கசினோ நிலையங்கள்; நமது கடப்பாடு என்ன?
கொழும்பில் பாரிய கெசினோ மையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை உலகின் பிரபல கெசினோ வர்த்தகர் என வர்ணிக்கப்படும் ஜேம்ஸ் பாக்கருக்கு அரசாங்கம் வழங்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றும் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பு இன்று பாரிய சூதாட்ட மையமாகவும் மேற்கு நாகரிக கலாசாரங்களின் மறுபிறப்பிடமாகவும் மாற்றம் பெற்றிருக்கிறது.
ஏலவே பல சூதாட்ட மையங்கள் கொழும்பில் இருக்கின்ற போதிலும் புதிய மையமானது கோட்டை சம்போதி விகாரைக்கு அருகாமையில் அமைவதைக் கருத்திற் கொண்டே பௌத்த அமைப்புக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த கெசினோ மையம் அமைக்கும் பணிகளை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் இன்றேல் தாம் வீதியில் இறங்கிப் போராட வேண்டி வரும் எனவும் கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறீ புத்தரக்கித்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டுக்கு அவ்வாறான சூதாட்ட நிலையங்கள் அவசியமில்லை. இதற்கு எதிராக ஒட்டுமொத்த பௌத்தர்களும் வீதியில் இறங்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோன்று கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பர அமில தேரரும் குறித்த கெசினோ நிலையத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் அவசியமற்ற பிரச்சினைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் பொது பல சேனா அமைப்பு இந்த கெசினோ விடயத்தில் என்ன செய்யப் போகிறது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் நேற்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பொது பல சேனா அமைப்பு, இந்த கெசினோ நிலையத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கையானது கடந்த பல நூற்றாண்டுகளாக தனித்துவமான மத கலாசார விழுமியங்களைப் பேணி வாழும் நாடாகும். ஆனால் போர் முடிவுக்கு வந்த பிற்பாடு நாட்டின் கலாசாரமும் ஒழுக்க விழுமியங்களும் அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதையே நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் அநாச்சாரங்கள் அரங்கேறும் தளமாக இன்று கொழும்பும் அதனை அண்டிய பகுதிகளும் மாற்றப்பட்டு வருகின்றன.
கெசினோ சூதாட்ட மையங்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினருக்கு மாத்திரம் ஆபத்தானதல்ல. அது இந்த நாட்டில் ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் மிக்க ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப விரும்பும் சகலருக்கும் எதிரானதாகும்.
அந்த வகையில்தான் கெசினோ உள்ளிட்ட நாட்டின் கலாசார சீர்கேடுகளுக்கு எதிராக முஸ்லிம்களும், குறிப்பாக முஸ்லிம் அரசியல் மற்றும் மார்க்க தலைமைகளும் குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
ஹலால் தொடர்பிலோ பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்பிலோ மாத்திரம் பேசுவது முஸ்லிம்களின் கடப்பாடல்ல. மாறாக நாட்டின் தேசிய நலன்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பிலும் முஸ்லிம்கள் முன்னின்று குரல் கொடுக்க வேண்டும். அதுவே நாம் இந்த நாட்டை உண்மையாக நேசிக்கிறோம் என்பதை அர்த்தபூர்வமாக வெளிப்படுத்துவதாக அமையும்.
இன்றேல் முஸ்லிம்கள் சுயநலம் கொண்டவர்களாக தமது மத கலாசார அரசியல் விடயங்களுக்காக மாத்திரம் சண்டைபிடிப்பவர்கள் என்ற தவறான கருதுகோளை ஏனைய சமூகங்கள் மத்தியில் கட்டியெழுப்ப வாய்ப்பாக அமைந்துவிடும். அவ் வாறான தவறானதொரு வரலாறை எழுத நாம் ஒருபோதும் இடமளிக்கலாகாது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட சகலரும் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.
நன்றி : விடிவெள்ளி
No comments