ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தியது எப்படி?
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் மிகவும் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்ற ஒரு முக்கிய தேர்தலாக கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இம் முறை இத் தேர்தலை எந்தவிதமான நெகிழ்வுப் போக்குகளுக்கும் இடமின்றி தேர்தல்கள் திணைக்களம் எவ்வாறு நீதியாக நடத்தி முடித்தது என்பது பற்றிய விபரங்களை 'விடிவெ ள்ளி' மூலமாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொஹமட்.
சந்திப்பு : ஏ.ஆர்.ஏ.பரீல்
தேர்தலொன்று நடாத்தப்படும் தினத்தன்றோ அதற்கு முன்தினமோ வாக்குகள் எண்ணப்படும் நேரமோ எவ்விதமான குழப்பமோ குளறுபடிகளோ நடைபெற முடியாத வகையில் தேர்தல் சட்டங்களும் நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
பாராளுமன்ற நியதிச்சட்டங்களில் இருக்கின்ற சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நீதிமன்ற தீர்ப்புகள் வழிகாட்டிகளாக அமைந்துள்ளன. உதாரணமாக தேர்தல் சட்டங்களில் தேர்தலொன்றை ரத்துச் செய்ய மூன்று சந்தர்ப்பங்களில் அனுமதி இருந்தது. அவை,
1. உரிய நேரத்தில் வாக்களிப்பு நடைபெறாமை.
2. தொடர்ச்சியாக வாக்களிப்பை நடத்தி உரிய நேரத்துக்கு முடிக்க முடியாமற் போகின்றமை
3. வாக்குப் பெட்டியை வாக்கு எண்ணும் நிலையத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமற் போகின்றமை.
தேர்தலை இரத்துச் செய்தாலும் இரத்துச் செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் தேர்தல் முடிவில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சந்தர்ப்பங்களில் மாத்திரமே மீள் வாக்களிப்பை நடாத்த முடியும் என்பது தேர்தல் சட்டங்களில் காணப்படும் விதியாகும்.
இச் சட்டங்களுக்கு அமைவாக ஏதேனும் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பித்து 4 மணிக்கு முடிவுபெற்று வாக்குப்பெட்டி வாக்கு எண்ணும் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டால் இடையில் வன்முறைகள் நடைபெற்றிருந்தாலும் வாக்குகள் எண்ணப்படும்.
ஆனால் 1998ஆம் ஆண்டு வட மாகாண சபைத் தேர்தல் மற்றும் 2000ஆண்டு பாராளுமன்ற தேர்தல்களின்போது நடைபெற்ற வன்முறைகளினால் வாக்களிப்பு இரத்துச் செய்யப்படாமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 2 வழக்குகளில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதியரசர் மார்க் பர்ணாந்துவின் தீர்ப்பு தேர்தல் வரலாற்றில் ஓர் மைல் கல்லாகும்.
அவரின் தீர்ப்பின்படி வாக்களிப்பு உரிய நேரத்துக்கு ஆரம்பித்தாலும் முடிவடையும் நேரம் வரை தொடர்ச்சியாக வாக்களிப்பு தடையின்றி நடைபெற வேண்டுமென்ற நிபந்தனை மிக முக்கியமானதென்றும் விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தலொன்றில் தேர்தல் முடிவு என்பது வெறுமனே கட்சிகள் பெற்றுக் கொள்கின்ற வாக்குகள் மட்டுமன்றி வேட்பாளர்களின் விருப்பு வாக்குகளையும் குறிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் வாக்களிப்பின் போது நடைபெறும் ஒரு சிறு சம்பவம் கூட சட்டத்தின் படி வாக்களிப்பின் தொடர்ச்சித் தன்மையினைப் பாதிக்கின்றதெனவும் ஒரு சில வாக்குகள் பலாத்காரமாக அளிக்கப்பட்டாலும் விருப்பு வாக்குகளைப் பாவித்து தேர்தல் முடிவுகள் பாதிப்புக்குள்ளாகலாம் எனவும் கூறினார்.
இதனால் முன்னாள் தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவிடம் வாக்களிப்பின் தொடர்ச்சித்தன்மையை பாதிக்கக்கூடிய நிகழ்வுகள் எவை என நீதிமன்றுக்கு அறிவிக்குமாறு கேட்ட நீதிபதி அவரால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் நிகழ்வுகளின் போதும் வாக்களிப்பை இரத்துச் செய்ய முடியுமெனத் தீர்ப்பளித்தார்.
1. வாக்காளர்கள் விரட்டியடிக்கப்படும் சந்தர்ப்பங்கள்
2. பலாத்கார வாக்களிப்பு நடைபெறும்போது
3. தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடியை அணுக முடியாதவாறு தடையேற்படுத்தும்போது 4. வாக்களிப்பு நிலையத்தில் சிரேஷ்ட அலுவலரால் கட்டுப்படுத்த முடியாத ஏதேனும் நிகழ்வு காரணமாக வாக்களிப்புக்கு தடங்கல் ஏற்படும் போது
5. குறிப்பிட்ட வாக்களிப்பு நிலையமொன்றில் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தலொன்று நடைபெறவில்லை என தேர்தல் ஆணையாளர் கருதும் போது வாக்களிப்பை ரத்துச் செய்ய முடியும்.
