அளுத்கமவிலிருந்து தெஹிவளை வரை…. ஓரிரவுக்குள் உக்கிரம் பெற்ற இன வன்முறை.
அளுத்கம, தர்காநகர் பிரதேசங்களில் பொதுபலசேனா, சிங்கள ராவய இயக்கங்கள் ஒன்றிணைந்து நேற்று (15) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
மேற்படி பிரதேசத்தில் இரண்டு தினங்களுக்கு முன் முஸ்லிம் இளைஞர் ஒரு வருக்கும், பௌத்த மதகுரு ஒருவரின் சாரதிக்குமிடையில் ஏற்பட்ட தனிப்பட்ட விவகாரம் வலுப்பெற்றிருந்ததில், குறித்த சாரதி தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டதோடு, அச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் இளைஞர் கைதும் செய்யப்பட்டிருந்த்தார்.
எனினும், அன்றையதினம் இரவு மேற்படி பிரதேசங்களில் காடையர்கள் சிலரால் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் பலவும் தாக்கப்பட்டிருந்தன. மறுநாள் இப்பிரதேசங்களை கடையடைப்பும் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் முஸ்லிம் கவன்சில் உட்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் பலர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுரசேனாநாயகவோடு களுத்துறை பொலிஸ் காரியாலயத்தில் சுமுக பேச்சுவார்த்தை ஒன்றிலும் ஈடுபட்டனர்.
பிரதி பொலிஸ் மா அதிபர் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்திருந்த்தார், ஆனாலும், குறித்த முஸ்லிம் இளைஞருக்குப் புறம்பாக எவரும் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை.
இதேநேரம், சம்பவத்துடன் தொடர்புபட்ட பௌத்த மதகுருவை நேற்று ஊர்வலமாக அழைத்துச் செல்லவே பொதுபல சேனா திட்டமிட்டிருந்தது. அதன்படியே சக அமைப்புகளோடு மேற்படி ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடும் செய்திருந்தது.
இவ்வார்ப்பட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு பல தரப்பினரும் பாதுகாப்பு வட்டாரங்களை கோரியிருந்த போதும் அது பலனளிக்கவில்லை. மாறாக, விசேட அதிரடிப்படையினரும் அங்கு கொண்டு போய்க்கு விக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மதியம் ஆரம்பமான இந்த இனவாத ஆர்ப்பாட்டம் மாலையில் நிறைவெய்தி சகலரும் கலைந்துபோகும் நேரத்திலேயே குண்டர்கள் கல்வீசி கலகத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
பொலிஸார் கண்ணீர்ப் புகைபிரயோகித்து, ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்ட பிறகுதான் மேற்படி குண்டர்களின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ளது.
இரவு தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மேற்படி முஸ்லிம் பிரதேசங்களில் அவர்களது சொத்துக்களையும், உடைமைகளையும் துவம்சம் செய்த இவர்கள், முஸ்லிம்களை மூர்க்கமாகதாக்கவும் ஆரம்பித்தனர்.
அதுவரை அங்கேநிலைகொண்டிருந்த பொலிஸார் அந்த ஊரடங்குசட்ட நேரத்தில் குண்டர்கள் பலமானதாக்குதல்கள் முன்னெடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அவ்விடங்களை விட்டுமாயமாய் மறைந்திருந்தத போக்கையும் அவதானிக்க முடிந்திருந்தது. அழுத்தகம, தர்காநகர், பேருவளை, வேல்பிடிய, துந்துவ, தெஹிவளை என இக்கலகம் ஓரிரவுக்குள் பல பிரதேசங்களுக்கும் பரவியது.
இதேவேளை, கண்னத்தோட்டையிலும் முஸ்லிம் பாடசாலை நிர்மாணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்த்தனர்.
அசம்பாவங்கள் நிகழ்ந்த மேற்படி பிரதேசங்களில் 500 இற்கும் மேற்பட்ட குண்டர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஊரடங்குச்சட்ட நேரத்தில் அவர்கள் சட்டத்தை தம்கைகளில் எடுத்திருந்ததை அவதானிக்கும் போது அது அதிகாரத் தரப்பினரின் மறைமுக அங்கீகாரமாக இருந்தததாகவும் பலர் தெரிவித்துள்ளனர்.
வெறித்தனமான இந்தத்தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டும், எழுவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும், சுமார் 80 பேர்வெட்டுண்டு காயப்பட்டும், 40 இற்கும் மேற்பட்டவர்கள் இரத்தம் தோய்ந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கவும்பட்டனர்.
100 இற்கும் மேற்பட்ட கடைகளும் வீடுகளும் தீவைத்து எரிக்கவும் சேதத்துக்குள்ளாக்கவும்பட்டன. 02 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டதோடு பெட்ரோல் குண்டுகளும் எறியப்பட்டுள்ளன. 1500 இற்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் அனாதரவாக பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடம், மற்றும் பள்ளிவாசால்களில் தஞ்சம்புகுந்தனர். அமைச்சர் மற்றும் முஸ்லிம் தலைவர்களுக்கு, குறித்த கலகப் பிரதேசங்களுக்கு செல்வதற்குதடை விதிக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் இருவரும் நாட்டில் இல்லாத நேரம் பார்த்தே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதில், இது ஏற்கனவே திட்டமிடப்பட்டிருக்கலாம் என பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றன. (ரி/மு)
Tx:DailyCeylone
No comments