பசுக் கொலையும் தேரரின் தற்கொலையும்
முழு நாடும் வெசாக் கொண்டாட்டத்துக்காக தமது அவதானத்தைச் செலுத்திக் கொண்டிருக்கும் வேளை, கண்டி தலதா மாளிகைக்கு முன்னால், பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தார் என கையடக்கத் தொலைபேசியில் வந்த செய்தி பௌத்தர்களையும் பௌத்தர்களல் அல்லாதோரையும் அதிர வைத்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான போவத்த இந்திர ரத்ன தேரரே இவ்வாறு தற்கொலை முயற்சியிலீடுபட்ட தேரராவார். கடந்த 24ஆம் திகதி முற்பகல் தலதா மாளிகைக்கு முன்னால் இந்த அகோரச் சம்பவம் நூற்றுக்கணக்கான பௌத்தர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடம்பெற்றுள்ளது. மற்றொரு நிகழ்வு தொடர்பாக செய்தி திரட்ட வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு இலகுவாக படம் பிடித்துக் கொள்ளக்கூடிய வகையில் இச் சம்பவம் இடம்பெற்றது. முழு நாட்டிலும் பரபரப்பினை இந்த கொலை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த இந்திர ரத்ன தேரர்?
பெல்மதுல்லையைப் பிறப்பிடமாகக் கொண்ட 1984ஆம் ஆண்டு பிறந்த 30 வயதினையுடைய இவர், தனது 19 ஆவது வயதில் பிக்குவாக மாறினார். முன் இவரது பெயர் இந்திக பண்டார என்பதாகும். கஹவத்த பேரனறுவ ஸ்ரீ சுஷ்த விஹாரையிலே தேரராகிய பின் இவர் பணிபுரிந்தார்.
பல்வேறு இயக்கங்களில் அங்கம் வகித்த இவர் ஜாதிக ஹெல உறுமய மற்றும் சிங்கள ராவய போன்ற கடும்போக்கு இயக்கங்களில் அங்கத்துவம் பெற்றிருந்த இவர், 2011 ஆம் ஆண்டு பெல்மதுல்லை பிரதேச சபைக்கு போட்டியிட்டு 3033 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவாகினார்.
பிரதேச சபையின் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக ஏழு முறை வராததன் காரணமாக இவரது பிரதேச சபை அங்கத்தவர் பதவியை இழந்தார். ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து நீக்கப்பட்ட இவர், பின்பு சிங்கள ராவய இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.
நீண்ட காலமாக தனது வீட்டோடு தொடர்புகள் எதுவும் வைத்திருக்காத இவர் பசுக் கொலைகளை நிறுத்தக் கோரி பலங்கொடைப் பிரதேசத்தில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன் எம்பிலிப்பிட்டிய வாராந்தச் சந்தையில் நீண்ட காலமாக வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிராகச் செயற்பட்ட குழுவிலும் இவரும் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சனியன்று தலதா மாளிகையின் நுழைவாயிலுக்கு முன்னால் காலை 10.30 மணியளவில் போவத்த இந்திர ரத்ன தேரர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது, அங்கு செய்தி திரட்டுவதற்காகச் சென்றிருந்த சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவையின் கண்டிச் செய்தியாளர் கமல் லக்ஷ்மன் சுரவீர தெரிவித்துள்ள தகவல்களின்படி குறிப்பிட்ட தேரர் தான் முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யப் போவதாக சுவர்ணவாஹினிக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படியே சுவர்ணவாஹினி நிறுவனத்தின் செய்திப் பிரிவு தனக்கு அறிவித்ததாக மரண விசாரணையின்போது கமல் லக்ஷ்மன் சுரவீர தெரிவித்துள்ளார். தான் அங்கு சென்ற போது இந்திர ரத்ன தேரரைத் தேடிக்கொள்ள முடியாததனால் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு அவரது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுத் தருமாறு கேட்டேபோது, சற்று நேரத்தில் அவர் தன்னுடன் தொடர்பு கொண்டு என்னை குயின்ஸ் ஹோட்டலின் முன்னால் வருமாறு கேட்டார். நான் எனது புகைப்பிடிப்பாளர்களுடன் அங்கு சென்ற போது பசுக் கொலை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றைச் செய்யவுள்ளேன். மஹமலுவைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மஹமலுவைக்குச் சென்று அவரது விளக்கத்தைப் பதிவு செய்து கொள்ளுமாறு புகைப்பிடிப்பாளர் சஞ்சீவனைக் கேட்டுக் கொண்டேன்.
