நிலம் பறிக்கும் பேரினவாதம்
முஸ்லிம்கள் ஓரளவு செறிந்து வாழும் பகுதிகளில் மீன்பிடி, வேலைவாய்ப்பு, நிலப்பங்கீடு, புனித பிரதேசங்களை இணைத்தல், அத்துமீறிக் குடியேறுதல், குடியேற்றுதல் போன்ற காரணங்களால் முஸ்லிம்களின் வீதத்தில் குறைப்புக்களையும், நிலப்பறிப்புக்களையும் பேரினவாத அரசுகள் மேற்கொண்டன. இவற்றிற்கு பல சான்றுகள் குவிந்து கிடந்தாலும் நமது நோக்கத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் சில சம்பவங்களை நினைவுபடுத்திப் பார்ப்போம். அப்போதுதான் முஸ்லிம்கள் மீது தொடரப்பட்ட, தொடர்ந்து கொண்டிருக்கும் பேரினவாதங்கள் துலங்கும்.
அம்பாறையில் தீகவாப்பியில் முஸ்லிம்களுக்குச் சொ ந்தமான 997 ஏக்கர் காணிகளை கடந்த அரசாங்கங்கள் சுவீகரித்துக் கொண்டதுடன், சிங்களக் குடியேற்றங்களையும் ஏற்படுத்தின. நஷ்ட ஈடுகள் வழங்குவதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்ட போதிலும் அவை இன்றுவரை வெறும் வாக்குறுதிகளாக இருப்பது வேதனைகளுடன் வெளிப்படுத்த வேண்டிய உண்மையாகும். நுரைச்சோலைக் கண்டத்தில் முஸ்லிம்களிடம் இருந்து 1500 ஏக்கர் நிலம் கரும்புச் செய்கைக்கென சுவீகரிக்கப்பட்டது. இருந்தாலும் கரும்புச் செய்கை கைவிடப்பட்டு 55 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.
கல்லோயா, சேனாநாயக்கா சமுத்திரம், அம்பலன் ஓயா குளம், பன்னலகமக்குளம் போன்ற இடங்களில் ஆரம்பகாலம் தொட்டே முஸ்லிம்கள் மீன்பிடித்தே வந்தனர். இப்போது இவ்விடங்களில் முஸ்லிம்கள் எவரும் தலைகாட்டக்கூடாது என்று சிங்களவர்களால் அதட்டி விரட்டப்பட்ட சம்பவங்கள் பல. இது பற்றி படையினரிடம் முறையிட்ட போதிலும் பக்கச்சார்பாக அவர்கள் நடந்து கொள்வதே வரலாறாகிப் போயிற்று. பேரினவாதத்தின் மற்றொரு வடிவம் இதுவாகும்.
பிடவைக்கட்டு எனும் இடத்திற்கு “சாகர புர’ எனப் பெயர் சூட்டி, அரசாங்கம் இலவசமாக வீடு கட்டி அதில் நீர்கொழும்புப் பகுதியிலுள்ள சிங்கள மீனவர்களைக் குடியமர்த்தியது. இதனால் இங்கு பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து, மீன்பிடித் தொழிலையே நம்பியிருந்த முஸ்லிம்களின் தொழில் உரிமை அச்சுருத்தலுக்குள்ளானது. ஏறாவூர் பன்னக்குடாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்கால கட்டத்தில் தொழில் அமைச்சர் 100 வீடுகள் கட்டி, பிற ஊர்களைச் சேர்ந்த சிங்களவர்களைக் குடியமர்த்தினர்.
