மத்ரஸாக்கள் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை :மே.மா.ச.உறுப்பினர் பைரூஸ் ஹாஜி
இஸ்லாமிய வழிமுறைகளை கற்பித்து சிறுவயதிலிருந்தே ஒழுக்க விழுமியங்களோடு வாழ்வதற்கு கற்பிக்கும் புனிதமான இடமே மத்ரஸாவாகும். இதற்கு முஸ்லிம் அடிப்படைவாத முத்திரை குத்தும் பொது பலசோனாவின் கடும் போக்கு மதவாதத்தை முஸ்லிம் சமூகத்தின் சார்பில் கண்டிப்பதோடு நிராகரிக்கின்றேன் என மேல் மாகாணசபை ஐ.தே.கட்சி உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்த பின்னர் இனங்களிடையே மதங்களிடையே நல்லுறவை ஏற்படுத்துவதை விடுத்து குரோதத்தை விதைக்கும் கடும் போக்கு சக்திகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உறுப்பினர் பைரூஸ் ஹாஜி மேலும் தெரிவித்திருப்பதாவது,
மத்ரஸாக்கள் புனிதமான பணியையே மேற்கொள்கின்றது. ஆனால் அங்கு சூறா அமைப்புடன் இணைந்து முஸ்லிம் பயங்கரவாதம் போதிக்கப்படுவதாக பொது பலசேனா தெரிவித்துள்ளமையானது இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு களங்கமாகும்.
சூறா என்பது முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்கும் உலகளாவிய அமைப்புக்களின் ஒன்றியமே தவிர பயங்கரவாத அமைப்பல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும் .
இதனை அறியாது மதவாதத்தை தூண்டிவிடுவது நாட்டுக்கு நல்லதல்ல.
ஞாயிறு தர்மப் பாடசாலைகளை நடத்தி பெளத்த தர்மத்தை போதிப்பது ஏன் சிறு வயதில் முதல் நற்பண்புகளோடு வாழ வேண்டுமெனக் கூறப்படுகிறது.
அதேபோன்று தான் மத்ரஸாக்களும் நற்பணிபுகளையே போதிக்கின்றது. நாட்டில் ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். இஸ்லாமிய வழிமுறைகளைப் பின்பற்றி இறைபயமுள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதே போதிக்கப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்புகிறவர்கள். ஒரு போதும் பிரிவினை வாதத்திற்கு துணை போகாதவர்கள். இதனால் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
நாட்டின் இறையாண்மைக்கு அர்ப்பணிப்புச் செய்தவர்கள். எனவே, பொது பலசேனா உண்மையை உணரவேண்டும். நாட்டில் மதவாதத்தை தூண்டி விட்டு அதில் குளிர்காய நினைக்கலாகாது. முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல அவர்கள் இறைபயம் கொண்டவர்கள். இறைவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்கள்.
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் பேசிவரும் அரசாங்கம் அதனை உண்மையாக்க வேண்டுமானால் மதவாதத்தை தூண்டிவிடும் சக்திகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
No comments