Breaking News

அறபுக் கல்லூரிகள் அடிப்படைவாதத்தை தூண்டவில்லை: அறபுக் கல்லூரிகள் ஒன்றியம்

arabic collegeஅடிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் முஸ்லிம் சிறார்கள் மத்தியில் தூண்டும் விதத்தில் அரபு மத்ரஸாக்களும் கல்லூரிகளும் செயற்படவில்லை. ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் நல்ல பணியினையே அரபு மத்ரஸாக்களும் கல்லூரிகளும் மேற்கொண்டுள்ளன என இலங்கை அரபுக் கல்லூரிகளின் ஒன்றியம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரபு மத்ரஸாக்கள் முஸ்லிம் சிறார்களுக்கு அடிப்படை வாதத்தை தூண்டுகின்றன, இனவாதத்தை ஊக்குவிக்கின்றன, இவற்றின் எண்ணிக்கைகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. எனவே, இவற்றை மூடி விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுபலசேனா அமைப்பு  விடுத்துள்ள கோரிக்கை தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அமைப்பின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.ஏ.எம். ஜவ்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

அரபு மத்ரஸாக்கள் சனத்தொகையின் அதிகரிப்புக்கும் மார்க்கத்தை படிப்பவர்களின் அதிகரித்துவரும் ஆர்வத்துக்கும் இயைபாகவே அதிகரிக்கின்றன. இந்த மத்ரஸாக்களும் கல்லூரிகளும் அரபுக்கல்லூரிகளின் ஒன்றியத்தின் கீழேயே இயங்கி வருகின்றன. ஒன்றியம் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். 

பெளத்தசாசன அமைச்சு மற்றும் முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் மத்ரஸா அரபுக்கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதற்கிணங்கவே போதனைகள் இடம்பெறுகின்றன. 

அரபுக்கல்லூரிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டவைகள் அல்ல. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இக்கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லூரிகள் அரசின் சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இயங்கி வருகின்றன என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

No comments