Breaking News

இடியப்பச் சிக்கலில் 13

13இந்திய உள்ளிட்ட சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகள், பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்கான ஏதுவான சூழ்நிலையை தோற்றுவித்தல் உள்ளிட்ட பிரதான காரணிகளுக்காக முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு மாகாண சபை முறைமையை அமுல்படுத்த வேண்டிய தேவையை தற்போதைய அரசாங்கத்திற்கு ஏற்படுத்திவிட்டுள்ளது.

வடக்கில் மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபையின் கீழ்வரும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை எப்படியேனும் நீக்கிக்கொள்ள வேண்டுமென்பதே அரசாங்கத்தின் விருப்பம். இருந்தபோதும் அரசாங்கத்திற்குள்ளும், பெரும்பான்மை சிங்கள மக்களிடத்திலும் மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாடே மேலோங்கிவருகிறது. கடும்போக்கு பௌத்த கட்சிகள் மற்றும், பௌத்தர்களின் தீவிர ஆதரவையும் இந்த அரசாங்கம் பெற்றுக்கொள்வதை விரும்புமிடத்து 13 திருத்தத்தில் பாராளுமன்றம் மூலமோ அல்லது நீதிமன்றம் மூலமே கைவைப்பதற்காக வாய்ப்புகளே அதிகமுள்ளன.

இந்தியாவின் உதவியுடன் பிரசவமான இந்த மாகாண அதிகாரங்களில் மேலம் குறைப்பை ஏற்படுத்துவதை இந்தியா அங்கீகரிக்குமா என்ற பெறுமதிமிக்க கேள்விகள் எழும் நிலையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இந்தியா வரும்படி விடுக்கப்பட்டுள்ள அழைப்பாகும். தென்னிலங்கை 13 குறித்த வாதங்கள் மேலோங்கியுள்ள போதிலும் இதுவரை இந்தியா இவ்விவகாரத்தில் மௌனம் காத்தே வருகிறது.

இந்தியா மற்றுமொரு பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார குறைப்பை மேற்கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. ஒருபக்கம் மகிந்த அரசாங்கம் சீனாவின் பக்கம் சாய்ந்திருப்பது இந்தியாவை நிச்சயமாக அதிருப்திபட வைத்திருக்கும்.

எனவே, தனது கையை மீறி இலங்கை செயற்படுவதை இந்தியா விரும்ப போவதுமில்லை. முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனா அமெரிக்காவுடன் தேன்நிலவுக்கு தயாரான போதுதான் வடக்கு, கிழக்கில் தமிழ் குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கி இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக போரிடச் செய்தது.

இன்று அமெரிக்கா சீனாவுக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் நிற்கும் நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு தமிழ் ஆயுதக்குழு மூலம் இந்தியா, தலையிடி கொடுக்காது என்பதற்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை. இந்தியா எப்போதுமே தனது நலன்களை மாத்திரமே முன்நிறுத்தி செயற்பட்டுள்ளது.

அந்தவகையில் வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமா, காணி, பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்படுமா, அவ்வாறு நீக்கப்பட்ட பின்னர் இந்தியாவை இலங்கை எப்படி சமாளிக்கப் போகிறது, சர்வதேச சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்ற கேள்விகளுக்கு எல்லாம் விரைவில் பதில் கிடைக்குமெனலாம்.

அரசு தோற்றுவிட்டது: விமல் வீரவன்ச

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை இருந்தும் 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதில் அரசாங்கம் தோற்றுவிட்டதாக அமைச்சர் விமல் வீரவன்ச அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.

இடதுசாரிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு 13ஆம் திருத்த சட்டத்துக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றன. இதேவேளையில், 13ஐ நீக்குவதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக 10 நாட்கள் கையெழுத்து வேட்டையில் இறங்கி 10 இலட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துகளைப் பெற்றுள்ளார்.

வடமாகாண தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றிபெறும். எனவே, நாட்டை கூட்டமைப்புக்கு தாரைவார்த்துக் கொடுக்காமல் காணி, பொலிஸ் அதிகாரங்களை நீக்கிய பின்னரே வடக்கில் தேர்தல் நடாத்தவேண்டுமென விமல் வீரவன்ச ஒற்றைக்காலில் நிற்கிறார்.

வடக்கு தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்: டக்ளஸ்

தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 13ஆம் திருத்தச் சட்டம் காரணமாக, வட மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கும் சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தல் நடைபெறலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு விரைவில் அமைக்கப்படும். 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானதும், எதிரானதுமான கருத்துக்கள் தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன்மூலம் தீர்வு காணப்படுமென டக்ளஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

13ஐயும் தெரியாது, 15ஐயும் தெரியாது: டளஸ்

13ஆவது சீர்திருத்தம் பலாத்காரமாக திணிக்கப்பட்ட பயத்திற்கும் அச்சத்திற்கும் மத்தியில் இந்திய அரசாங்கத்திடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்த வேண்டுகோளின் பேரில் இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டு சட்டமாக மாற்றப்பட்டது.

