உலகை உறைய வைத்த அய்லான் குர்தியின் மரணம்
துருக்கிய கடற்பரப்பில் மூழ்கிய மூன்று வயது சிரிய நாட்டுச் சிறுவன் அய்லான் குர்தியின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியிலிருந்து கிரீஸை நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் படகு மூழ்கியதால் இந்தச் சிறுவன் உட்பட 12 பேர் துருக்கிக் கடற்பரப்பில் உயிரிழந்தனர்.
துருக்கி கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின் உடலும், அதை கையிலேந்திச் சென்ற போலீஸும் அடங்கிய புகைப்படம், உலக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாமல், அரபு மற்றும் மேற்குலக நாடுகளின் அலட்சியப் போக்கையும் கை உயர்த்தி கேள்வி கேட்கும் வகையில் அமைந்துவிட்டது.
சர்வதேச அளவில் தற்போது பேசப்பட்டு வரும் அந்தக் குழந்தையின் பெயர் அய்லான் குர்தி(3). அவனது தாய் ரேஹான் குர்தி, சகோதரர் காலிப் குர்தி, தந்தை அப்துல்லா குர்தி மற்றும் சில குழந்தைகள் உட்பட 12 பேர் அந்த படகில் கிரீஸை அடைவதற்காக சட்டவிரோத பயணத்தை மேற்கொண்டனர். இதன்போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
புகைப்படம் எடுத்தது எப்படி?
துருக்கியின் டோகன் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்தபெண் புகைப்பட நிபுணர் நிலுபர் டெமிர்.
இவர்தான் கரை ஒதுங்கிய சிறுவன் அய்லானின் உயிரற்ற உடலை புகைப்படம் எடுத்தவர். அவர் கூறியதாவது,
கடந்த புதன்கிழமை அதிகாலை போட்ரம் கடற்கரையில் இரண்டு படகுகள் கவிழ்ந்த தகவல் அறிந்து அங்கு சென்றேன்.
அங்கு கடற்கரையில் தலைகுப்புற கிடந்த குழந்தையின் உடலைப் பார்த்து அப்படியே கல்லாக உறைந்துவிட்டேன்.
அந்த குழந்தையின் துயரத்தை உலகறியச் செய்ய வேண்டும். அவனின் கடைசி அழுகுரலை உலகம் கேட்க வேண்டும் என்பதற்காக அந்தக் குழந்தையை புகைப்படம் எடுத்தேன். அங்கு நான் சிந்திய கண்ணீர் இன்று உலகமெல்லாம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துருக்கி மருத்துவமனையில் அப்துல்லாஹ்
உயிர் பிழைத்த அப்துல்லாஹ் குர்தி தனது குடும்பத்தினரின் உடல்களை பெற்றுக் கொள்ள துருக்கியின் முக்லா நகர மருத்துவமனைக்கு வந்தார்.
அங்கு அவர் அந்த மோசமான தருணத்தை ஊடகங்களிடம் இப்படி விபரித்துள்ளார்.
''கோஸ் தீவில் இருந்து 4 கி.மீ. தொலைவில் எங்கள் படகு வந்தபோது ராட்சத அலையால் படகு தூக்கி வீசப்பட்டது. நாங்கள் அணிந்திருந்த லைப் ஜாக்கெட் போலியானது. அதனால் அனைவரும் தண்ணீரில் மூழ்கினோம்.
படகின் ஒரு பகுதியை பிடித்தபடி நானும் எனது மனைவியும் குழந்தைகளை காப்பாற்ற போராடினோம். முதல் ஒரு மணி நேரத்தில் எனது மூத்த மகன் காலிப் கைகளை விட்டுச் சென்றான். இரண்டாவது மகன் அய்லானையாவது காப்பாற்றிவிடலாம் என்று அவனை தண்ணீருக்கு மேலே தூக்கிப் பிடித்திருந்தேன். ஆனால் அவனும் எனது கையிலேயே இறந்துவிட்டான்.
