Breaking News

ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போர்

42-49319314 றவூப் ஸெய்ன்

எகிப்தில் நடப்பது குறித்து ஊடகங்கள் முற்றிலும் பொய்யான பரப்புரைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக வொஷிங்டன் போஸ்ட்,டைம்ஸ் ஆகிய அச்சு ஊடகங்களும் மேற்கத்திய உலகின் கட்டுப்பாட்டிலுள்ள இலத்திரனியல் ஊடகங்களும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள இடைக்கால இராணுவ ஆட்சிக்குச் சார்பான செய்திகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றன.

உலக ஊடக மாபியாக்களின் அறிக்கைகளிலிருந்து எகிப்தைப் புரிந்து கொள்வது சாத்தியமற்றது. முர்ஸிக்கு எதிரான சதிப் புரட்சியின் உண்மையான பின்னணியை, அறபு நாடுகளில் அதற்குரிய ஆதரவை, அடுத்த கட்டம் நிகழப் போகின்றவற்றை எல்லாம் மொத்தமாகவே மூடி மறைத்து விட்டன இந்த ஊடகங்கள்.

மனச்சாட்சியும் நேர்மையும் உள்ள ஒரு முஸ்லிம் தன்னைச் சூழ நடக்கும் விவகாரங்களை காய்தல் உவத்தலின்றிப் புரிந்து கொள்வதும் அதற்கேற்ப தனது கருத்தையும் அணுகுமுறையையும் அமைத்துக் கொள்வதுமே உத்தமம். இயக்கம், கட்சி, ஆள் நிலைக் கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு விசுவாசமாக இருப்பதும், அதற்கேற்ப உண்மைகளைப் புரட்டுவதும் ஆன்மீக ரீதியில் பெரும் குற்றங்களாகும்.

"உங்களுக்கு எதிரானதாக இருந்தாலும் ஒரு சாரார் மீது நீங்கள் கொண்டுள்ள கோபம் நீதி செலுத்துவதை விட்டும் உங்களைத் தடுக்காதிருக்கட்டும். நீதியாக நடந்து கொள்ளுங்கள். அது இறை விசுவாசத்திற்கு நெருக்கமானது. மனச்சாட்சிக்கு விரோதமாகவும் மனோஇச்சைக்குக் கட்டுப்பட்டும் நடப்பது விசுவாச மின்மையின் அடையாளம் என இந்த அல்குர்ஆன் வசனம் புலப்படுத்துகின்றது.

இன்று சர்வதேச ஊடகங்கள் மட்டுமன்றி, எகிப்தின் உள்ளூர் ஊடகங்கள் உள்ளிட்டு, நமது உள்நாட்டு அச்சு ஊடகங்களும் இப்பிரச்சினையை நேர்மையாகப் பார்க்கத் தவறியுள்ளன.

எகிப்தில் ஓர் இராணுவ சதிப் புரட்சி நடைபெற்றதேன் என்ற கேள்விக்கு எகிப்தியர்கள் எதிர்பார்த்த ஒன்றும் முர்ஸியின் ஆட்சியில் நடைபெறவில்லை என்பதான ஒரு தட்டையான பதிலையே இந்த ஊடகங்கள் தருகின்றன. சகோதரத்துவ அமை ப்பினரின் ஆன்மீகப் பலவீனமே வீழ்ச்சிக்கான காரணம் என சிலர் எழுதுகின்றனர். எகிப்து இஸ்ரேலுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை முர்ஸி ரத்துச் செய்யாமல் பேணி வந்தார் என இன்னும் சிலர் வாதாடுகின்றனர்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் இவர்கள் எகிப்திய அரசியலின் அ,ஆவன்னாவையேனும் அறியாதவர்கள். மட்டுமல்ல, பிராந்தியத்தின் வேறு சில அரச இயந்திரங்களுக்கு விசுவாசமானர்கள் என்பதை உப்புச் சப்பற்ற, முன் பின் முரணான அவர்களது எழுத்து எடுத்துரைக்கின்றது.

60 ஆண்டு கால பொருளாதார வீழ்ச்சியையும் ஜனநாயக விரோத அரசியல் பின்னடைவையும் 365நாட்களில் சரி செய்ய வேண்டும் என இவர்கள் எதிர்பார்ப்பது எந்தவகையில் அறிவுக்குப் பொருந்துகின்றது. 6 தசாப்த அரசியல் களங்கத்தை 8760 மணித்தியாலங்களில் மாற்ற வேண்டும் என்றால் அது அற்புத மாகவே நிகழ வேண்டும்.