குறிப்பாக இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல் திணைக்களத்துக்கு தேர்தல் தினம் சவாலாக இருக்கவில்லை. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட தினம் முதல் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தேர்தல் காலமாகும். இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு என்ன நடக்கும் என்பதை நாம் அறிந்து வைத்திருந்தோம்.
தேர்தல் சட்டத்தில் தேர்தல் தினத்துக்கு முன்னைய கால தேர்தல் சட்ட மீறல்களுக்கான சட்ட பொறிமுறைகள் குறைவாகவே உள்ளன. அரசியலமைப்பின் 17ஆவது திருத்தச்சட்டத்தின் படி அரச வளங்கள் எவரேனும் வேட்பாளரை ஊக்குவிப்பதற்கோ அல்லது மற்றவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ பாவிக்கப்படக்கூடாது. இவற்றை ஒருவருக்கு ஆதரவாகப் பாவிப்பதை தவிர்க்க முறையான திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.தேர்தல் ஆணையாளர் இதற்குப் பல உத்திகளைக் கையாண்டார்.
தேர்தல் சட்டத்தை வலுவாக்கம் செய்கின்ற பொலிஸ் திணைக்களம் ஊழியர்களுக்கு மேலதிகமாக தேர்தல் திணைக்கள ஊழியர்களையும் பயன்படுத்திக் கொண்டார்.
போட்டியிடுகின்ற கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேர்தல் முறைப்பாட்டு நிலையியற் குழுவொன்றினை நிறுவி அக்குழுவின் நிரந்தர அங்கத்தினர்களாக அக்கட்சிகளின் பிரதிநிதிகளை நியமித்ததுடன் அடிக்கடி அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறிந்தார்.
தேர்தல் செயலகத்திலும் மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலர் அலுவலகங்களிலும் தேர்தல் முறைப்பாட்டு கையேற்பு நிலையங்களை நிறுவி முறைப்பாடுகளை உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்து உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புக்களை ஏற்படுத்தினார்.
இவ் அனைத்து இடங்களிலும் உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் தேர்தலைக் கண்காணிப்பதற்கும் தேர்தல் சட்ட மீறல்களை உரிய தரப்பினருக்கு முன்வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
17ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் உள்ளவாறு ஊடகங்களுக்கான வழிகாட்டல் நெறிகளை வெளியிட்டு ஊடக நிறுவனங்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டிய முறைகளும் தேர்தல் திணைக்களத்தினால் விளக்கப்பட்டன.
இவ்வழிகாட்டி நெறிகளை சில ஊடகங்கள் பின்பற்றத் தவறிய போது நீதிமன்ற தீர்ப்புகளில் ஊடக நெறி பின்பற்றப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவற்றுக்கு அறிவூட்டி மட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அத்தோடு அரச ஊடகங்கள் மற்றும் அரச சார்பான ஊடகங்கள் என்பனவற்றின் தலைவர்களோடு கலந்துரையாடல்களை நடாத்தி ஊடக வழிகாட்டி நெறிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இவற்றுக்கும் மேலதிகமாக அடிக்கடி ஊடகங்களுடனான கலந்துரையாட்களை நடாத்தியும் 35க்கும் மேற்பட்ட ஊடக அறிவித்தல்களை வெளியிட்டும் தேர்தல் சட்டத்தின் வலுவாக்கம் தொடர்பாக மக்கள் விழிப்பூட்டப்பட்டிருக்கிறார்கள்.
வாக்குப்பெட்டிகள் மாற்றப்படுகின்றன. வாக்கு எண்ணும் போது குளறுபடிகள் நடைபெறுகின்றன என சிலரிடம் காணப்பட்ட மூட நம்பிக்கைகளை இல்லாமற் செய்யும் வகையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெளிவுப்படுத்தப்பட்டனர்.
வாக்குப்பெட்டிகள் எவ்வித பாதிப்புக்கும் உட்படாது வாக்களிப்பு நிலையத்துக்கு வந்து சேர்வதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலான நடைமுறைகள் கையாளப்பட்டன.
மேலும் வாக்குகள் எண்ணும் போது ஆணையாளரின் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் கண்காணிப்பாளர்கள் பங்குபற்ற அவகாசம் வழங்கப்பட்டது.
கட்சி பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய பொது நலவாய நாடுகளின் அமைப்பு, தெற்காசிய தேர்தல் முகாமையாளர்களின் ஒன்றியம், ஆசிய பிராந்திய தேர்தல் அதிகாரிகளின் சங்கம் என்பனவற்றைச் சேர்ந்த 55 க்கும் மேற்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் தருவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட அவகாசம் அளிக்கப்பட்டது.
மேலதிகமாக உள்ளூர் தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் வெளிநாடுகளின் கண்காணிப்பாளர்களை வரவழைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டது.
நன்றி : விடிவெள்ளி
No comments