Breaking News

அமைச்சரவையில் ஹக்கீம் சீற்றம்:13 தொடர்பில் தெரிவுக்குழு அமைக்க தீர்மானம்

rauff hakeemமாகாண  சபைகள் சுயாதீனமாக இணைவதை தடுக்கும் விதமாக அமைச்சரவை திருத்தம்

13 ஆவது திருத்தச் சட்டத்தை திருத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பெரும் கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முயற்சிப்பதற்கு    இதன்போது கடும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ள மு.கா.வின் தலைவர்  அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது  எதிர்ப்பினையும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் , மாகாண சபைகளில் கைவைக்கும் விதமாக கொண்டுவரப்படவுள்ள திருத்தங்களுக்கு ஆதரவளிக்க முடியாது என ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்னா , டியூ குணசேகர ஆகியோரும் 13 ஆவது திருத்தத்தை திருத்துவது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதனால் அமைச்சரவையில் கடும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

எனினும் இறுதியில் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தின் இரு திருத்தங்களில், ஒன்றை  திருத்துவது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மாகாண  சபைகள் சுயாதீனமாக ஒன்றிணைவதற்குள்ள அங்கீகாரத்தையே  இன்றைய அமைச்சரவை திருத்த முடிவு செய்துள்ளது.

எனினும் ஏனைய திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர்கள் பலர் தொடர்ந்தும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதை அடுத்து 13 ஆவது திருத்தச்சட்டத்தில் ஏனைய திருத்தங்களை மேற்கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவை நாடுவது என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதன் படி இது தொடர்பிலான தெரிவுக்குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாயன்று பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்படுமென இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பலரும் பலவிதமான கருத்துக்களை அமைச்சரவையில் முன்வைத்த போதும் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒரு விடயத்தை திருத்துவது என அமைச்சரவை முடிவு செய்துவிட்டதாகவும் ஏனையதிருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

13 ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஹக்கீம்ஆதரவளித்தாரா  என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இதன்போது கேள்வி எழுப்பப் பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்,

ஹக்கீம் சில சமயங்களில் அவரது கருத்துக்களை முன்வைத்த்தும் சிலசந்தர்ப்பங்களில் மெளனமாக இருந்தும் இன்னும் சில சந்தர்ப்பங்களில் தலைவர் அஷ்ரப்பின் கருத்துக்களை முன்வைத்ததாகவும் தெரிவித்தார்.

எனினும் மாகாண  சபைகள் சுயாதீனமாக இணைவதனை திருத்த அமைச்சரவை முடிவு செய்துள்ள நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தை  திருத்த 19 ஆவது திருத்தம் ஒன்றை கொண்டுவர அரசு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(VD)

No comments