நம்பிக்கை அளிக்கும் தேசிய நிறைவேற்று சபை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்று இன்றுடன் சரியாக இரண்டு வாரங்கள் பூர்த்தியாகின்றன.
இந்த இரண்டு வார காலப் பகுதியில் ஏலவே வாக்குறுதியளிக்கப்பட்டபடி தேசிய அரசியல் அரங்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதல் தடவையாக பாராளுமன்றமும் கூடியது. ஜனாதிபதித் தேர்தலின்போது ஸ்தம்பிதமடைந்திருந்த அரச இயந்திரம் தற்போது மீண்டும் புத்துயிர்ப்புடன் இயங்கத் தொடங்கியிருக்கிறது.
தேசிய அரசாங்கத்தில் பல்வேறு பின் புலங்களைக் கொண்ட கட்சிகள் அங்கம் வகிப்பதன் காரணமாக அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தேவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இருக்கிறது.
எதிரும் புதிருமான கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவரான பிரதமரும் நாட்டை வழிநடாத்திச் செல்ல உறுதிபூண்டிருப்பது ஆரோக்கியமானதொரு அரசியல் மாற்றமாகும்.
நீலம், பச்சை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் தேர்தலுக்குப் பின்னரும் அடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னரான காலப் பகுதியிலும் மிகவும் நிதானமாகவும் விட்டுக் கொடுப்புடனும் நாட்டை வழிநடாத்த வேண்டிய பொறுப்பு இவர்கள் இருவரையுமே சாரும்.
அதேபோன்று புதிய அரசாங்கத்தின் வாக்குறுதிக்கமைய உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய நிறைவேற்று சபையில் சகல தேசிய அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் அங்கம் வகிப்பதும் இதில் மிக முக்கிய விவகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படுவதும் மகிழ்ச்சிக்குரியதாகும்.
ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரும் முஸ்லிம்கள் சார்பில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் இந்த நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கின்றனர். அத்துடன் ஜாதிக ஹெல உறுமய சார்பில் சம்பிக்க ரணவக்கவும் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் மனோ கணேசனும் இதில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
நாட்டின் தேசிய விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்துபவர்கள் எனக் கருதப்படும் சகல அரசியல் தலைவர்களும் இதில் உள்ளடங்கியிருப்பது ஆரோக்கியமான பல தரப்பு கருத்தாடலுக்கு வழிவகுக்கும் என நம்பலாம்.
இதுவரை காலமும் நிறைவேற்று அதிகார மமதையில் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை எடுத்து ஆட்சி செய்ததையடுத்தே நாடு குட்டிச் சுவரானது. ஊழலும் மோசடியும் அதிகார துஷ்பிரயோகமும் தலைவிரித்தாடியது. ஆனால் தற்போதைய புதிய அரசாங்கத்தில் நாட்டை வழிநடத்தும் பொறுப்பானது தேசிய நிறைவேற்று சபையின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. இது இஸ்லாம் வலியுறுத்துகின்ற 'ஷூரா' என்றழைக்கப்படும் ஆலோசனை அல்லது கலந்துரையாடல் சபைக்கு ஒப்பானது.
தேசிய நிறைவேற்று சபை மூலமாக கடந்த அரசாங்கத்தில் விடப்பட்ட தவறுகள் இனங்காணப்பட்டு அவை திருத்தப்பட வேண்டும்.
குறிப்பாக புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவும் புதிய அரசாங்கம் முன்வர வேண்டும். என்ன எதிர்பார்ப்புகளின் பேரில் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்தார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவே நம் எல்லோரினதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனைகளுமாகும்.
அந்த வகையில் அடுத்து வரும் நாட்களில் கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்காது அனைவரும் ஓரணியில் நின்று நாட்டை சீரான பாதையில் வழிநடத்திச் செல்ல திடசங்கற்பம் பூண வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறோம்.
நன்றி விடிவெள்ளி
Post Comment
No comments