ஸாகிர் நாயிக்கை இந்தியா கைது செய்ய துடிப்பது ஏன்?
- எம்.ஐ.அப்துல் நஸார் -
மும்பையினைத் தளமாகக் கொண்ட பிரசாரகர் ஸாகிர் நாயிக் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக இந்திய அதிகாரிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் அவர் அதனை நிராகரித்துள்ளார்.
முகநூலில் 16 மில்லியன் பேரும் டுவிட்டரில் 150,000 பேரும் பிரபல இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரகர் ஸாகிர் அப்துல் கரீம் நாயிக்கை பின் தொடர்கின்றனர். உலகம் முழுவதும் 4,000 இற்கும் மேற்பட்ட இஸ்லாம் தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார். எனினும் தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் இஸ்லாமியப் பிரசாரங்களை மேற்கொண்டுவரும் ஸாகிர் நாயிக்கை தற்போது இந்திய அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
அண்மையில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தேநீர்ச்சாலை ஒன்றில் துப்பாக்கிதாரியொருவர் மேற்கொண்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். குறித்த துப்பாக்கிதாரி ஸாகிர் நாயிக்கின் பிரசாரத்தால் தான் தூண்டப்பட்டதாக தெரிவித்ததைத் தொடர்ந்தே பிரச்சினை உருவாகத் தொடங்கியது.
இந்தத் தாக்குதலின் பிரதிபலிப்பாக 'பீஸ் ரிவி' என்ற தொலைக்காட்சி அலைவரிசையினை பங்களாதேஷ் தடை செய்தது. உலகம் முழுவதிலும் 100 மில்லியன் மக்களால் பார்க்கப்படும் பீஸ் ரிவி தொலைக்காட்சி அலைவரிசை 2006 ஆம் ஆண்டு ஸாகிர் நாயிக்கினால் ஆரம்பிக்கப்பட்டதோடு, இந்த இஸ்லாமிய அலைவரிசை துபாயிலிருந்து தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றது.
வன்முறைகளுக்கு ஆதரவளிப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஐம்பத்தி ஒரு வயதான ஸாகிர் நாயிக் மறுத்துள்ளார்.
காணொளி மூலமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அநியாயமாக மனித உயிர்களைக் கொல்வது இஸ்லாத்தில் இரண்டாவது பெரும் பாவமாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், கடந்த நவம்பர் மாதம் இந்தியாவின் பயங்கரவாதத்திற்கு எதிரான முகவரகம் மற்றும் தேசிய புலனாய்வு முகவரகம் என்பன உத்தியோகபூர்வ பொலிஸ் முறைப்பாடாக ஸாகிர் நாயிக் மற்றும் 1991 ஆம் ஆண்டு அவரால் ஆரம்பிக்கப்பட்ட இலாப நோக்கற்ற இஸ்லாமிய ஆய்வு நிலையத்திற்கும் எதிராக முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தன. அவ்வறிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் மதரீதியான வெறுப்புணர்வுகளை தூண்டுவதற்கும் காரணமாக உள்ளதாக ஸாகிர் நாயிக் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்துத் தேசியவாத அரசாங்கத்தின் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய ஆய்வு நிலையத்திற்கு ஐந்து ஆண்டு தடையினை விதித்துள்ளார்.
சட்டவிரோதமானது, நியாயமற்றது, தேவையற்றது
பொருத்தமான நீதிமன்றமொன்றில் இந்தத் தடைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸாகிர் நாயிக்கின் சட்டத்தரணி முபீன் சுல்பிகார் தெரிவித்தார்.
இந்தத் தடை சட்டவிரேதமானது மட்டுமல்ல நியாயமற்றதும் தேவையற்றதுமாகும் எனக் காண்பிப்பதற்கு தம்மிடம் போதிய ஆதாரங்கள் இருப்பதாகவும் முபீன் சுல்பிகார் மேலும் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஆய்வு நிலையம் பண மேசடியில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள இந்தியாவின் நிதியியல் குற்றங்களை விசாரணை செய்யும் அமுலாக்கப் பணியகம் மும்பாயிலுள்ள அதன் சொத்துக்களை முடக்கியுள்ளது. ஸாகிர் நாயிக்கினால் நடத்தப்பட்டுவந்த கல்விக்கான நம்பிக்கை நிதியம் வெளிநாடுகளிலிருந்து நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தனது கட்சிக்காரர் எவ்வித பண மோசடியிலும் ஈடுபடவில்லை என மறுத்துள்ள முபீன் சுல்பிகார், அனைத்துக் கொடுக்கல் வாங்கல்களும் வங்கிகளூடாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சட்டரீதியான முறையினூடாகவே அனைத்து நிதியும் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பண மோசடியில் தடுப்புச் சட்டத்தின்கீழ் கோரப்படும் 'குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதேனும் நிதி பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்பிப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை' எனவும் அவர் தெரிவித்தார்.
