Breaking News

நீதிமன்றத்தை நாடி வட மாகாணசபை தேர்தலை பிற்போட அரசு சூழ்ச்சி! -சுமந்திரன்

ScreenShot20120730at8.35.56PM அரசாங்கம் தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் கைகூடாத நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் அவசரமாக சமர்ப்பிக்கப்பட்ட இடம்பெயர்ந்த மக்களை தேர்தல் நடைபெற முன்னர் பதிவுசெய்யும் சட்டமூலமானது இறுதி நேரத்தில் அவசரமில்லை எனக் கூறி வேறு திகதிக்கு ஒத்திவைக்காது கைவிடப்பட்டது. இதில் இருந்து தனக்குத் தெரிந்த ஒருவரை நீதிமன்றுக்கு அனுப்பி நானும் இடம்பெயர்ந்தவன் இந்த நாட்டின் பிரஜை எனது பெயர் வாக்காளர் பதிவில் இடம்பெறவில்லை என்று நீதிமன்றத்தை நாடி வடக்குத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் சூழ்ச்சி அம்பலமாகியுள்ளது.

இவ்வாறு பல மோசமான சூழ்ச்சிகள் 13ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த 13 ஆவது திருத்தம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஒரு முழுமையான தீர்வும் அல்ல. ஆரம்பத்தில் இருந்து ஜப்பான், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மற்றும் இந்தியா போன்றவற்றுக்கு 13 ஐ விட மேலும் கொடுப்போம் என உறுதியளித்த அரசு தற்போது அதனை மீறி செயற்பட்டு வருகின்றது.

ஏனைய மாகாண சபைகளில் உள்ள ஜனநாயகம் மற்றும் அதிகாரங்களை வடக்கு மக்களுக்கு கொடுக்க அரசுக்கு விருப்பம் இல்லை என்பதை ஏனைய மக்களும் சர்வதேசமும் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments