஏழை வியாபாரிகளின் வாகனங்களை பறித்தல், கப்பம் வாங்குதல், கடத்தல், கொலை செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். ஆனாலும் முஸ்லிம்கள் எதிர்நடவடிக்கை எதுவும் செய்யாது பொறுமை காட்டினார்கள்.
திடீரென பொலிஸ் நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு பொலிஸார் நிராயுதபாணிகளாக வெளியேற்றப்பட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பாடசாலைகள் யாவும் மூடப்பட்டன. வியாபார நிலையங்கள் திறக்கப்படுவதில்லை. மின் மாற்றிகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மட்டக்களப்பிலிருந்து காலையில் புறப்படும் புகையிரதம் வந்தாறு மூலையில் வைத்து கண்ணிவெடித்தாக்குதலுக்குள்ளானதுடன் பயணம் செய்த முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். புகையிரத சேவையும் நிறுத்தப்பட்டது.
வாகனப் போக்குவரத்துகளும் நடைபெறவில்லை. அரச காரியாலயங்கள் மூடிக்கிடந்தன. அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லை. கூலித் தொழிலாளர்களுக்கு தொழில் இல்லை. குழந்தைகளுக்கு பால்மா இல்லை. அத்தியாவசியப் பொருட்களுமில்லை ஒரு சில வர்த்தகர்கள் துணிந்து பொலன்னறுவைக்குச் சென்று பொருட்களை வாங்கி வந்து சந்தையில் போட்டு விற்பனை செய்தார்கள்.
ஒரு நாள் இரவு ஏறாவூர் பஸாரிலுள்ள அனைத்து கடைகளும் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையிடப்பட்டன. அரச நிறுவனங்கள், பாடசாலை காரியாலயங்கள் அரிசி ஆலைகள் யாவும் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டன. ஏறாவூர் பிரதேச சபையின் நூலகம் உடைக்கப்பட்டு புத்தகங்கள் வண்டில்களில் ஏற்றி இழுத்துச் செல்லப்பட்டன. குர்ஆன் பிரதிகள் வீதிகளில் வீசப்பட்டுக் கிடந்தன. ஜி.பி.எஸ். (நெற்களஞ்சியசாலை) புகையிரத நிலையம் ஆகியவற்றின் கூரைத் தகடுகள், சீற்றுகள் பகல் நேரத்தில் பகிரங்கமாக கழற்றி கொண்டு செல்லப்பட்டன.
ஏறாவூர் மக்கள் வங்கி ஒருவாரமாக உடைத்து சூறையாடப்பட்டது. பள்ளிவாசல்கள் மஃரிப் தொழுகையுடன் பூட்டப்படும். ஊரில் பயமும் பதற்றமும் காணப்பட்டன. இரவும் பகலும் ஆயுதங்களுடன் புலிகள் நடமாட்டம் சாதாரணமாக இடம்பெற்றது.
துல்ஹஜ் மாதம் காத்தான்குடியிலிருந்து புனித ஹஜ்ஜுக்காக புறப்பட்ட ஹாஜிகள் ஏறாவூரைத் தாண்டிச் செல்லவோ, திரும்பிச் செல்லவோ முடியாத நிலையில் மூன்று நாட்கள் ஏறாவூரில் தரித்து அல்லாஹ்வின் உதவியால் ஒருவாறு கொழும்பை சென்றடைந்தார்கள்.
அறபாவுடைய தினம் ஊரில் அதிகமானோர் அறபா நோன்பு பிடித்து பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். விடிந்தால் ஹஜ்ஜுப் பெருநாள். எந்த ஏற்பாடுமில்லை. பெருநாள் அன்று ஊரில் பரபரப்பு – அலிகார் தே.பாடசாலை அதிபர் யூ.எல்.தாவூத்சேர், அலிமுகம்மது ஹாஜியார், ஏகே கபூர் ஹாஜியார் ஆகியோர் இரவு கடத்தப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி பரவியது.
இவ்வாறு ஊரே கொதித்து கொண்டிருந்த வேளை 03.08.1990 அன்று காத்தான்குடி மீராஜும்ஆ மஸ்ஜித், ஹுஸைனியா பள்ளிவாசல்களில் மஃரிப் தொழுகைக்காகச் சென்றவர்கள் 103 பேர் சுஜூதில் இருந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதனைத் தொடர்ந்து ஏறாவூரில் பதற்றமான நிலை மேலும் அதிகரித்தது. 11.08.1990 அன்று இராணுவம் தமிழ் பகுதியில் சிலிண்டர் தாக்குதல் நடத்தியதால் தொடர்ந்தும் ஆபத்து வரும் என்று பயந்த தமிழ் மக்களில் பலர் பாதுகாப்புத் தேடி அறிமுகமான முஸ்லிம்களின் வீடுகளை நாடினார்கள். அன்று இரவு பதினொரு மணியளவில் பரவலான வெடிச்சத்தங்களுடன் ஊருக்குள் நுழைந்த புலிகள் 127 முஸ்லிம்களை சுட்டும் வெட்டியும் கொலை செய்தார்கள்.
வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள், வாலிபர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் மிகவும் அரக்கத்தனமான முறையில் இரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். இவ்வாறு சஹீதாக்கப்பட்டவர்கள் 12.08.1990 அன்று மாலை ஒரே இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
இவ்வாறு ஷஹீதாக்கப்பட்ட சுஹதாக்களை நினைவு கூர்ந்து ஏறாவூர் நூருஸ்ஸலாம் மஸ்ஜிதில் ஏறாவூர் முஸ்லிம் பள்ளிவாசல்கள் நிறுவனங்களின் சம்மேளனம் வருடந்தோறும் கதமுல் குர்ஆன் ஓதி துஆச் செய்து நினைவுப் பேருரைகளை ஏற்பாடு செய்வது வழக்கமாகும். இம்முறையும் இந்த நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
இது நடந்து சிலகாலங்களின் பின் புனித ஹஜ் கடமையை முடித்து விட்டு ஊர் திரும்பிய காத்தான்குடியைச் சேர்ந்த 167 ஹாஜிமார் குருக்கள் மடத்தில் புலிகளால் வழிமறிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டமை கறை படிந்த வரலாறாகும்.
Post Comment
No comments