புல்மோட்டை காணி அபகரிப்பு: தட்டிக் கேட்க திராணியில்லையா?
எஸ்.என்.எம்.ஸுஹைல்
திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள அரிசி மலை, மீனாக்கேணி, ஜின்னா புரம், 14 ஆம் கட்டை பகுதி , 13 ஆம் கட்டைப் பகுதி, பொன்மலைக்குடா, கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளில் 2 500 ஏக்கருக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சில பிரதேசங்கள் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரிலும் பூஜா பூமி என்கின்ற போர்வையிலும் பௌத்த விகாரை விஸ்தரிப்புக்கும் கடற்படை முகாம் அமைப்பதற்குமாக அபகரிப்பதற்கான தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரியவருகிறது.
குறித்த பிரதேசங்களில் பரம்பரை பரம்பரையாக முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்பகுதிகளிலேயே விவசாயமும் ஏனைய சேனைப்பயிர் செய்கைகளிலும் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்து வருகின்றனர். எனினும் நாட்டில் கொடூர யுத்தம் இடம்பெற்று வந்த நிலையில் புல்மோட்டை உள்ளிட்ட கிழக்கின் பல பகுதிகளில் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் மீண்டும் சொந்த இடங்களுக்கு சென்று தமது வாழ்வை மீள ஆரம்பிக்க முற்படும் போது இவ்வாறு ஆக்கிரமிப்புகள் அதிகார வர்க்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
பாரம்பரியமாக விவசாயம் செய்த பெருந்தொகையான நிலங்கள் சுவீகரிக்கப்படவிருப்பதால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தமது நிலத்தை இழக்கவுள்ளனர். அத்துடன் உறுதியுள்ளவர்களின் காணிகள் கூட பறி முதல் செய்யப்படவுள்ளது. ஒரு சிலரிடம் பத்திரம் இல்லாதபோதும் அவர்கள் பலவருடங்களாக அக்காணிகளில் விவசாயம் செய்து வருவதுடன் குடியிருந்தும் வருகிறார்கள்.
அரிசிமலை, விகாரை, நாகவிகாரை என்ற சிறிய சிறிய விகாரைகள் இருந்த இடங்களில் பெரும் விகாரைகளை அமைப்பதற்காகவே இம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன் பொன் மலைக்குடா என்ற இடத்திலும் இன்னோர் இடத்திலும் கடற்படை, இராணுவ முகாம்களை விஸ்தரிப்பு செய்ய நினைக்கின்றார்கள். ஏற்கனவே இவ்விடங்களில் முகாம்கள் இருந்ததில்லையெனவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
புல்மோட்டைப் பிரதேசத்தின் 14 ஆம் கட்டை பிரதேசத்தை அண்டிய நாக விகாரைக்கான காணியை அளவிடுவதற்காக நில அளவைத் திணைக்களத்தினால் விதிக்கப்பட்ட பல தடைகளையும் தாண்டி திடீரென வந்தவர்கள் நில அளவையில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தோடு இம்மாத ஆரம்பத்தில் (02.09.2013) புல்மோட்டை அரிசிமலையை அண்டிய பகுதிகளை உள்ளடக்கிய பூஜா மற்றும் தொல்பொருளுக்கான காணிகளை அடையாளமிட்டு எல்லைகளை இடுவதற்காக வருகை தந்த நில அளவையாளர்களை மக்கள் அளக்கவிடாது வீதியில் இறங்கியதை அடுத்து அளவையாளர்கள் குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் புகாரிட்டனர்.
பின்னர் பொலிஸ் அத்தியட்சகர் சிசில் பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர் உமா மகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் அன்வர், குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் முபாரக், பிரதி தவிசாளர் தௌபீக், உறுப்பினர்களான சல்மான், பதுறுத்தீன் புல்மோட்டைக்கான ஜம்இய்யத்துல் உலமா சபை பள்ளிவாசல்களின் தலைவர்கள் நில அளவையாளர் உட்பட பல பிரமுகர்களின் கலந்து கொண்டனர்.
சில தினங்களின் பின்னர் மீண்டும் காணி அளவை மேற்கொள்வதற்காக இம்மாதம் 9 ஆம் திகதி நில அளவையாளர்கள் அளவையில் ஈடுபட முற்பட்டபோது பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகளால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.
