Breaking News

அமெரிக்கா – இலங்கை இடையில் இராஜதந்திர முறுகல்! சண்டேரைம்ஸ்

01 ஈரான் மீதான தடைகளை இலங்கை மீறுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் சண்டே ரைம்ஸ் வார பத்திரிகைஇன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இலங்கையின் அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பிரச்சினை எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா தகவல் பரிமாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச, இலங்கை போன்ற சிறிய நாடுகள் மீது அமெரிக்கா இத்தகைய குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக குறிப்பிட்டதுடன், இந்தியாவும் சீனாவும் இதனை செய்தால் அமெரிக்கா எந்த குற்றச்சாட்டையும் சுமத்தாது என்றும் விசனம் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டை பகிரங்கமாக நிராகரிக்கும்படியும் மகிந்த ராஜபக்ச அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்திருந்த போதிலும், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடவில்லை.

கடந்த 2012ம் ஜுன் மாதத்துக்குப் பின்னர் ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்படவில்லை என்று அனுர பிரியதர்சன யாப்பா கூறிய போதிலும், அமெரிக்காவின் எதிர்ப்புத் தொடர்பாகவோ, இலங்கை அமைச்சரவையில் இடம்பெற்ற கலந்துரையாடல் குறித்தோ அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இழுபறி ஏற்பட்டுள்ள நிலையிலேயே, திருகோணமலையில் அமெரிக்க செயற்பாட்டு தகவல் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் செய்து கொண்ட உடன்பாடு சர்ச்சையைக் கிளப்பியுள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

No comments