அறுகம்பை, உல்லை போன்ற இடங்களில் உள்ளூர் மீனவர்களுக்கென அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மீனவர் குடியேற்றத்திட்டத்திற்கான அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட மீனவர் குடியேற்றத் திட்டத்திற்கான வீடுகள் கூட, காலி, மாத்தறை போன்ற இடங்களைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
புத்தளத்தில் முஸ்லிம்கள் வீழ்ச்சி
இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அம்பாறை மாவட்டம் மட்டுமல்ல என்பதற்கு புத்தளம் மாவட்டமும் ஒரு சான்றாகும். கடந்த 1921 ஆம் ஆண்டு இம் மாவட்டத்தில் 33 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் குடிசனத் தொகை 1953 இல் 29.7 வீதமாகக் குறைந்தது. 1921 இல் 40.30 வீதமாக இருந்த சிங்களவர் குடிசனத் தொகை 1953 இல் 53 சதவீதமாக அதிகரித்தது. இது இயற்கையான அதிகரிப்பல்ல.
ஈற்றில் சிலாபத்தை புத்தளத்துடன் இணைத்து தற்போதைய புத்தளம் மாவட்டத்தின் மொத்தக் குடிசனத் தொகையில் 9.7 சதவீதமாக முஸ்லிம்கள் குறைக்கப்பட்டுள்ளனர். இது மட்டுமல்ல திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளை இணைத்தும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தை குறைக்கும் பணியில் பேரினவாத அரசுகள் செயற்பட்டன என்பதும் வரலாறே.
அம்பாறையில் திட்டமிட்ட குடியேற்றங்கள்
கடந்த 1963ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட சனத்தொகை 211,820 ஆகும். இவற்றில் முஸ்லிம்கள் 98510 பேர்களும், சிங்களவர்கள் 62160 பேர்களும் வாழ்ந்தனர் என குடிசன மதிப்பீடு கூறுகின்றது. அதேநேரம் 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி இம்மாவட்டத்தின் மொத்தக் குடிசனத் தொகை 388, 786 ஆக அதிகரித்துள்ளது. 161,754 முஸ்லிம்களும் 146, 371 சிங்களவர்களும் என இவ்வதிகரிப்பு காணப்படுகின்றது. மேற்கூறிய 1963,1981 க்கு இடைப்பட்ட 18 ஆண்டு இலங்கையில் மொத்த சனத்தொகையின் இயற்கை அதிகரிப்பு 40 வீதத்திலும் குறைவாக இருக்க அம்பாறை மாவட்ட சனத்தொகை அதிகரிப்பு 83.55 வீதமாகும். இதில் முஸ்லிம்கள் 64.20 வீதமாகும். சிங்களவர்கள் 135.47 வீதமாகவும் அதிகரித்துள்ளனர். ஆகவே, இது திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒன்று என்பதை நாம் துல்லியமாகப் புரிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக அல்லது அவர்கள் ஓரளவு அதிகமாக ஓங்கியிருக்கும் பிரதேசங்களை இல்லாமல் செய்வதன் மூலம் பாரம்பரியப் பிரதேசம், பெரும்பான்மை பிரதேசம் என முஸ்லிம்கள் எதிர்காலத்தில் கூறாதிருப்பதற்கும் முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாளங்களை இல்லாமல் செய்வதற்கும் பேரினவாதம் காட்டும் அக்கறைகளே இவைகள். பேரினவாத நசுக்குதல்களுக்கு முகம் கொடுத்து அவற்றினை வென்றெடுக்க வேண்டும். இல்லையேல் நமது சமகாலத்தை மட்டுமல்ல நமது எதிர்கால சந்ததிகள் வரை இழப்புக்களை தாங்க வேண்டிய நிலையை ஏற்படுத்தும் என்பதை புறந்தள்ளிவிட முடியாது. மாறாக நாம் கவனஞ் செலுத்த வேண்டிய பக்கமே இது.
இஸ்லாமிய கண்ணோட்டத்தில் காணி பறிப்பு
இவைகளை வைத்து இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நோக்குவோமானால் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு சாண் அளவு காணி நிலத்தை அபகரித்து அநியாயம் செய்தவனுக்கு (மறு உலகில்) ஏழு பூமிகள் கழுத்தில் அரிகண்ட விலங்காக மாட்டப்படும். ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்.