எனது மனைவியையாவது காப்பாற்றலாம் என்று நினைத்தேன். அவளும் என்னைவிட்டு போய்விட்டாள்.
எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.
இனிமேல் உலகத்தையே எனக்கு தந்தால்கூட எனக்கு எதுவுமே வேண்டாம்.
அவர்களோடு சேர்த்து என்னையும் புதைத்துவிடுங்கள். இல்லையேல் அவர்களின் கல்லறை அருகே அமர்ந்திருந்து உயிரை விட்டுவிடுவேன்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏன் சிரியாவிலிருந்து வெளியேறினர்?
சிரியாவில் கடந்த ஐந்து வருடங்களாக அந்நாட்டு அதிபர் பஷர் அல் அஸாதுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அங்கு ஐ.எஸ். அமைப்பினரும் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்திருப்பதுதான் குர்திஷ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கொபானி நகர். இந்த நகர் குர்திஷ் படையினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது. எனினும் இந்த நகரை கைப்பற்றுவதற்கு ஐ.எஸ். அமைப்பினர் கடும் தாக்குதல்களை தொடுத்தனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முழுவதும் இடம்பெற்ற மோதல்களையடுத்து அங்கிருந்து ஐ.எஸ். அமைப்பினர் துரத்தியடிக்கப்பட்டனர். மோதல்கள் உக்கிரமடைந்த காலப்பகுதியில் அப்துல்லாஹ் குர்தியின் குடும்பத்தினர் பல தடவைகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த ஜூன் மாதம் மீண்டும் கொபானியை இரண்டு நாட்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஐ.எஸ். படையினர் நடத்திய தாக்குதல்களில் சுமார் 200 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்தே அப்துல்லாஹ் குர்தி தனது குடும்பத்தோடு ஐரோப்பா நோக்கி பயணிக்கும் முடிவை எடுத்துள்ளார்.
தனது கரங்களாலேயே மூன்று ஜனாஸாக்களையும் அடக்கிய அப்துல்லாஹ் குர்தி
படகு அனர்த்தத்தில் உயிரிழந்த தனது மனைவி மற்றும் இரு மகன்களையும் அப்துல்லாஹ் குர்தி தனது கரங்களாலேயே அடக்கம் செய்தார். கொபானியிலுள்ள ஷுஹதாக்கள் மையவாடியிலேயே ஜனாஸா நல்லடக்கம் நடைபெற்றது.
துருக்கியிலிருந்து விசேட விமானம் மூலம் சிரியாவின் கொபானி நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாஸாக்கள் கொண்டு வரப்பட்டன. இதில் அப்துல்லாஹ் குர்தியின் உறவினர்களும் அதிகாரிகள் சிலருமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
ஜனாஸா நல்லடக்கத்தின் பின்னர் அங்கு குழுமியிருந்தவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அப்துல்லாஹ் குர்தி ''இந்தத் துயர சம்பவத்திற்காக நான் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை. என்னை நானே நொந்து கொள்கிறேன். இதற்கான விலையை நான் எனது வாழ்க்கை முழுவதும் செலுத்த வேண்டி வரும் என நினைக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
குர்து இனத்தைச் சேர்ந்த அப்துல்லா சிரியாவில் முடிதிருத்தும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார்.
நால்வர் கைது
அய்லான் குர்தியின் குடும்பம் உட்பட பலரை சட்டவிரோதமான முறையில் படகில் ஏற்றிச் சென்ற சிரியாவைச் சேர்ந்த நால்வரை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இப் படகு விபத்தில் நான்கு சிறார்கள் உட்பட மொத்தமாக 12 பேர் உயிரிழந்திருந்தனர்.
