Breaking News

நண்பன் செய்த துரோகம்!

murder new

''சியாமின் மனைவி எனக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­தினார் சியாமின் தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் கதைப்­ப­தற்கு தொலை­பே­சியை கொடுக்­கு­மாறும் கூறினார். அப்­போது சியாம் என்­னுடன் இருக்கவில்லை. அச்சமயம் சியாம் காணாமல் போயி­ருப்­பதை  என்­னாலும் ஊகிக்க முடிந்­தது.''

பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தின் பிர­பல முஸ்லிம் வர்த்­த­க­ரான மொஹமட் சியாம் கடத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­பட்டு சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்ள அவ­ரது எட்டு வருட நண்பர் ஆரம்­பத்தில் பம்­ப­லப்­பிட்டி பொலி­ஸா­ருக்கு அளித்த வாக்குமூலமே இது.

முப்­பத்­தைந்து வய­தான பாதணி வர்த்­த­க­ரான சியாம் துப்­பாக்­கிச்­சூட்டு காயங்­க­ளுடன் கடந்த வாரம் சட­ல­மாக மீட்­கப்­பட்­டதைத் தொடர்ந்து அவ­ரது கொலை தொடர்­பான விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­துடன் பல்­வேறு நம்ப முடி­யாத தக­வல்­களும் வெளிச்­சத்­துக்கு வந்­து­ள்­ளன.

மூன்று பிள்­ளை­களின் தந்­தை­யான சியாமை அவ­ருடன் எட்டு வரு­டங்கள் ஒன்­றாக பழகிய மிக நெருங்கிய நண்பரே அழைத்துச் சென்று கொலை செய்துள்ளமை தெரிய வந்ததைத் தொடர்ந்து சியாமின் குடும்­பத்­தினர் உட்பட அனை­வரும் அதிர்ச்­சியில் உறைந்து போயுள்ளனர்.

நடந்­தது என்ன?


மே மாதம் 22 ஆம் திகதி இரவு முதல் பிர­பல வர்த்­த­க­ரான மொஹமட் சியாம் காணாமல் போயுள்ளார். இந்­நி­லையில் குறித்த தினத்­தன்றே பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் குடும்­பத்­தி­னரின் தேடுதல் முயற்­சி­களும் தொடர்ந்­துள்­ளன.

எனினும் கடந்த 30 ஆம் திகதி வரை சியாம் உயி­ரி­ழந்­தி­ருப்­பது அவ­ரது குடும்­பத்­தினருக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில் கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரிவின் அழைப்­பையேற்று அங்கு சென்ற சியாமின் குடும்ப உறுப்­பினர் ஒருவர் குற்­றத்­த­டுப்பு பிரி­வினர் காட்­டிய புகைப் ­ப­டத்தால் அதிர்ச்­சியில் உறைந்து போயுள்­ளார். 

அந்த நிமிடம் வரை சியாம் எங்கோ உயி­ருடன் இருக்­கிறார் என்ற நம்­பிக்­கையில் இருந்த சியாமின் குடும்­பத்­தினரின் தேடல்களுக்கு அப்­பு­கைப்­படம்தான் முற்­றுப்­புள்­ளி­ வைத்தது.

இந்­நி­லையில் தலை­யிலும் மார்­பிலும் துப்­பாக்­கிச்­சூட்டுக் காயங்­க­ளுடன் காணப்பட்ட சியாமின் ஜனா­ஸா­வையே கம்­பஹா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து 30 ஆம் திகதி குடும்­பத்­தி­னரால் பெற்­றுக்­கொள்ள முடிந்­தது.

22ஆம் திகதி கடத்­தப்­பட்ட மொஹமட் சியாம் மறுநாள் (23ஆம் திகதி)க்குள் கொலை செய்­யப்­பட்­டுள்ளார். 23 ஆம் திகதி தொம்பே பிர­தே­சத்தில் துப்­பாக்­கிச்­சூட்­டுக் காயங்களுடன் சடலம் ஒன்றை மீட்ட பொலிஸார் அதனை அடை­யாளம் காண கம்­பஹா வைத்­தி­ய­சா­லையின் பிரேத அறையில் வைத்­தி­ருந்­தனர்.

