யார் தீவிரவாதி?
எம்.எப்.எம்.பஸீர்
பெளத்த மதத்தை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு பொது பல சேனாவின் செயலாளர் ஏனைய மதங்கள் மீதும் ஏனைய மதப் போதகர்Aகள் மற்றும் பெரியார்கள் மீதும் வாரி இறைத்துள்ள குற்றச்சாட்டுக்களும் அவதூறுகளும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த வாரம் பொது பல சேனாவின் செயற்பாட்டு அலுவலகத்தில் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர், அங்கு வெளிப்படுத்திய கருத்துக்கள் அவரின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு உள்ளான இஸ்லாமிய உலகின் தலைசிறந்த மத போதகர்களில் ஒருவரான கலாநிதி யூசுப் அல் கர்ளாவி யார் என்பதையும் அதே நேரம் கலகொட அத்தே ஞான சார தேரர் யார் என்பதையும் எழுத வைத்தது.
இஸ்லாமிய உலகின் நவீன அறிஞர்களில் போற்றப்படும் ஒருவரே கலாநிதி யூசுப் அல் கர்ளாவி ஆவார். எகிப்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கட்டாரில் இருந்தவாறு தனது மார்க்க உபன்னியாசப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார். இஸ்லாமிய சட்டத்துறையில் ஆழமான அறிவுடைய இவர் சமகால இஸ்லாமிய உலகில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் மார்க்க அடிப்படையிலான தீர்வுகளை முன்வைத்துள்ளவர்களில் முக்கியமானவர்.
உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உட்பட 14 துறைகளை அடிப்படையாகக் கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது. ஜோர்தான் ஹாசிமீய்ய ராஜ்யத்தின் Royal Islamic Strategic Studies Center இந்த ஆய்வினை செய்திருந்தது. அதில் உலகில் செல்வாக்குள்ள இஸ்லாமிய தலைவர்கள் 50 பேரில் 13 ஆவது இடம் இவருக்கு கிடைத்திருந்தது.
1926 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 09 ஆம் திகதி பிறந்த கலாநிதி யூசுப் அல் கர்ளாவிக்கு தற்போது 87 வயதாகிறது.
அத்துடன் சுமார் 60 மில்லியன் மக்கள் பார்வையிடும் அல் ஜஸீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ அல் ஷரீஆ வல் ஹயாத்’ (இஸ்லாமிய சட்டமும் வாழ்வும்) என்ற நிகழ்ச்சியை நடத்தும் அறிஞரே இவராவார். அத்துடன் 120 இற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
அத்துடன் உலகளாவிய முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைமை அறிஞர். சர்வாதிகார சிந்தனைகளை துடைத்தெறிந்து ஜனநாயக நீரோட்டத்தில் அரபு நாடுகள் பல பயணிக்க காரணமான புரட்சிகளுக்கு ஆதரவளித்தவர். பஹ்ரைன் தவிர்ந்த ஏனைய நாடுகளில் இடம்பெற்ற ஜனநாயக புரட்சிகளுக்கே இவர் ஆதரவளித்தவர்.
இந்நிலையில் தீவிரவாத இயக்கங்களுடனோ அல்லது அவர்களுக்கு உதவும் விதமாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயங்காதவர். மதத்தின் பெயரால் வன்முறைகளையும் அனாச்சாரங்களையும் அனுமதிக்காதவர்.
இதற்கு சிறந்த உதாரணம், இலங்கையிலிருந்து கட்டார் சென்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கு கலாநிதி கர்ளாவியை சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது, அவர் இலங்கை முஸ்லிம்களுக்கு வன்முறையில் ஈடுபடுமாறோ ஆயுதம் ஏந்துமாறோ கோரவில்லை. மாற்றமாக பெரும்பான்மையினத்தவர்களுடன் நல்லுறவுடனும் நல்லிணக்கத்துடனும் வலியுறுத்தியதுடன் அதற்கான நடவடிக்கைகளையே மேற்கொள்ள அறிவுறுத்தியிருந்தார்.
இப்படிப்பட்ட ஒருவரையே கடந்த வாரம் ஞானசார தேரர் தீவிரவாதி என்றும் கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டும் விமர்சித்திருந்தார். இது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும்.
