தீக்குளித்து தற்கொலை செய்த தேரரின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!
பௌத்த தர்மத்திற்காகவும், நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தீக்குளித்து உயிர்துறந்த போவத்தகே இந்திர ரத்ன தேரரின் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பௌத்த அமைப்புகள் சில கண்டியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டி நகர மத்தியிலுள்ள ஜோர்ஜ் ஈ.டி. சில்வா கூரைப் பூங்காவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கண்டி பௌத்த ஒன்றிய அமைப்பு, பொது பலசேனா உட்பட பல்வேறு பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
- நாட்டில் பௌத்த தர்மத்திற்கு ஏற்றவாறு பௌத்த அரசியல் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்,
- பலவந்தமாக மதமாற்றம் செய்கின்றவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,
- சர்வமத, சர்வ இன அமைப்புகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும்,
- மாடுகள் கொல்லப்படுவதற்கு முற்றாக தடை விதித்தல் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன்வைத்தனர்.
நாட்டிற்காகவும், பௌத்த மக்களுக்காகவும் உயிர் தியாகம் புரிந்த போவத்தகே இந்திர ரத்ன தேரரை நினைவுகூறுவதுடன், அவரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். அதன் பின்னர், கண்டி நகரின் வீதிகள் ஊடாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் வர்த்தக நிலையங்கள், கட்டடங்கள் மற்றும் வீடுகளில் இன்று 28 ஆம் திகதி மஞ்சள்நிற கொடியைப் பறக்கவிடுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
No comments