Breaking News

‘முஸ்லிம் பெண்களும் கோர்ட்டுக்கு வர வேண்டும்!’ – எச்.பீர்முஹம்மது (இந்தியா)

p34தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வகுப்புத் தோழியும், வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான பதர் சயீத் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கு ஒன்று முஸ்லிம் சமூகத்துக்குள் அதிர்ச்சி அலைகளைக் கிளப்பியுள்ளது.’முஸ்லிம் பெண்களின் விவாகரத்து விஷயத்தில் தலைமை காஸிகள் கொடுக்கும் விவாகரத்துச் சான்றிதழ்களை இனி நீதிமன்றங்களே அளிக்க வேண்டும். காஸிகளுக்கான அந்த அதிகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்’ என்பதுதான் பதர் சயீதின் கோரிக்கை. இந்த மனுவை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு, மத்திய, மாநில அரசுகளுக்கும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் சாதக பாதக அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மதச்சார்பற்ற இந்தியாவில் கிரிமினல் சட்டங்கள் மட்டுமே அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றன. ஆனால் சிவில் சட்டங்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோ​ருக்குத் தனித்தனியாக இருக்கின்றன. இதில் கிறிஸ்தவர்களுக்கு திருமணப் பதிவு மற்றும் விவாகரத்து தவிர மற்ற அனைத்தும் இந்திய சிவில் சட்ட வரம்போடு இணைந்துகொள்கின்றன. ஆனால், முஸ்லிம் தனிநபர் சிவில் சட்டம் மட்டுமே வித்தியாசமானது. இஸ்லாம் தோன்றிய ஏழாம் நூற்றாண்டு மற்றும் இறைவனால் அருளப்​பட்ட நம்பிக்கையை உள்ளடக்கி இருப்பதால், அது மற்ற அனைத்தில் இருந்தும் தனித்து நிற்கிறது. இந்தநிலையில், இந்தியாவில் முதன்முதலாக சுல்தான்கள் ஆட்சிக்காலத்தில்தான் முஸ்லிம் தனிநபர் சட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. பின்னர், மொகலாயர் காலத்தில் அது இன்னும் மேம்படுத்தப்பட்டது. பிரிட்டிஷார், தாங்கள் இந்தியாவில் மற்ற மதத்தினரின் சட்டங்களில் தலையிடுவதில்லை என்று முடிவெடுத்தனர். இதில் முதலில் உறுதியாக இருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சூழல் காரணமாக தன் நிலைப்பாட்டை மாற்றிக்​கொண்டது. இந்துமத சீர்திருத்த இயக்கங்கள் தோன்றியதன் பலனாக சதி என்ற உடன்கட்டை ஏறுதல், 1829-ல் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. பின்னர், 1929-ல் குழந்தை திருமணத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பிறகு, விதவை மறுமண உரிமை, நரபலி தடை போன்ற சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. முதன்முதலாக முஸ்லிம் பெண்களின் குறைந்தபட்சத் திருமண வயது 15 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனோடு தொடர்புடைய சில ஷரத்துகளும் உருவாக்கப்பட்டன. இவை எல்லாம் அதுவரையிலும் வரையறை செய்யப்படாமல் இருந்த முஸ்லிம் சிவில் சட்டத்தை ஒழுங்குபடுத்தக் கொண்டுவரப்பட்டதே. இதில் சிவில் கூறுகளாக 10 அம்சங்கள் சேர்க்கப்பட்டன.

1. உயிலிலா இறக்கம் (Intestate succession)

2. திருமணம் (Marriage)

3. திருமண இழப்பு (Dissolution of Muslim Marriage)

4. மணமகன் மணமகளுக்கு அளிக்கும் திருமணக் கொடை(mahar)

5. ஜீவானாம்சம் (Maintenance). பெண்கள் சிறப்புச் சொத்து (Special Property of females)

7. காப்பாளர் பொறுப்பு (Guardianship)

8. கொடை (Gift) 9. வக்ஃபு (wakf)

10. அறக்கட்டளை அமைப்பும் அதன் சொத்தும் (Trust and Trust properties).

மேற்கண்ட 10 அம்சங்களின் அடிப்படையில்தான் முஸ்லிம் தனிநபர் சட்டம் இந்தியாவில் இன்னும் தொடர்கிறது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் இதுகுறித்த பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால், 1973-ல் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (All India muslim personal law board) ஏற்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் முன்னணி மத அறிஞர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200 மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன் பணி, முஸ்லிம் தனிநபர் சட்டத்தைக் காப்பதுடன் அதன் அமலாக்கத்தைக் கண்காணிப்பது.

இந்தியாவைப் பொறுத்தவரை முஸ்லிம் தனிநபர் சட்டத்தை அமலாக்குவதும், அதைத் தொடர்ந்து செயல்படுத்துவதும் ஊர் கூட்டமைப்பு என் றழைக்கப்படும் ஜமாஅத்துகள். அதன் பின்புலமாக இருக்கும் மத அறிஞர்கள் மற்றும் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் காஜிகள். இந்த அதிகாரபூர்வமற்றக் கட்டமைப்பு இந்தியாவில் தொடர்ந்த நிலையில் பல இஸ்லாமிய குடும்பம் சார்ந்த சிக்கல்கள் பலமுறை நேரடியாக நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன. அதில் பெண்களே பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றங்கள் தலையிட்டு தார்மீக மற்றும் சட்ட நெறி​முறையிலான தீர்ப்புகளைச் சொன்ன சம்பவங்களும் இருக்கின்றன. அதில் புகழ்பெற்றது ஷாபானு வழக்கு. ஷாபானு வழக்கின் தீர்ப்பை விமர்சித்தவர்கள் அந்த பெண் ஏன் நீதிமன்றத்திற்கு சென்றாள்? அவளை செலவுசெய்து நீதிமன்றத்துக்கு செல்ல நிர்பந்தப்படுத்திய சூழல் எது என்பது குறித்து எதுவும் பேசுவது இல்லை. விவாதிப்பதும் இல்லை.

இந்தியாவில் முஸ்லிம் பெண்கள் சார்ந்த பிரச்னைகள் பலமுறை நீதிமன்றங்களுக்குச் சென்றிருக்கின்றன. குடும்ப நீதிமன்றங்களின் தேவையும் தவிர்க்க முடியாதது. இதற்கான குரல்கள் இந்தியா முழுவதும் பலதரப்பினராலும் எழுப்பப்படுகின்றன. சமூகப் பொருளாதார நிலைமைகளில் இந்திய முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கி இருக்கும் சூழலில், அவர்களின் முன்னேற்றத்துக்கு சட்டப் பாதுகாப்பு மிகஅவசியம். எல்லோரும் இதுகுறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது.

தொடர்புடைய செய்திகள் :

முஸ்லீம் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு (இந்தியா)

No comments