Breaking News

எதிர்ப்புகள் ஓங்கினாலும் பதின்மூன்றில் மாற்றம்?

13 செப்டெம்பர் மாதம் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்படும் ஒரு தலைப்பாகியுள்ளது. இலங்கையின் அரசியல் போக்கில் திருப்பு முனை ஒன்றை ஏற்படுத்தியதே 13ஆவது அரசமைப்புத் திருத்தமாகும். இந்த திருத்தத்தின் அடிப்படையில் நாட்டில் ஒன்பது மாகாண சபைகளை உருவாக்குவதற்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

எந்த இடத்திற்கு மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என இச்சட்டம் கொண்டுவரப்பட்டதோ அந்த இடத்திற்கு இன்னும் மாகாண சபை ஆட்சி மக்கள் கைக்கு வழங்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் வடக்கு மாகாண மக்கள் கையில் வழங்குவதற்காக அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக அறிவித்தது.

இந்த அறிவிப்பினைச் செய்தது முதல் மாகாண சபைகளுக்குரிய பொலிஸ், காணி அதிகாரங்களை அகற்றவேண்டும் என்ற குரல் தெற்கில் பலமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அரசின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் போராட்டத்தை மிக துரிதமாக முன்னெடுத்துச் செல்கின்றன.

ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர், மாகாண சபைகளை ஒழிக்கக் கோரும் தனியார் சட்டம் மூலம் ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த தனியார் சட்ட மூலத்தைப் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் வரை வடமாகாண சபைக்கான தேர்தலை ஒத்தி வைக்குமாறு ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க கேட்டுள்ளார்.

ஹெல உறுமய இந்தத் தனியார் சட்ட மூலத்தை 19 வது அரசியல் திருத்தச் சட்ட மூலமாகவே சமர்ப்பித்துள்ளது. வட மாகாண சபை தமிழர் கூட்டமைப்பின் கைக்குச் சென்றால் மீண்டும் தமிழ் ஈழத்தை உருவாக்க முற்படுவார்கள் என ஹெல உறுமய தெற்கில் பலமான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அன்று வட கிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்டு தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப். முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தமிழ் ஈழம் பிரகடனப்படுத்தியதனை ஹெல உறுமயவும் தேசிய சுதந்திர முன்னணியும் முன்னுதாரணமாகச் சுட்டிக் காட்டி தெற்கு வாழ் மக்களிடையே வட மாகாண சபை பற்றி அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சி அரசு 13 வது அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது மக்களது விருப்பமில்லாமலேயே என்று கூறும் அரசின் இந்த இரு பங்காளிக் கட்சிகளும் 13 வது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சில உரிமைகள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் எனப் பிரச்சாரம் செய்து வருகின்றன.

மாகாண சபை முறையில் பயங்கரமான ஐந்து அங்கங்கள் இருக்கின்றன. வட மாகாணம் ஏற்படுத்த முன் அவற்றை நீக்க வேண்டுமென்றும் திங்களன்று ஜாதிக ஹெல உறுமய நடாத்திய செய்தியாளர் மகாநாட்டில் அமைச்சர் சம்பிக ரணவக்க கேட்டுள்ளார்.
இந்தியாவில் பிராந்தியங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரம் மத்திய அரசுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறும் அமைச்சர் சம்பிக ரணவக்க மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சமாந்தர பட்டியல் அகற்றப்பட வேண்டும் என்கிறார். அத்தோடு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மூலங்கள் மாகாண சபையில் நிறைவேற்றப்படவேண்டும் என்ற விதி நீக்கப்பட வேண்டும் என்பதுவும் ஹெல உறுமயவின் வாதமாகும்.

இதேநேரம் அரசின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு நாடளாவிய ரீதியில் தீவிர எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றது. நாடெங்கிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ள இக்கட்சி கைச்சாத்திடும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளது. கட்சியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச திங்களன்று கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னால் இக் கைச்சாத்திடும் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார்.

அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகள் வடக்குத் தேர்தலுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியுள்ள அதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகள், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய அமைச்சர்களான டாக்டர் ராஜித சேனாரத்ன, திலான் பெரேரா போன்றோர் வட மாகாண சபைத் தேர்தல் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது நடாத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
சிரேஷ்ட அமைச்சர்களான டியூ. குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தற்போதுள்ள முறைப்படியே வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார்கள்.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள தேசிய மொழிகள் இன ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வடக்கில் தேர்தல் தொடர்பாக இரு காரணிகளை மையமாக வைத்தே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றார்கள். அவை பொலிஸ், காணி அதிகாரங்கள் பற்றியதாகும். மாகாண சபை முறை ஏற்படுத்தப்பட்டு 25 வருடங்களாகியும் ஏனைய மாகாண சபைகள் எவற்றுக்கும் பொலிஸ், காணி அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே இதுவரை இந்த அதிகாரங்கள் அமுல் நடத்தப்படவில்லை. இவை இன்றும் அரசியலமைப்புச் சட்டத்தில் மட்டுமே இருக்கின்றவை என்கிறார்.

அரசின் பங்காளிகளாக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைக்குரிய அதிகாரங்களை அகற்றுவதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படைக் கொள்கையில் ஒன்று அதிகாரத்தைப் பரவலாக்குவது. அப்படியிருக்க மாகாண சபைகளின் அதிகாரங்களைக் குறைக்கும் சட்ட மூலத்தை எப்படி ஆதரிப்பது என முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி இக்கட்டுரையாளரிடம் தெரிவித்தார்.

அரசின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பியும் மாகாண சபையின் அதிகாரத்தைக் குறைப்பதனை ஆதரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களைக் குறைக்க வேண்டாம் என்று ஆளும் கட்சியின் 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்கள். அதிகாரங்களை குறைக்கும் பிரேரணை வந்தால் அரசாங்கக் கட்சிக்குள்ளே அதனை எதிர்ப்பதற்கு 31 பேர் இருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்ட மூலமும் மாகாண சபைக்கான அதிகாரங்கள் பற்றி வாதப் பிரதி வாதங்கள் மும்முரமடைந்துள்ள நிலையில் இக்கட்டுரை எழுதும் போது கிடைத்த செய்தி மாகாணங்களுக்குரிய பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதற்கான சட்டமூலம் ஒன்றை அரசாங்கம் அவசர சட்ட மூலமாகக் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வியாழனன்று இந்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் ஆராயப்படவுள்ளது.

மாகாண சபைகள் இந்திய அரசின் அனுசரணையுடனேயே உருவாக்கப்பட்டது. இந்தியா, வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் தீவிர அக்கறையும் ஆர்வமும் காட்டி வருகிறது. செப்டெம்பரில் தேர்தல் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அரசு தெரிவித்திருந்தது.
தமிழர் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளும் மாகாண சபையின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதனை பலமாக எதிர்த்து வருகின்றன. தனித் தமிழ் ஈழம் கேட்டு 30 வருடங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்திய தமிழ் மக்களுக்கு அதிகாரங்களற்ற மாகாண சபையா கிடைக்கின்றது என்ற கேள்வியைத் தமிழ் தரப்பு எழுப்புகின்றன.

அரசு அறிவித்துள்ளபடி மாகாண சபைத் தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றன. கடந்த காலத்தில் நாட்டில் சூடுபிடித்த எத்தனையோ விவகாரங்கள் அடிப்பட்டுள்ள நிலையில் மாகாண சபை தொடர்பாக பல விடயங்கள் களமேறவுள்ளன.

(நஸ்மின்)

நன்றி : நவமணி

No comments