1 பிர்அவ்ன்கள் நடத்தி வந்த காட்டு தர்பாரிலிருந்து, இராணுவக் கொடுங்கோன்மையிலிருந்து, ஊழல் பெருச்சாளிகளிட மிருந்து மீட்டெடுக்கப்பட்ட முதல் தேசம் எகிப்து. முழு மொத்த அறபுலகிலும் சுதந்திரத்திற்குப் பின் நடந்த முதல் ஜனநாயகத் தேர்தல் அங்குதான் நடந்தது. அதன் மூலம் முதல் முறையாகத் தெரிவுசெய்யப் பட்ட ஜனநாயகத் தலைவராக முர்ஸி விளங்குகின்றார்.

அவருக்குப் பின்னால் ஒரு இஸ்லாமிய பேரியக்கம் உள்ளது. இஸ்லாத்தையே மூச்சாகவும் தமது உயிராகவும் கருதும் அவ் வியக்கம், கடந்த 80 ஆண்டு கால இஸ்லாமிய தஃவா பணியின் அறுவடையாக இந்த அதிகாரத்தை கைமாறியது. 8 தசாப்த அவர்களது உழைப்புக்குப் பின்னால் மிகப் பெரிய வலிகளும் வருத்தங்களும் இருந்தன. அவற்றைத் தாண்டி விழுது விட்டு விருட்சமாக வளர்ந்திருக்கும் பெரும் ஆலமரமாய் அப்பேரியக்கம் உருவெடுத்துள்ளது.

ஏழு கோடி மக்களைக் கொண்ட எகிப்தில் பொருளாதார செழிப்புடன் இஸ்லாத்தை வாழ வைப்பதுதான் அவ்வியக்கத்தின் இறுதி இலக்கு. அதற்கென அதிகாரத்தை ஒரு வழிமுறையாகக் கொள்ளலாம் என அவர்கள் கருதுகின்றனர். இவர்களை எதிர்த்து நிற்கும் சக்திகள் யார்? ஏன் சகோதரத்துவ அமைப்பின் ஆட்சியை அவர்கள் கருவறுக்க முயல்கின்றனர்? சீர்திருத்தத்திற்குப் பின்னர் பூமியில் நீங்கள் குழப்பங்களை உருவாக்காதீர்கள் என அல்லாஹ்வால் எச்சரிக்கப்படும் இந்த மாபியாக் கும்பல்கள் யார்?

நவீன எகிப்திய வரலாற்றில் தோன்றிய ஒவ்வொரு ஆட்சியாளரும் இஸ்லாத்திற்குச் சார்பாக இருந்ததில்லை என்பது மாத்திரமல்ல, மேற்கத்தேய உதவித் தொகையில் நாட்டை அதல பாதாளத்திற்கு இட்டுச் சென்ற ஊழல் பேர்வழிகளாகவே அவர்கள் இருந்தனர். பெரும்பாலானவர்கள் இராணுவத் துறையில் அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர்கள். அவர்களிடம் இராணுவப் புத்தி மட்டுமல்ல, மதச்சார்பற்ற மூளையும் மேற்கத்தேய சிந்தனையுமே கோலோச்சியது.

எகிப்தின் பூகோள அரசியல் முக்கியத்துவத்தினை உணர்ந்த மேற்கத்தேய எதிரிகள் இந்த இராணுவக் கும்பலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த எண்ணினர். 1950 களுக்குப் பிறகு இக்கும்பல் அமெரிக்காவினாலும் இஸ்ரேலினாலும் நன்கு பயன்படுத்தப்பட்டன. இடையில் தோன்றிய அறபுத் தேசியம் வேகமாகவே மூக்குடைந்து போனது.

egyptProtest28Jun13_large எகிப்தின் இராணுவத் தலைவர்கள் சியோனிஸ, கிறிஸ்தவ எதிரிகளோடு சமரசம் செய்தது மட்டுமன்றி,மேலைய உலகின் நலன்களைக் காக்கும் பொம்மைகளாக நிலைநிறுத்தப்பட்டனர். இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்கத் துடிக்கும் எதிரிகளோடு நேசம் பாராட்டினர்.

"ஈமான் கொண்டவர்களே! முஃமின்கள் அல்லாத இறை நிராகரிப்பாளர்களை உங்கள் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" எனும் அல்லாஹ்வின் கட்டளையை அப்பட்டமாக மீறியதன் மூலம்,இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தீங்கு செய்யும் சக்தியாக மாறினர். இன்றும் இதுதான் இவர்கள் எகிப்தில் போடும் நாடகத்தின் பின்புலமாக உள்ளது.

"ஈமான் கொண்டோருக்கு மிகக் கடுமையான எதிரிகளாக யூதர்கள் இருப்பதை நீர் காண்பீர்" என்று முஸ்லிம்களின் முதற் தர விரோதி யூதர்கள் என குர்ஆன் எச்சரிக்கின்றது. அந்த யூதர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணிந்து 7 கோடி மக்களைக் காட்டிக் கொடுக்கின்ற பிர்அவ்னின் வாரிசுகளே இன்று பட்டப் பகலில் அதிகாரத்தை இஸ்லாமியவாதி களிடமிருந்து தட்டிப் பறித்துள்ளனர்.