இந்­நி­லை­யி­லேயே சியாமை தேடி அவ­ரது குடும்­பத்­தினர் நாட­ளா­விய ரீதியில் வலை வீசி­யி­ருந்­தனர். எனினும் சியாமின் ஜனா­ஸா­வையே அவர்களால் கண்­டு­கொள்ள முடிந்­தது.

கொலைக்கு யார் காரணம்?


சியாம் என்ற வர்த்­த­கரின் கொலையின் பின்­ன­ணியில் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் அவ­ரது உற்ற நண்பன் கூடவே இருந்து குழி­ப­றித்­துள்­ளமை பல­ரையும் அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது.

எனினும் சியாம் காணாமல் போனது முதல் சியாமை தேடி அலை­வது போலும் அது தொடர்பில் அதீத அக்­கறை கொண்­டவர் போலும் பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யாக கரு­தப்­படும் சந்­தேக நப­ர் அரங்­கேற்­றிய நாட­கங்கள் பிர­மிக்க வைக்கின்றன.

ஏனெனில் சியாம் காணாமல் போனமை தொடர்பில் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் சியாம் தரப்பில் செய்­யப்­பட்ட முதல் முறைப்­பாடே சந்­தேக நபரால் செய்­யப்­பட்­ட­தாகும் .

இதனை விட குறித்த நாட்­களில் சரி­யாக உண்­ணாமலும் பரு­காமலும் சோக­மா­கவே தன்னை காட்­டிக்­கொண்ட சந்தேக நபர் நடித்த நாடகம் கள்­ளங்­க­படம் இல்­லாமல் பழ­கிய சியாமின் குடும்­பத்­தி­னரை தன் மீது சந்­தே­கப்­ப­டு­வ­தி­லி­ருந்தும் தூரப்­ப­டுத்­தி­யது. எனினும் விசா­ர­ணை­களை தொடர்ந்த பொலி­ஸா­ருக்கு கிடைத்த ஆதா­ரங்கள் நட்பின் பெயரால் உயிர் குடித்த பாத­கனே பகைவன் என அடை­யாளம் காட்­டி­யது.

ஏன், எதற்கு, எப்­படி கடத்­தப்­பட்டார் என்­பது குறித்து எது­வுமே அறி­யாது சியாமை தேடிய குடும்­பத்­தி­னரின் கவனம் தன்­மீது திரும்­பு­வதை தவிர்க்கும் வித­மாக கச்­சி­த­மாக செயற்­பட்­டுள்ள சந்­தேக நபர், சியாமை கப்பம் பெறும் நோக்கில் உயர்மட்டத்தினரே கடத்­தி­யுள்­ள­தாக ஒரு மாயை­யையும் குடும்­பத்­தி­ன­ரி­டையே பரப்­பத்­த­வ­ற­வில்லை.

சந்­தேக நபர் பொலி­ஸா­ரிடம்  ஆடிய நாடகம்


சியாம் காணாமல் போனமை தொடர்பில் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முதல் முறைப்­பாட்டை கவ­னத்திற் கொண்ட பொலி­ஸா­ரிடம் சந்­தேக நபர் தெரி­வித்­தவை மிகக்­க­வ­ன­மாக புனை­யப்­பட்­ட பொய்களாகும்.

பொலி­ஸா­ரிடம் அவர் தெரி­வித்­தி­ருந்­த­வற்றின் சுருக்கம் இதுதான்.


'' 22ஆம் திகதி மாலை 5.45 மணி­ய­ளவில் மஃரிப் தொழு­கைக்­காக சியாமும் நானும் பாத்­திமா றோட்டில் உள்ள பள்­ளி­வா­ச­லுக்கு போனோம். பின்னர் இஷா தொழு­கைக்­காக மயூரா பிளேஸில் உள்ள பள்­ளிக்கு இரு­வ­ருமே சென்றோம். இரு­வரும் அங்கு தொழு­கையை நிறைவு செய்துவிட்டு பார்க் றோட்டில் உள்ள உம்மா வீட்­டுக்குப் போனோம். அதன் பின்னர் பம்­ப­லப்­பிட்டி பிளா ஹவுஸில் இரு­வரும் மைலோ குடித்தோம். அத்­துடன் அவர் வீடு நோக்கி புறப்­பட்டார்.

