பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகின்றார் ஜனாதிபதி - மேல் மாகாணசபை உறுப்பினர்!
வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதியின் வெளிப்பாடு பிள்ளையைக் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் செயற்பாட்டுக்கு ஒத்ததாகவுள்ளதென மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ராஜகிரியவில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி வடக்குத் தேர்தல் தொடர்பில் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளார். அதனையே விமல் மற்றும் சம்பிக்க ரணவக்க அகியோரின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. அரச அதிகாரங்களை பாவித்து ஒரு சிலர் மாகாண சபையை எதிர்க்கின்றனர். அவர்களுடைய சொல்லைக் கேட்டு ஜனாதிபதியும் செயற்படுகின்றார். ஜனாதிபதிதான் நாட்டில் அதிகாரத்தை பகிர்தளிப்பதாகக் கூறினார். அந்தவகையிலேயே சர்வதேசத்திற்கும் பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேரத்திற்கு நேரம் பல்வேறு கதைகளைக் கூறும் அரசாங்கத்தின் செயற்பாடு நகைச்சுவையாகவுள்ளது. யுத்தம் முடிந்தவுடன் மக்களிடத்தில் பல வகையான எதிர்பார்ப்புக்கள் காணப்பட்டன. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. அடுத்து இடம்பெறவுள்ள தேர்தலில் ஜனாதிபதி வெற்றியடைவாரா என்ற சந்தேகம் அரசுக்குள்ளேயே எழுந்துள்ளது. அரசில் உள்ளவர்கள் அரசிலேயே நம்பிக்கை இழந்துள்ளனர். வடக்கு தேர்தல் தொடர்பில் அரசு இனியும் காலங்கடத்த முடியாது. ஆனால் வடக்குத் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று அரசுக்கு நன்றாகத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post Comment
No comments