Breaking News

முஸ்லிம் சமூகம் நிதானமிழக்க கூடாது

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள இனவாத, மதவாத செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விதமான அதிர்வலைகள் தோன்றியுள்ளதை அவதானிக்க முடிகிறது.ஊடகங்களில் இது தொடர்பான விடயங்கள் அதிகம் பேசப்படுவதுடன் அரசாங்க உயர் மட்டத்திலும் கூட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

குறிப்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதற்கமைய வன்முறைகளைத் தூண்டுவோர் விடயத்தை சட்டத்தை நிலைநாட்டுமாறும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் அவ்வப் பிரதேச பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந் நிலையில்தான் முஸ்லிம் சமூகம் சமகால சூழலில் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், தேசிய சூறா சபை என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
'' முஸ்லிம்கள் மிக நுணுக்கமாகவும், தூர நோக்குடனும் சிந்தித்து செயலாற்றுவது அவசியமாகும். ஆத்திர, அவசரப்பட்டு தீர்மானங்க ளை மேற்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்வது அவசியமாகும்.இலங்கை முஸ்லிம்கள் பௌத்த கடும்போக்கா ளர்களின் செயற்பாடுகளால் ஆத்திரமுற்று, எம்மை ஆதரிக்கும் மிதவாத பெரும்பான்மை சிங்களவர்களை பகைத்துக்கொள்ளும் நிலையேற்படாது சிந்தித்து புத்திசாதுர்யமாக செயற்படுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் தமது ஜமாஅத்துக்கு உட்பட்டவர்களுக்கு நாட்டின் அசாதாரண சூழ்நிலையை விளக்கி அறிவூட்டுவதற்கு நடவடிக்கையெடுப்பதோடு, பள்ளிவாசல், ஊர், வியாபார தலங்கள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு குறித்தும் அதிக அக்கறையோடு செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம்'' என்றும் மேற்படி தேசிய தலைமைத்துவங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்தர்ப்பத்தில் ஆங்காகங்கே வெவ்வேறு அமைப்புகளின் பெயரால் ஹர்த்தால் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் முஸ்லிம் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசாங்கம் இந்த இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதாக வாக்குறுதியளித்துள்ள நிலையில் அதற்கான அவகாசத்தை நாம் வழங்க வேண்டியது அவசியமாகும். 
அடுத்து வரும் சில நாட்களில் இனவாதிகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சில முக்கிய நகர்வுகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் நாம் இனவாத சக்திகளையோ அல்லது பெரும்பான்மை இன மக்களையோ எரிச்சலூட்டச் செய்கின்ற செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்வது வரவேற்கத்தக்கதாகும்.
அந்த வகையில் முஸ்லிம் சமூகம் சமகால சூழலில் நிதானமாகவும் சமயோசிதமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என நாமும் வலியுறுத்த விரும்புகிறோம். 

No comments