சிறிது நேரத்தின் பின்னர் சியாமின் மனைவி எனக்கு அழைப்­பினை ஏற்­ப­டுத்­தினார். சியாமின் தொலை­பேசி செய­லி­ழந்­துள்­ள­தா­கவும் அவ­ரிடம் கதைப்­ப­தற்கு தொலை­பே­சியை கொஞ்சம் கொடுக்­கு­மாறும் கூறினார். அப்­போது சியாம் என்­னுடன் இல்லை. அப்­போதே சியாம் காணாமல் போயி­ருப்­பதை என்னால் ஊகிக்க முடிந்­தது'' என தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றா­யினும் சியாம் காணாமல் போன விவ­காரம் அரசின் உயர் மட்­டத்தின் கவ­னத்­திற்கு கொண்டு வரப்­பட்­டி­ருந்த நிலையில் விசா­ர­ணைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டன.

சந்தேக நபர் யார்?


ஒன்­றாக உண்டு ஒன்­றாக பழகி சியாமின் உயி­ருக்கு உலை வைத்­த­தா­கக்­க­ரு­தப்­படும் அவ­ரது நண்பர் தொடர்பில் பல விட­யங்கள் தற்­போது வெளிச்­சத்­துக்கு வரு­வ­தாக அவ­ரது உற­வி­னர்கள் தெரி­விக்­கின்­றனர்.

கொழும்பிலுள்ள பள்­ளி­வா­சல் ஒன்றின் நிரு­வாக சபை உறுப்­பி­னரே குறித்த சந்தேக நபர் என்­பதை அறியும் போது பலர் பதை­ப­தைத்துப் போயினர். 

பள்­ளி­வா­சலின் நிரு­வாக சபையில் இருந்­து­கொண்டு இவர் மேற்­கொண்டு வந்த பல சட்ட விரோத செயல்­களும் சியாமின் குடும்­பத்­தி­ன­ருக்கு தற்­போது தெரிய வந்­துள்­ளது.

சியாம் கடத்தப்பட்டது எவ்வாறு?


சியாம் தனது பம்­ப­லப்­பிட்டி இல்­லத்­தி­லி­ருந்த போது அங்கு வந்­துள்ள சியாமின் நண்­ப­ரான சந்­தேக நபர் பிறி­தொரு வர்த்­த­கரை சந்­திக்­க­வென அவரை அழைத்துச் சென்­ற­தாக தெரிய வரு­கி­றது. அந்தத் தக­வல்­களின் பிர­காரம் நண்­பரால் அழைத்துச் செல்­லப்­பட்ட வர்த்­தகர் சியாம் மிரி­ஹான பிர­தே­சத்தில் வைத்து கொலைக்காக அமர்த்தப்பட்ட கூலிப்­ப­டை­யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.

22 ஆம் திகதி இரவு சியாம் வாகனத்தில் குறித்த நண்பரால் அழைத்துச் செல்லப்படுவது மிரி­ஹான பிர­தேச கண்­கா­ணிப்பு கம­ராக்­களில் பதி­வா­கி­யுள்­ள­தாக தெரிய வரு­கி­றது

.

கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சியாமின் கார்


இந் நிலை­யி­லேயே அநா­த­ர­வாக கைவிட்டுச் செல்­லப்­பட்­டி­ருந்த கார் ஒன்றை மிரி­ஹான பொலிஸார் கடந்த 23 ஆம் திக­தி­ய­ளவில் மீட்­டி­ருந்­தனர். அந்­தக் ­கா­ரா­னது சியாம் பய­ணித்­ததே என்­பது தற்­போது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தா­கவும் விசா­ர­ணைகள் தொடர்­வதால் குறித்த கார் தொடர்ந்தும் மிரி­ஹான பொலிஸ் நிலை­யத்தில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.

மிரி­ஹான பிர­தேச கண்­கா­ணிப்பு கம­ராக்­களின் பதி­வு­களின்படி சியாம் அவ­ரது காரி­லி­ருந்து இறக்­கப்­பட்டு பிறி­தொரு ஜீப் வண்­டிக்கு மாற்­றப்­ப­டு­வதும் பின்னர் சந்­தேக நப­ரான நண்பர் தான் பய­ணித்த காரில் திரும்­பு­வதும் பதி­வா­கி­யுள்­ள­தாக இது­வரை வெளிவந்துள்ள தக­வல்­க­ளி­னூ­டாக அறிய முடி­கி­றது.