உண்மையில் ஞானசாரமத போதகர்களை அவமதிக்கும் முதலாவது சந்தர்ப்பம் என இதனை கூறமுடியாது. ஏனெனில் ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமைகளை பல்வேறு சந்தர்ப்பங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சிப்பதை நாட்டிலுள்ள அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஞானசார தேரர் உட்பட 13 பேர் மீது கொழும்பு மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவருவதையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
2008 ஜூன் மாதம் 7ஆம் திகதி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தலாஹேனவில் கல்வாரி என்ற கத்தோலிக்க வழிபாட்டிடத்தில் தாக்குதல் நடத்தி, தங்க மாலை ஒன்றையும் கைத்தொலைபேசி ஒன்றையும் கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த போதகரையும் தாக்கியமை தொடர்பில் குறித்த மத குருவும் சாட்சியம் அளித்திருந்தார்.
பௌத்த மதம் ஏனைய மதங்களை துன்புறுத்தும் வகையில் கருத்துக்கூறுவதையும் செயற்படுவதையும் தடுத்துள்ளது என்பதை சிறு பிள்ளையும் அறியும். இதனை ஏனைய மதங்களும் போதிக்கின்றன. ஞான சார தேரரின் கீழ்த்தரமான செயற்பாடுகள் தொடர்பில் பதிவாகியிருக்கும் முறைப்பாடுகளைப் போன்று கலா நிதி யூசுப் அல் கர்ளாவிக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மத போதகர்கள் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகளை மீறியுள்ள ஞானசார தேரர் உண்மையில் பெளத்த மதத்தை பின்பற்றுகிறாரா? என்ற கேள்வியை இயல்பாக ஏற்படுத்துகிறது.
ஏனெனில் 2000 ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி சிங்கள புதுவருட தினத்தன்று கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் ஞானசார தேரர் மதுபோதையுடன் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டவர். அத்துடன் ஞானசார தேரருக்கு எதிராக 9 குடிபோதை வழக்குகள் உள்ளதாக தென்மாகான சபை உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவிக்கிறார்.
எனினும் கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர்.
6 ஸ்ரீ 5444 என்ற இலக்கத்தை உடைய வாகனத்தை மதுபோதையில் செலுத்தி முச்சக்கரவண்டி ஒன்றை மோதி முச்சக்கரவண்டிச் சாரதி ரவீந்திர குமார என்பவருக்கு பலத்த காயம் விளைவித்து தப்பிச் சென்றவர் ஞானசார தேரர். இந்நிலையில் பின்னர் பொலிஸார் பின்தொடர்ந்து சென்று கைது செய்தனர்.
நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில் போதையில் இருந்த காரணத்தால் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரிக்கப்பட்ட போது அதிக மது போதையில் இருந்தமை தெரிய வந்தது.
இந்நிலையில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஒன்பது குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய அந்த வழக்கு இலக்கம். 6315-/2000 ஆகும் .
இதன் தீர்ப்பு 2000 ஆம் ஆண்டு செப்டெம்பர் 20ம் திகதி வெளியிடப்பட்ட நிலையில் நீதிமன்றில் சகல குற்றங்களையும் ஏற்றுக் கொண்டதன் காரணமாக 10000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டார்.
இப்படியொரு பின்னணியை கொண்டவரே இந்த ஞானசார தேரர்.
இந்நிலையில் பெளத்த மதம் கூறும் அகிம்சை, பொறுமை உள்ளிட்ட எந்தவொரு நல்ல பண்பையும் பின்பற்றாத இவர் மாற்றுமத தலைமைகளையும் போதகர்களையும் தீவிரவாதி எனவும் அடிப்படைவாதி எனவும் முத்திரை குத்தி மேடைகளிலும் ஊடகங்களிடமும் கருத்துக் கூறுவதானது நகைப்புக்குரியதாகும்.
அப்படியானால் இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பெரிதும் அறிந்திருந்தும் இங்கிருந்து சென்ற முஸ்லிம் தூதுக்குழுவுக்கு நல்லிணக்கம் தொடர்பான பாடம் கற்பித்து அனுப்பிய யூசுப் அல் கர்ளாவியுடன், இன்று பெளத்த மக்களை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தூண்டும் வண்ணம் கருத்துரைக்கும் ஞானசார தேரரை ஒப்பிட முடியும்?
தீவிரவாதி என்ற சொல்லை ஞானசார தேரர் அதனை யாருக்கு பயன்படுத்துவது என்று தெரியாமல் உளறிக்கொண்டிருக்கிறார்.
மக்களை அமைதிப்படுத்தும் தலைவர்களுக்கு தீவிரவாத பட்டம் சூட்டும் இவ்வாறான ஞானசார தேரர் போன்றோர் அதனை பயன்படுத்த முன்னர் யாரை நோக்கி விரல் நீட்டுகிறோம் என்பதையும் சற்று கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
நன்றி : விடிவெள்ளி
No comments