இவர்கள் அனைவரதும் மரணத்திற்கு காரணமாக அமைந்தார்கள் என்ற வகையில் நான்கு சந்தேக நபர்களையும் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு துருக்கியின் 'போட்ரம்' நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புகைப்படத்தால் குவியும் நிதியுதவிகள்
அய்லான் குர்தியின் புகைப்படங்கள் சமூக ஊடங்கள் வாயிலாக உலகம் முழுவதிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிரிய நாட்டு அகதிகளுக்கு உதவும் வகையில் மேற்கு நாடுகளின் மக்கள் பாரியளவு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். அதே போன்று சர்வதேச நாடுகளும் தமது நிதியுதவிகளை அதிகரித்துள்ளன.
அய்லான் குர்தியின் புகைப்படம் ஏற்ப டுத்தியுள்ள தாக்கம் காரணமாக தமது நிறுவனத்திற்கு வழக்கமாக கிடைக்கப் பெறும் நிதியுதவி 105 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக யுனிசெப் அமெரிக்க கிளை தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் சிரிய மக்களுக்கான தமது நாட்டின் மனிதாபிமான உதவிக்கு மேலதிகமாக 153 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இப் புகைப்படத்தின் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்ட சர்வதேச ஒலிம்பிக் பேரவை தமது பங்குக்கு 2 மில்லியன் யூரோக்களை சிரிய அகதிகளுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது.
பெரு வரவேற்பளிக்கும் ஜேர்மன் மக்கள்
நேற்று முன்தினம் சனிக்கிழமை சுமார் 8000 பேர் ஒஸ்ரியா வழியாக ஜேர்மன் எல்லையை வந்தடைந்துள்ளனர். அதேபோன்று நேற்றும் ஆயிரக் கணக்கானோர் ஜேர்மனை வந்தடைந்துள்ளனர்.
இவர்களுக்கு அந்நாட்டு மக்கள் பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
சிரிய அகதிகளை ரயில் நிலையங்களில் வரவேற்கக் காத்திருந்த ஜேர்மன் மக்கள் '' ஜேர்மனிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்'' எனும் வாசகங்கள் ஏந்திய பதாதைகளைத் தாங்கியிருந்தனர்.
இவர்களை வரவேற்று உதவிகளைச் செய்வதற்காக தொண்டர்களும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அது மாத்திரமன்றி உணவு மற்றும் தண்ணீர் போத்தல்களையும் அகதிகளுக்கு வழங்கி தமது அன்பையும் ஆதரவையும் ஜேர்மன் மக்கள் வெளிப்படுத்தினர்.
பல்வேறு மேற்கு நாடுகள் அகதிகளை தமது நாடுகளுக்குள் அனுமதிக்காது எல்லைகளை மூடி வைத்துள்ள நிலையில் ஜேர்மன் மாத்திரம் இவ்வாறு வரவேற்பளிப்பது அந்நாட்டினதும் அங்கு வாழும் மக்களினதும் மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு ஜேர்மனை வந்தடையும் மக்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உரிய பதிவு நடவடிக்கைகளின் பின்னர் நிரந்தரமாக குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அய்லானின் மரணம் வீண்போகவில்லை
அய்லான் குர்தியின் மரணம் ஏற்படுத்திய தாக்கம் சாமான்யமானதல்ல. சமூக ஊடக பாவனையாளர்களை மாத்திரமன்றி மேற்கின் அதிகாரம் பொருந்திய ஆட்சியாளர்களின் உள்ளத்தை உலுக்கிவிட்டுள்ளது.
தான் ஒருவன் மரணித்தாலும் ஆயிரக் கணக்கான தனது நாட்டு அகதிகள் உயிர் வாழ்வதற்கு ஒரு நாடு கிடைப்பதற்கு அய்லான் வழி செய்திருக்கிறான்.
ஆக, அய்லான் மரணம் ஒரு செய்தியாக மாத்திரம் அன்றி ஒரு வரலாறாகவே மாறிவிட்டது.
அவன் உலகில் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களின் சாட்சியாக எப்போதும் இருப்பான்.
நன்றி : விடிவெள்ளி
No comments