ஜனாஸா நல்­ல­டக்­கமும் சந்­தேக நபர்­களின் கைதும்


இந்­நி­லையில் கம்­பஹா வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து கொண்டு வரப்­பட்ட சியாமின் ஜனாஸா 31 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை இரவு தெஹி­வளை ஜும்­ஆப்­பள்ளி மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

ஜனாஸா நல்­ல­டக்­கத்தில் பெரும் திர­ளானோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். எவ்­வா­றா­யினும் சியாமின் ஜனாஸா நல்­ல­டக்கம் செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்­பா­கவே கொழும்பு குற்­றத்­த­டுப்­புப்­பி­ரிவு சந்­தேக நப­ரான நண்­ப­ரையும் பாதாள உல­கத்தை சேர்ந்தவர்கள் எனக் ­கரு­தப்­படும் மேலும் இரு­வ­ரையும் கைது செய்­தி­ருந்­தது.

இந்த சம்­பவம் தொடர்பில் குறித்த மூவரும் கைது செய்­யப்­பட்­டதை பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் புத்­திக சிறி­வர்­தன உறு­திப்படுத்தினார். சந்தேகநபர்கள் மீதான விசா­ர­ணையும் பல அதிர்ச்சித் தக­வல்­களை கசிய விட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கொலைக்கான காரணம் என்ன?


கோடீஸ்வர வர்த்தகரான சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு கடன் விவகாரமே பிரதான காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 21 கோடி ரூபாவினை தனது நண்பரான சந்தேக நபருக்கு நட்பின் அடிப்படையில் சியாம் வழங்கியுள்ளதாகவும் அதனை திருப்பிக் கொடுக்காமல் இருப்பதற்காகவே பாதாள உலகக் குழுவினரின் உதவியுடன் குறித்த படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் பாதாள உலகக் கோஷ்டியினரினால் புரியப்பட்ட இந்த படுகொலைக்கு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலையுடன் பொலிஸாருக்கு தொடர்பு?


இந்­நி­லையில் இந்­தக்­கொ­லை­யுடன் பொலிஸ் உயர்­மட்ட அதி­காரி ஒரு­வ­ருக்கு தொடர்பு உள்­ள­தாக சில ஊட­கங்­களில் வெளி­யா­கி­யுள்ள செய்­தி­களும் கட்­டு­ரை­களும் அதிர்ச்சியளிப்பனவாக உள்ளன.

ஏனெனில் சியாம் காணாமல் போனமை தொடர்பில் பம்­ப­லப்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தில் செய்­யப்­பட்ட முறைப்­பாடு தொடர்­பிலோ அல்­லது தொம்பே பிர­தே­சத்தில் துப்­பாக்­கிச்­சூட்டுக் காயங்­க­ளுடன் மீட்­கப்­பட்ட சடலம் தொடர்­பான விப­ரங்­களோ தினமும் ஊட­கங்­க­ளுக்கு பொலிஸ் தலை­மை­ய­கத்­தி­லி­ருந்து வழங்­கப்­படும் ஊடக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை என தொலைக்காட்சி ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வர்த்தகரான சியாமின் படுகொலைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விசேட வழிகாட்டலின் கீழ் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீர தலை மையிலான குழுவினர் மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.

இது தொடர்பில் குற்றவாளிகளுக்கு தராதரம் பாராது அதிகபட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறும் சியாமின் பிரிவால் தவிக்கும் அவரது குடும்பத்தினர் இது விடயத்தில் அக்கறையுடன் செயற்பட்ட பொலிஸ் புலனாய்வுப்பிரிவு மற்றும் அரச உயர் மட்டத்தினருக்கும் தமது நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலமாக கொலைச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகிறது. இந்த மோசமான கொலைக் கலாசாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து இந்த நாட்டுப் பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினதும் பாதுகாப்புத் தரப்பினதும் கடப்பாடாகும்.

30 வருட கால பயங்கரவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்த அரசாங்கத்திற்கு இதனைச் செய்வது ஒன்றும் பாரிய விடயமல்ல. ஆனால் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு உயர் பதவிகளில் உள்ள ஒரு சிலர் உடந்தையாகவிருப்பதுதான் கவலைக்குரியதாகும்.

(06.06.2013 விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான கட்டுரை)

No comments