இதன் போது பொலிஸ் நிலையத்தில் தமது கடமைக்கு பங்கம் விளைவித்ததாக மாகாண சபை உறுப்பினர் அன்வர், பிரதேச உதவி தவிசாளர், பெரிய பள்ளி தலைவர் ஜம்இய்யதுல் உலமா உறப்பினர் உள்ளிட்டோர் மீது முறைப்பாடு செய்யப்பட்டது.
மறுநாள் 10 ஆம் திகதி நீதிவான் நீதி மன்றத்தில் வழக்கு பதியப்பட்டு அவர்கள் நீதவான் சசிதரன் முன்னிலையில் ஆஜரானார்கள்.
பொலிஸ் சார்பில் பொலிஸ் அத்தியட்சகர் வாஸ் பெரேரா தமது கருத்தை நீதிமன்றில் முன்வைத்தபோது பிரதிவாதிகள் சார்பில் பத்து சட்டத்தரணிகளால் விவாதிக்கப்பட்டது. மக்கள் பிரதி நிதிகள் என்ற அடிப்படையில் இவர்கள் அரச கடமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்கவில்லை என்றும் அத்தோடு முறையாக தமது கட்சிக்காரர்கள் பிரச்சினையை தீர்க்கும் நோக்கிலே உரிய இடத்திற்கு சென்றதாகவும் வாதிட்டனர். பின்னர் ஒவ்வொருவரும் தலா ரூபா 10,000 சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நில அளவையை தொடர்ந்து மேற்கொள்வதற்காக நீதி மன்றின் அனுமதியைப் பெற்றுத்தருமாறு நீதிபதியிடம் பொலிஸ் அத்தியட்சகர் கேட்டபோது, தன்னால் அதனை தரமுடியாது எனவும் உயர் நீதி மன்றினாலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் 2013.09.18 ஆம் திகதி குறிதத வழக்கு மீண்டும் குச்சவெளி நீதிவான் நீதி மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது ஆஜரான மேற்குறித்த நபர்கள் சார்பாக அனைத்து சட்டத்தரணிகளும் தங்களது நியாயங்களை முன்வைத்தனர். பூஜாபூமி, தொல்பொருள் என்ற போர்வையில் காணிகளை அளவையிடுவதற்கான கட்டளையை பொலிஸாரிடம் நீதிமன்றம் கோரியது. எனினும் அவை சமர்பிக்கப்படவில்லை.
போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 2013.10.02 ஆம் திகதி குச்சவெளி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆதாரங்கள் சமர்ப்பிக்காமல் அளவைக்கான அனுமதியை வழங்க முடியாது என்றும் நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பிரச்சினை தொடர்பாக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூக நலனை கருத்திற்கொண்டு ஆஜரான சட்டத்தரணிகள் அனைவருக்கும் புல்மோட்டைப்பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.
இது விடயமாக மாகாண சபை உறுப்பினர் அன்வர் கூறுகையில், நான் தொடர்ந்து திகோணமலை மாவட்ட காணி விடயமாக பேசி வருகின்றேன். புல்மோட்டை தொடக்கம் சேருவிலை வரையான பகுதிகளில் பல ஏக்கர் காணிகளை பூஜாபூமி, தொல்பெருள் என்ற போர்வையில் அபகரிக்கும் நோக்குடன் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இவற்றை காப்பாற்றும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக புல்மோட்டை விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் பட்டுள்ளது. இவற்றுக்கான நீதியான தீர்வு மிக விரைவில் கிட்டும் என்று தான் நம்புவதாகவும் கூறிய அதே வேளை இப்பிரச்சினைக்கான முக்கிய காரணம் முஸ்லிம்கள் மத்தியில் இருக்கின்ற ஒற்றுமையின்மையுமே பலவீனமுமே என்றும் தெரிவித்தார்.
மேலும் இப்பிரச்சினை தொடர்பாக உயர்மட்டங்களுக்கு தான் தெரிவித்திருக்கும் அதே வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் கி.மாகாண சபை அமர்வின் போது இதைப்பற்றி பேசவுள்ள தாகவும் ஏற்கனவே முதலமைச்சரிடம் இது விடயமாக கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புல்மோட்டைக் காணிகளை பூஜா பூமிக்காக சுவீகரித்தே ஆகுவது என்று அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கையில் அரசுக்கு நல்ல பிள்ளையாக இருந்து கொண்டு புல்மோட்டை முஸ்லிம்களின் காணிகளைப் பாதுகாக்க முடியாது என கிழக்கு மாகாணசபையின் ஐக்கி தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஆண்டாண்டு காலமாக முஸ்லிம்களுக்குச் சொந்தமாக இருந்த காணிகள் அவை. அங்கிருந்து இடம்பெயர்ந்த பலர் அங்கு முறையாக மீள்குடியேற்றப் படவில்லை. ஆரம்பத்தில் படையினர்தான் காணிகளை ஆக்கிரமித்தனர். இதற்கு முறையான தீர்வு காணப்படவில்லை. இதன் பிரதிபலிப்பே பூஜா பூமி வரை சென்றுள்ளது.