பசுக் கொலைக்கு எதிராக தான் போராட்டங்களை மெற்கொண்டாலும் கூட இப்போதும் நாளாந்தம் 5000 மாடுகள் வரை கொல்லப்படுகின்றன. அதற்கு எதிராக நீண்ட பயணம் சென்றாலும் அது குறித்து எவரும் அக்கறை காட்டுவதாக இல்லை எனத் தெரிவித்த இந்திரரத்ன தேரர், இன்றைய தினம் ஆத்ம பூஜை ஒன்றினைச் செய்யவுள்ளதாக தெரிவித்தார். அதன்பிறகு மேலும் 500 பிக்குகள் அவ்வாறு உயிர்த் தியாகம் செய்யப் போவதாகவும் கூறினார்.
உயிரைப் பலியெடுப்பது தவறானதென்றும் அவ்வாறு செய்ய முற்பட்டால் பொலிஸாருக்கு அறிவிப்பதாகவும் அவருக்கு நான் கூறினேன். அப்போது அவரது டயறியிலிருந்து இரு கடிதங்களை என்னிடம் தந்தார். அக் கடிதங்களை எனது காற்சட்டைப் பையில் போட்டுக் கொண்டேன். உடன் வாசிக்க முற்படவில்லை.
அதன்பிறகு அங்கிருந்து நாம் அங்கு நடக்கும் மத்திய மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் பங்குபற்றும் தன்சல நிகழ்ச்சியை நோக்கிச் சென்றோம். அது பற்றிய விபரங்களை பெற்றுக் கொண்டிருக்கும்போது, எனது புகைப்படப்பிடிப்பாளரை தனது கமராவை வேறு பக்கம் திருப்பியிருப்பதனைப் பார்த்தேன். அப்போது எம்முடன் பேசிய தேரரது கையில் பிளாஸ்டிக் டின் ஒன்று இருப்பதனைக் கண்டேன். நான் முதலில் அவரைக் கண்ட போது, அவரது கையில் சிவப்பு நிற டயறி ஒன்றை மட்டுமே வைத்திருந்ததைப் பார்த்தேன். யாரோ ஒருவர் டின்னைக் கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள்.
“பசுக் கொலையை நிறுத்துங்கள்’ எனச் சப்தமிட்ட வண்ணம் உடம்பில் எண்ணெயினை ஊற்றிக் கொண்டார். யாரும் நெருங்க வேண்டாம் எனக் கத்தினார். அவரைப் பாதுகாக்க முன்சென்ற ஒருவரது ஆடையிலும் தீப்பற்றிக் கொண்டது. தீயை வைத்துக் கொண்ட தேரர் சற்றுத் தூரம் நடந்து சென்றார். அதன் அருகில் பால் தன்சல (அன்னதானம்) ஒன்று இருந்தது. அங்கிருந்த விசேட அதிரடிப்படையினரும் பொது மக்களும் அருகிலிருந்த ஒரு பலகையில் வைத்துக் கொண்டு உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென் றனர் என்றும் கமல் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திர ரத்ன தேரரின் கொலை முயற்சி பற்றி பல தரப்பான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஹெல உறுமய, பொதுபலசேனா, மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள் இவரது செயற்பாட்டை ஆதரித்து கருத்துக்களை வெளியிட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பெல்னைவ விமல ரத்ன தேரர், ஹெல உறுமயவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான புராவித்யா சக்கரவர்த்தி மேதானந்த எல்லாவல தேரர், தம்ப அமில தேரர் போன்றோர் இச் செய்கையைக் கண்டித்துள்ளனர்.
இந்திர ரத்ன தேரரின் குருவான வஜிரா ஞான தேரர் தனது மாணவர் பற்றி தெரிவித்துள்ளதாவது, இந்திர ரத்ன தேரர் அளவுக்கதிகம் சமூகப்பற்றுள்ளவர். தன்னைப் பற்றிச் சிந்திக்காதவர். முதலில் ஊருக்கு வேலை செய்ய முற்பட்டார். பின் மாகாணத்துக்கு வேலை செய்ய முற்பட்டார். இறுதியில் நாட்டுக்கு வேலை செய்ய வேண்டுமென விஹாரையிலிருந்து வெளியேறினார். விஹாரையிலிருந்து வெளியேறி ஒரு வருடமாகின்றது
அங்கு சென்ற பின் ஒரு முறையே இங்கு வந்தார். அவர் செய்த ஒரு சில வேலைகளை நான் அங்கீகரிக்கவில்லை. அதே போன்று செய்து கொண்ட இந்தச் செயலையும் நான் அங்கீகரிக்கவில்லை. இளம் பிக்குகள் இவ்வளவு ஆவேசமாகச் செயற்படுவது ஏன் என புரிந்து கொள்ள முடியாத நிலையில் நான் இருக்கின்றேன். உணர்ச்சி வசப்படாது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வது குறித்து சமூகம் உணர்வூட்டப்படுவது அவசியமாகும்.