எங்களுக்கு 13ஐயும் தெரியாது 15ஐயும் தெரியாது. மக்களுக்கு அபிவிருத்தியை வழங்குகின்ற எந்த சீர்திருத்தமாக இருந்தாலும் அதை நாங்கள் கொடுக்கவுள்ளோம். இன்று தமிழ்பேசும் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு தீர்வுகாண வேண்டுமென்ற ஒரு நிலையைத்தான் உருவாக்கித் தருகிறோம்.

அரசியல் ரீதியாக பிரச்சினைகள் உருவாக்கி இனங்களுக்கு இடையில் வைராக்கியத்தை உண்டுபண்ணி பிளவுகளை ஏற்படுத்தி விடாமல் இன, மத மொழி வேறுபாட்டுக்கு அப்பால் நாமெல்லோரும் ஒரே தாய் நாட்டு மக்களே என்ற உணர்வோடு வாழவேண்டும்.

முழுமையான எதிர்ப்பைக் காட்டுவோம்: மு.கா.

தெற்கில் அரசியல் ஸ்திரத்தன்மையை பெறும்வகையிலும் சிங்கள தீவிரவாத அமைப்புகளை திருப்திப்படுத்தும் நோக்கிலும் அரசாங்கம் 13ஆம் திருத்ததில் கைவைக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகள், அபிலாஷைகளைவிட அரசியல் ரீதியான நலன்களையும் வாக்கு வங்கிகளையும் பாதுகாத்துக்கொள்ளும் தந்திரோபாயங்களையும் அரசாங்கம் இதன்மூலம் கையாள்கிறது.

முஸ்லிம் மக்களின் நலன்களைப் பாதிக்கும் எந்த விடயத்துக்கும் எமது கட்சி அங்கீகாரம் வழங்காது. தற்போதுள்ள சூழ்நிலையில் 13ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதை எமது கட்சி ஆட்சேபித்துள்ளது. இதுதொடர்பான எமது நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்.

அரசாங்கம் விடாப்பிடியாக திருத்தங்களை மேற்கொண்டால் கட்சியின் முழுமையான எதிர்ப்பினை வெளிக்காட்டுவோம். பாராளுமன்றத்தில் பிரேரணை முன்வைக்கப்பட்டால், அதனை எதிர்த்து வாக்களிப்போம்.

வடக்கு தேர்தல் நடந்தால் போராட்டம்: பொதுபல சேனா

சிங்கள பெளத்தர்களின் எதிர்ப்பையும் மீறி வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சித்தால் போராட்டம் வெடிக்குமென்ற பொதுபல சேனா கிரம விமல ஜோதி தேரர் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புகளை மீறி ஜனாதிபதி வடமாகாண தேர்தலை நடத்தினால் வரலாற்றில் தவறிழைத்தவர்கள் பட்டியலில் அவரது பெயரும் இடம்பிடிக்கும் என்றும் பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரர் தன்பங்குக்கு ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

13ஐ ஒழிப்பது இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது: த.தே.கூ.

13ஆம் திருத்தச்சட்டத்தை ஒழிப்பது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வழிவகுக்காது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று அதிகாரங்களை வழங்குவேன் என ஜனாதிபதி கூறியிருந்தார். ஆனால், இன்று அத்திருத்தத்தை ஒழிப்பதற்கும் அதை திருத்துவதற்கும் எடுக்கப்படுகின்ற முயற்சியானது இனப்பிரச்சினைக்கு தீர்வு எதுவும் வழங்கப்படமாட்டாது என்பதையே காட்டுகின்றது.

இதனால் 13ஆவது திருத்த யோசனைகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இதை நாம் எதிர்க்கின்றோம். யுத்தம் முடிந்தவுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கூறப்பட்ட எதுவும் இன்று நிறைவேற்றப்படவில்லை. தற்போது வேறு வகையான கருத்துக்களே கூறப்படுகின்றன. இதனால் இனப்பிரச்சினைக்கான தீர்வு இவர்களினால் வழங்கப்படமாட்டாது என்பதை விளக்கமுடிகின்றது.

மாகாணசபையில் யாரும் வைக்கமுடியாது: ஆனந்த சங்கரி

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் அரசியல் தெரியாத தேரர்களினால் மாத்திரமன்றி இதில் கைவைக்கும் உரிமை இந்தியா மற்றும் இலங்கைக்கு கூட கிடையாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளா.

இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லை என்று அரசாங்கம் சொல்லி வருகின்றது. அவ்வாறு சிறுபான்மை இனத்தினர் இல்லை என்ற உணர்வை அரசாங்கமே தனது நடவடிக்கைகள் மூலம் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நாட்டில் 20 வருடங்களாகவே ஜனநாயகம் இல்லை. காசு கொடுத்து அனைவரையும் அழைத்துவந்து 2/3 பெரும்பான்மையக் காட்டி ஆட்சி நடத்துப்படுகின்றது.

No comments