ஒரு முஸ்லிமின் உயிர், உடமை, மானம் புனிதமானது. இவற்றுக்கு ஊறு விழைவிப்பது ஹராமாகும். பொதுவாக மனிதன் சொத்து செல்வங்களின் மீது ஆழ்ந்த பற்றுடையவனாகவே வாழ்கின்றான். சொத்து செல்வங்களை எவ்வழியிலாவது சம்பாதித்துக் கொள்வதில் அவனுக்கு பேரார்வம் உண்டு. இதனால் அவன் அநியாயம் இழைக்க ஆரம்பிக்கின்றான். அநீதியாக காணி, நிலங்களை அபகரித்து வாழ்பவனுக்கு கிடைக்க இருக்கின்ற தண்டனையை நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் தெளிவு படுத்துகின்றார்கள். அநியாயங்கள் பல வகைப்படும். அடியான் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அநியாயம் செய்கின்றான். இது ஒரு வகை அநியாயம். அல்குர்ஆன் இது குறித்து எச்சரிக்கின்றது. “நிச்சயமாக இணை வைத்தல் பெரியதொரு அநியாயமாகும்’. (சூறா லுக்மான்:13)
அடியான் அடியானுக்கு இழைப்பது வேறொரு வகை அநியாயமாகும். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமைக் கொலை செய்வது அநீதமாகும். அவனது சொத்து செல்வங்களை அபகரிப்பதும் அநீதமாகும். மறு உலகில் இதை நீதிமன்றில் மனித உரிமை மீறல் விஷேடமாக விசாரணைக்கு உட்படுத்தப்படும். அல்லாஹுதாலா நீதியானவன். அவன் அடியானுக்கு அநீதம் இழைப்பதில்லை. ”நான் அடியார்களுக்கு அநீதமிழைப்பதில்லை’ (சூறா: காஃப் 29)
நிலங்களை அபகரித்தல்
இன்று சர்வ சாதாரணமாக காணி நிலங்களை அபகரித்துக் கொள்கின்ற அநியாயம் தொடர்கின்றது. ஒரு காணியை இரண்டு நபர்களுக்கு விலை பேசி விற்று இருவருக்கும் உறுதிச்சீட்டு எழுதிக் கொடுத்து விட்டு இருவரையும் பகைவர்களாக மாற்றி விடுகின்ற அநியாயம் ஒரு புறம். சர்ச்சைக்குரிய காணியை விற்றுப் பணம் சம்பாதிக்கின்ற அநியாயம் இன்னொரு புறம். அநாதைகளின் சொத்து செல்வங்களை அவர்களது அறியாமையையும், இயலாமையையும் பயன்படுத்தி விற்றுப் பணத்தை விழுங்குகின்ற அக்கிரமம் கூட நிகழ்கின்றது. விவசாய நிலங்களையும் பொதுச் சொ த்துக்களையும் சட்ட அனுகூலங்களைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற அநியாயமும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமான மனிதனது உரிமையை ஒருவர் சத்தியம் செய்து அபகரித்துக் கொண்டால் அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தை வாஜிபாக்கி விடுவான் என நபியவர்கள் கூறிய போது ஒரு நபித் தோழர் அல்லாஹ்வின் தூதரே! ஒரு சிறு உரிமையை அபகரித்துக் கொண்டாலும் நரகம் வாஜிபாகி விடுமா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் பல் துலக்குகின்ற “அராக்’ எனும் குச்சியை அபகரித்தாலும் அவருக்கு நரகம் வாஜிபாகி சுவனம் ஹராமாகி விடும் எனக் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.
ஆகவே, நமது சொத்து செல்வங்களை அல்லாஹ் அனுமதித்த வழிகளில் தேடுவதற்கு முயற்சிப்போமாக! பிறரின் சொத்துக்களை அபகரிக்கின்ற படுமோசமான நிலையிலிருந்து தூர விலகி வாழ்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் தௌபீக் செய்வானாக.
(ஏ.எம். இப்றாஹீம், சம்மாந்துறை)
நன்றி : நவமணி
No comments