ஸாகிர் நாயிக் தற்போது எங்கே?
கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஸாகிர் நாயிக் இந்தியா திரும்பவில்லை. தற்போது அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. எனினும் கடந்த சில மாதங்களாக 'இஸ்லாத்திற்கு சேவையாற்றியமைக்காக' அவருக்கு விருது வழங்கி கௌரவித்த நாடான சவூதி அரேபியாவிலிருந்து ஸ்கைப் வழியாக நேர்காணல்களையும் ஊடகவியலாளர் மாநாடுகளையும் நடாத்தி வருகின்றார்.
தற்போது அவருக்கு சவூதி அரேபிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக பல்வேறு வகையிலும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்ற போதிலும், அது தொடர்பாக உத்தியோகபூர்வமான உறுதிப்படுத்தல்கள் எதுவும் வெளிவரவில்லை.
காணொளி உரையாடல் மூலமாக தன்னை விசாரணை செய்யுமாறு ஸாகிர் நாயிக் வேண்டுகோளொன்றை முன்வைத்த போதிலும், இந்திய அதிகாரிகள் ஏற்க மறுத்ததோடு அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கு இம்மாத முற்பகுதியில் சர்வதேச பொலிஸாரின் உதவியும் கோரப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் பரந்த வேலைத்திட்டத்தின் ஒருபகுதியாக ஸாகிர் நாயிக் இதனைக் கருதுகின்றார்.
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு தடை விதிக்கப்படுவதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் ஸாகிர் நாயிக் திறந்த கடிதமொன்றை எழுதினார். அதில் 'இது வெறுமனே என் மீதான தாக்குதல் அல்ல, இது இந்திய முஸ்லிம்கள் மீதான தாக்குதலாகும். அது மட்டுமல்ல சமாதானம், ஜனநாயகம் மற்றும் நீதிக்கு எதிரான தாக்குதலுமாகும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் அவர் எழுதிய திறந்த கடிதத்தில் 'என் மீதும் இஸ்லாமிய ஆய்வு நிலையத்தின் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஆய்வு நிலையத்தின் மீது விதிக்கப்பட்ட தடை பல மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. இது இனத்துவ ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.
விசாரணைகள் செய்யப்படுவதற்கு முன்னர், அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் தடை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது எனது மதத்தோடு சம்பந்தப்பட்டதாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணங்களின் அடிப்படையிலானதாகவோ இருக்கலாம், அது ஒரு விடயமல்ல. எப்படி எனது 25 வருட பணிகள் முற்று முழுதாக சட்டவிரோதமானதாக இருக்க முடியும். இதுவே இந்த நாட்டின் மிகப்பெரும் துரதிஷ்டமாகும்'
ஊடகங்களால் வழங்கப்பட்ட கௌரவம்
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பலர் மோடியின் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்துள்ள தீவிர இந்துத்துவ குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்ற நிலையில் அவரது கருத்து இந்திய முஸ்லிம் சமுதாயத்தினரால் பரவலாக பகிரப்பட்டுள்ளது.
முஸ்லிம் என்ற ஒரேயொரு காரணத்தினாலேயே ஸாகிர் நாயிக் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற டூசேர்கிள்ஸ் டொட் நெட் என்ற செய்தி இணையத்தளத்தின் ஆசிரியரான காசிப்-உல்-ஹக் தெரிவித்தார்
ஸாகிர் நாயிக்கின் சில கூற்றுக்கள் பிரச்சினையானவையாகவும் மோதும் தன்மையுடையனவாகவும் காணப்பட்டாலும் கூட அவர் வன்முறையினைப் பிரசாரம் செய்யவில்லை. அவரது விரிவுரைகள் வெளிப்படையானவை, அவற்றின் ஒலி மற்றும் பதிவுகள் இலவசமாகக் கிடைக்கின்றன எனவும் காசிப்-உல்-ஹக் தெரிவித்தார்.