ஜாதிக ஹெல உறுமவின் செயலாளர் அமைச்சர் சம்பிக ரணவக இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, தனது உடலுக்கு தீ வைத்து உயிரை மாய்த்துக் கொண்ட இந்திர ரத்தின தேரரின் மறைவினை தற்கொலையாக கருதக் கூடாது. அவர் நாட்டின் சாசனத்துக்காக செய்த உத்தம தியாகமாகும். அவரது செயற்பாடு ஒருவகையில் வேதனையை ஏற்படுத்தினாலும் நாட்டின் சாசன வரலாற்றுக்கு கௌரவத்தை ஏற்படுத்துகின்றது.
போவத்த இந்திர ரத்ன தேரர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டது, பசுக் கொலையை இந்நாட்டிலிருந்து நிறுத்துவதற்கான போராட்டத்தை பலப்படுத்துவதற்கே என்று ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிசாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, தேரர் மதமாற்றத்திற்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டு மத மாற்றத்திலீடுபடுவோரை விரட்டியடிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். கடந்த ஹலால் பிரச்சினையின் போதும் செயற்பட்டதற்காக அவர் அவமானத்துக்குள்ளாக்கப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னேஸ்வரம் மிருக பலியை நிறுத்தாவிடின் அச்சந்தர்ப்பத்திலே இவர் தனது உயிரை அர்ப்பணிக்க இருந்தார் என ஹெல உறுமயவின் மேல்மாகாண சபை உறுப்பினர் தெபுவன பியனந்த தேரர் ஜாதிக ஹெல உறுமய நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் தெரிவித்தார்.
இதேநேரம், பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் போவத்த இந்திர ரத்ன தேரர் தனது உயிரை மாய்த்துக் கொண்டது ஆத்ம தியாகமாகும். இந்த நாட்டு பௌத்தர்களுக்கு தமது எதிர்காலத்தை தீர்த்துக் கொள்ள வேண்டியது இவ்வாறான வழிகளிலாகும் என்று கூறினார்.
எமதுரிமையைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதான வழியில் இறங்கி நடமாடவேண்டியிருப்பதாகக் குறிப்பிட்ட ஞானசார தேரர் மாடு அறுப்பது மற்றும் மதமாற்றம் தொடர்பாக பாராளுமன்றத்தில் சட்ட மூலம் ஒன்றைச் சமர்ப்பித்தாலும் ஆட்சியாளர்கள் அதனைக் கவனத்திலெடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவில் மாடு அறுப்பது தடை செய்யப்பட்டிருக்கின்றது. அப்படியானால் இலங்கை ஏன் அதனைச் செய்யாதிருக்கின்றது என்று கேள்வி எழுப்பிய அவர் அப்பிள், தோடம்பழங்களை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது போன்று தேவையான இறைச்சியினை இறக்குமதி செய்து இலங்கையில் மாடு அறுப்பது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என்றார்.
கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் தேரரின் கொலை முயற்சியை தியாகம் எனச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்ற அதேவேளை நாட்டின் முன்னணி பௌத்த தேரர்கள் பலரும் இச் செயலைப் பலமாகக் கண்டித்துள்ளனர்.
பெல்லன்வில் விமலரத்ன தேரர் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் எக்காரணத்துக்காகவேனும் புத்த தர்மத்தில் தற்கொலை செய்வதனை அனுமதிக்க முடியாது என்றார்.
ஏதாவது பிரச்சினை இருப்பின் அதுபற்றி அறிவித்து பிக்கடிஸ் போன்ற முறைகளைக் கையாண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய பெல்லன்வில விமலரத்ன தேரர் லௌகீக காரணிகளுக்காக இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாதென்றார்.
எல்லாவில மேதானந்த தேரர் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் தற்கொலை செய்வது பெரும் பாவம் என்றார். புத்த தர்மப்படி நன்மையான காரியத்துக்குக் கூட பாவம் செய்ய முடியாது. மிருகக் கொலை பாவமான செயலாகும். உத்தமமான நோக்கத்துக்கு கூட தற்கொலை செய்ததன் மூலம் தேரர் பாவம் செய்துள்ளார்.
அவர் மற்றொருவரது உயிரை இல்லாமல் செய்வதற்குப் பதிலாக தமது உயிரைப் போக்கிக் கொண்டுள்ளார். சட்டப்படி பார்த்தாலும் தற்கொலை செய்து கொள்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. மிருக கொலைக்கு எதிர்ப்பது நல்ல விடயம். ஆனால் அதற்காக தற்கொலை செய்வது புத்திசாதுரியமான செயலாகும் என்றார்.
இதேநேரம், மாடு அறுப்பது உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்திர ரத்ன தேரர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இவர் இறப்பதற்கு முன் எழுதியிருந்த கடிதத்தில் இக்கோரிக்கைகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
(நஸ்மீன்)
நன்றி : நவமணி
No comments