இந்தக்காணிகளை நில அளவை செய்ய வந்தபோது நானும் பொதுமக்களோடு களத்தில் நின்று எதிர்த்தேன். அப்போது அம்முயற்சி கைவிடப்பட்டது. எனினும், உயரதிகாரிகள் காணி அளக்கப்பட மாட்டாது என்ற பொய்வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி விட்டு காணிகளை அளக்க திடசங்கற்பம் பூண்டுள்ளனர். இது இந்த அரசாங்கத்தின் மறைமுக நிகழ்ச்சி நிரலின் படி நடந்தேறுகிறது.
நான் குச்சவெளி பிரதேச செயலாளர் உட்பட சில உயரதிகாரிகளுடன் இது தொடர்பாக பேசியுள்ளேன். எங்களுக்கு சொல்லப்படுவதற்கு மாற்றமாகவே செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே எல்லோரையும் ஏமாற்றும் செயற்பாடுகளை இந்த அரசு மேற்கொள்கிறது. அதற்கென்றே சில அதிகாரிகள் செயற்படுகின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மாகாணசபை உறுப்பினர் அன்வர் புல்மோட்டை காணிப் பிரச்சினை சம்பந்தமான தனி நபர் பிரேரணை ஒன்றை மாகாண சபையில் சமர்ப்பிக்க முன்னறிவித்தல் கொடுத்திருந்தார். நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் நமது மக்களின் பிரச்சினை என்ற வகையில் இந்தப் பிரேரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க தயார் நிலையில் இருந்தேன். துரதிஸ்டம் அரசின் நலன் கருதி அவர் இந்தப் பிரேரணையை சமர்ப்பிக்கவில்லை.
முதலமைச்சர் தலைமையில் புல்மோட்டையில் கூடி காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுவதாக மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்பட்டதோ என்னவோ காணியை சுவீகரிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படவில்லை.
கிழக்கு மாகாணசபை, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் தான் இயங்குகின்றது. முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இல்லையெனில் கிழக்கு மாகாண சபை அரசின் சபையாக இருக்காது எனவே இந்தக் காணிப் பிரச்சினை தொடர்பான அழுத்தங்களை இக்கட்சியினால் அரசுக்கு கொடுக்க முடியும். அதுவும் நடந்ததாக தெரியவில்லை.
எனவே, அரசுக்கு நல்லபிள்ளையாக இருந்து கொண்டு அதன் மறைமுக செயற்பாடுகளை நிறுத்த முடியாது. சமூகத்திற்காக காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது விடயத் தில் அரசோடு சேர்ந்திருக்கும் முஸ்லிம் தலைவர்கள் திறந்த மனதோடு முன்னேடு க்கும் சகல காரியங்களுக்கும் நான் பூரண ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்றார்.
எது எப்படியோ முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளை அதிகமாக கொண்டுள்ள கிழக்கு மாகாண சபையில் புல்மோட்டை அப்பாவி மக்களின் காணி விவகாரம் தொடர்பில் ஆராயப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.
அத்தோடு இக்காணி விவகாரம் தொடர்பில் தட்டிக்கேட்கும் திராணி அரசியல் தலைமைகளுக்கு இலலையா என்று கேட்கும் நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. மட்டுமன்றி முஸ்லிம் தலைமைகள் உறங்கு நிலையில் தொடர்ந்தும் இருக்கும் பட்சத்தில் அஷ்ரப் நகர், பொத்துவில், புல்மோட்டை மட்டுமல்ல கிழக்கிலுள்ள எல்லா பிரதேச முஸ்லிம்களின் காணிகளிலும் கை வைக்கப்படலாம். அதிகார வர்க்கத்தினருக்கு இவ்வாறு முஸ்லிம் மக்களின் இடங்களில் கை வைப்பதற்கு இடமளிக்காது தடுத்து நிறுத்த முஸ்லிம் அரசியல், சமய, சமூக தலைமைகள் முன்வரவேண்டும்.
No comments