ஒரு துளியேனும் இந்திய ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படாத நிலையில் அவை இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு கௌரவம் அளிக்கின்றனவென்றால், அவரை கைது செய்து குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்த நினைக்கும் மனிதத்தன்மை குறைந்தவர்களின் மனோநிலை பற்றி எம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது எனத் தெரிவித்த அவர், பொய்யாக சோடிக்கப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரிலான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம்கள் பலர் எந்தக் குற்றச் செயலுடனும் தொடர்புபடாத அப்பாவிகள் என நிரூபணமாகி விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
பக்கச்சார்பாக நடப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் நலின் கொஹ்லி 'இந்திய நீதித்துறை பக்கச்சார்பின்மைக்கு பிரபலமானதொன்றாகும். அது மிக மெதுவாக நகரும் ஒன்றாக இருக்கலாம். ஆனால், இறுதியில் அனைவரும் நீதியினைப் பெற்றுக்கொள்வார்கள். ஸாகிர் நாயிக்கிடமிருந்து மதச்சார்பு தொடர்பான எந்த சான்றிதழும் இந்தியாவுக்கு தேவையில்லை, ஏனென்றால் அவர் தப்பியோடியவர்' எனத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான எவ்வித குற்றச் செயலையும் தனது கட்சிக்காரர் செய்யவில்லை என ஸாகிர் நாயிக்கின் சட்டத்தரணி முபீன் சுல்பிகார் வலியுறுத்தினார்.
பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் இதுவரை குற்றப்பத்திரம் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் 'நாயிக்குக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் 'முக்கியத்துவமானவை' அதாவது மிகப் பாரதூரமான பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்ட அமைப்புகளுக்கு ஆதரவான அவரது உரைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவர் எந்தத் தவறையும் செய்யவில்லையானால் அவர் அச்சப்படத் தேவையில்லை.
அவர் தொடர்ந்தும் தலைமறைவாக இருப்பது அவரது நடத்தை மற்றும் அவருக்கு எதிரான ஆதாரங்கள் தொடர்பில் மேலும் வினாக்கள் எழுப்பப்படுவதற்கு காரணமாக அமையும்' எனவும் பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் நலின் கொஹ்லி குறிப்பிட்டார்.
தெற்கு கேரள மாநிலத்தின் இளைஞர்களை ஈராக்கில் மற்றும் லெவான்ட் பகுதிகளில் செயற்படும் ஐ.எஸ் அமைப்புடன் இணையுமாறு தூண்டியதாக இந்திய அதிகாரிகள் ஸாகிர் நாயிக்கின் மீது குற்றம் சாட்டிய போதிலும், அதனை மறுத்துள்ள அவர் அவ்வமைப்பினை அவர் விமர்சித்துள்ளதோடு இஸ்லாத்திற்கு எதிரான அமைப்பு எனவும் வர்ணித்துள்ளார்.
சர்ச்சை
ஒரு மருத்துவராக இருந்து தொலைக்காட்சி மூலமான இஸ்லாமிய பிரசாரகராகிய பின்னர் 1990களிலிருந்து சில விடயங்களில் சர்ச்சைக்குரிய ஒருவராக மாறியிருந்தார்.
தனது தஃவா பணி என அழைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கப் பிரசார செயற்பாடுகள் அரசியலமைப்பினால் அனுமதிக்கப்பட்டவையாகும். அனைத்துப் பிரஜைகளுக்கும் தமது மதத்தைப் பின்பற்றுவதற்கும் பிரசாரம் செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது என ஸாகிர் நாயிக் வலியுறுத்தியுள்ளார். எனினும் மதமாற்றம் சர்ச்சைக்குரிய விடயமாகக் காணப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் மதமாற்றத் தடைச்சட்டம் அமுலில் உள்ளது.