அல்லாஹ் எச்சரிக்கும் எதிரிகளின் நன்மைக்கென்றே உருவாக்கப்படும் இந்த இராணுவ சதிக் கும்பலின் ஆட்சிக்கு இஸ்லாத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் சவூதி அறேபியா போன்ற ஒரு நாடு முழு ஆதரவளித்தது என்றால் இதன் அர்த்தம் என்ன?

இரண்டு ஹரம்களின் காவலர்கள் என தம்மை அழைத்துக் கொள்கின்ற இந்த மன்னர்கள்,அல்லாஹ்வின் வாக்கை ஏன் மீறிச் செயற்படுகின்றனர்? இப்போது யார் நண்பர்கள் யார் எதிரிகள் என்பது நமக்குத் தெளிவாகின்றது.

முர்ஸி பதவியேற்பதற்கு முன்பே சகோதரத்துவ அமைப் பிடம் நாட்டின் பொருளாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான மாபெரும் திட்டமொன்று வரையப்பட்டிருந்தது. நஹ்ழா எனப்படும் அத்திட்டத்தை அமுல் படுத்த இன்னும் சிறிது காலம் செல்லும்.

நைல் நதி குறித்து இஸ்லாமிய அரசாங்கம் அமுல்படுத்த இருந்த பொருளாதாரத் திட்டம் எகிப்தை வளர்ச்சியின் சிகரத்திற்குக் கொண்டு செல்லவிருந்தது. ஆட்சியைக் கையேற்றபோது திறைசேரி காலியாக இருந்தது. விவசாய நாடாகிய எகிப்தில் இறுதிப் பிர்அவ்ன் முபாரக் தூக்கி வீசப்பட்டபோது ஐரோப்பிய வங்கிகளில் அவருக்கு 50 பில்லியன் டொலர் சொந்தமாக இருந்தது.

ஆக, முர்ஸியின் திட்டங்களுக்கு பெருமளவு நிதி தேவைப்பட்டது. IMP, உலக வங்கி என்பன ஜனநாயகபூர்வமான இஸ்லாமிய தலைவர்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை. வளம் கொழிக்கும் அறபு நாடுகளும் இந்த இஸ்லாமிய ஆட்சிக்குக் கைகொடுக்கவில்லை. காரணம் தெளிவானது.

இஸ்லாம் கூறும் ஷரீஆ அடிப்படையிலான ஆட்சியை ஜனநாயக வழிமுறையினூடாக நிலைநிறுத்துவது எகிப்தில் சாத்தியப்பட்டால், அது மன்னராட்சி நிலவும் அறபு நாடுகள் எங்கும் வேகமாகப் பரவி விடும் என்ற பேரச்சம் அவர்களுக்கு. இதனால், மன்னர்களும் சியோனிஸ நண்பர்களும் சேர்ந்து கடந்த ஒரு வருடமாக திரைமறைவில் வரைந்த சூழ்ச்சித் திட்டத்தை முர்ஸியின் 365 நாள் முடிவில் நடை முறைப்படுத்தினர். முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டார். மீண்டும் இராணுவ சர்வதிகாரம். மீண்டும் பிர்அவ்னிய அடக்குமுறை. ஜனநாயக விரோத இராணுவக் கொடுங்கோன்மை.

"அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கின்றான். சூழ்ச்சிக்காரர்களில் அல்லாஹ் மிகவும் வலிமையானவன் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?"

ஸீஸி, சவூதி மன்னருக்கு தொலைபேசியில் சொல்வது போல எகிப்தில் ஒன்றும் அரசியல் ஸ்திரப்பாடு ஏற்பட்டு விடவில்லை. பிரபல அரசியல் ஆய்வாளர் தாரிக் அல் பிஷ்ரி குறிப்பிடுவது போன்று, இன்றைய எகிப்தின் நெருக்கடி முர்ஸி பதவி கவிழ்க்கப்பட்டாரா இல்லையா என்பதல்ல. எகிப்தில் ஜனநாயகமா,இராணுவச் சர்வதிகாரமா என்பதே கேள்வியாகும்.

எகிப்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து உலக முஸ்லிம்களின் கவனம் குவிந் துள்ள இந்நிலையில், சகோதரத்துவ அமைப்பினரின் பலம் மீளவும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. உண்மையான ஜனநாயகப் பெறுமானங்கள் மதிக்கப்பட்டு, இராணுவத்தின் கொடும் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க விரும்பும் எந்த சக்தியும் சகோதரத்துவ அமைப்பின் சட்டத் தன்மையையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த உண்மையை எதிர்வரும் நாட்கள் நமக்கு உணர்த்தக் கூடும்.

இன்ஷா அல்லாஹ்.

 

- Meelpaarvai-

No comments