அனைத்து முஸ்லிம்களும் பயங்கரவாதிகளாக மாறவேண்டும் என பொதுக்கூட்டமொன்றில் ஸாகிர் நாயிக் கூறியதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மலேஷியா அவரது விரிவுரைகளைத் தடைசெய்த அதேவேளை, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா ஆகிய நாடுகள் அவருக்கான வீசா அனுமதியினை மறுத்துள்ளன. மலேஷியாவின் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான ஹின்ட்ராப் எனும் குழு, அங்கிருக்கும் ஸாகிர் நாயிக்கின் நிரந்தர வதிவிடத்தை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் இந்துத்துவ அடிப்படைவாதக் குழுக்கள் எழுச்சிபெற்ற காலப்பகுதியிலேயே ஸாகிர் நாயிக் தனது போதனைகளை ஆரம்பித்தார் என விளக்கினார் கொல்கத்தாவின் அலியாஹ் பல்கலைக்கழகத்தில் தொடர்பாடல் என்ற பாடத்தினை கற்பித்துவரும் மொஹமட் றியாஸ்.
அயோத்தியிலிருந்த மத்தியகால யுகத்தைச் சேர்ந்த பாபரி மஸ்ஜித், 1992 ஆம் ஆண்டு அந்த இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டுமெனக் கோரி இந்துத்துவ அடிப்படைவாத குழுவொன்றினால் தகர்க்கப்பட்டது. கோயில் கட்டப்பட வேண்டுமென்ற கோரிக்கையின் பின்னணியில் இருந்தவர் ஒரு காலத்தில் பிரதமர் மோடியின் ஆலோசகராக இருந்த லால் கிருஷ்ண அத்வானியாவார்
மஸ்ஜித் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து ஸாகிர் நாயிக்கின் பூர்வீக நகரான மும்பையில் மதக்கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் நாடுமுழுவதும் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்டனர். இவர்களுள் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாவர்.
மஸ்ஜித் தகர்க்கப்பட்டதன் பின்னர் 1990 களில் முஸ்லிம்கள் மிகவும் கவலையடைந்த நிலையிலேயே காணப்பட்டனர். பாரம்பரிய இஸ்லாமிய மதகுருமார் தம்மை பொதுத்தளங்களிலிருந்து விலகியே இருந்தனர்.
முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த தலைமைத்துவ வெற்றிடத்தை ஸாகிர் நாயிக் நிரப்பினார். இளைஞர்களுக்கு வழிகாட்டல்களையும் வழங்கினார். நாளாந்தம் இஸ்லாத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை அவர் முன்வைத்தது மட்டுமல்லாது, இளைஞர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்ற புதிய நம்பிக்கையினையும் விதைத்தார் எனவும் விளக்கினார் மொஹமட் றியாஸ்.
ஆங்கிலத்தில் சரளமான பேச்சும் மேற்கத்தைய ஆடையும் அவரது கருத்துக்கள் படித்த இளைஞர்களை கவரக் காரணமாக இருந்ததாகவும் றியாஸ் குறிப்பிட்டார்.
பீஸ் தொலைக்காட்சியின் உருது மொழி அலைவரிசை 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு வங்காள மொழி அலைவரிசையும் ஆரம்பிக்கப்பட்டன.
2012 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்தினால் பீஸ் தொலைக்காட்சி அலைவரிசை தடை செய்யப்பட்டது. இஸ்லாத்தின் வஹாபிஸக் கோட்பாட்டினை இந்த பீஸ் பீஸ் தொலைக்காட்சி அலைவரிசை பிரசாரம் செய்வதாக இந்திய புலனாய்வுத்துறை சந்தேகம் கொண்டுள்ளது.
இந்தியாவில் இஸ்லாத்தின் அடையாளமாக ஸாகிர் நாயிக் காணப்படுகின்றார். அதனால்தான் அவர் இலகுவாக இலக்கு வைக்கப்பட்டுள்ளார். தற்போதைய இஸ்லாமிய எதிர்ப்புணர்வு பாரம்பரிய முஸ்லிம்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாகப் பார்க்கப்படும் நிலையினை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமும் அடிப்படைவாதமும் வேறுபடுத்திப் பார்க்கப்படாமல் குழம்பிய நிலையிலேயே பார்க்கப்பட்டு வருகிறது எனவும் றியாஸ் சுட்டிக்காட்டினார்.
அல் ஜஸீரா இணையதளத்தில் ஸைப் காலித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்
No comments